Sunday 5 August 2018

வைகையில் கை வைக்கலாமா?

வைகையில் கை வைக்கலாமா? கவிஞர் அ.முத்துவேலன் ‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்றும், ‘ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால உல கூட்டும் வையை’ என்றும் வைகை ஆற்றின் பெருமை பற்றி தமிழ் இலக்கியத்தில் வெகுவாக புகழப்பட்டு உள்ளது. வைகை ஆற்றை மையப்படுத்தியே மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழா நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதலின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுவர். ஒரு நதி உற்பத்தித்தளத்திலிருந்து ஓடிவந்து ஒரு குறிப்பிட்ட நகரில் மட்டும் பாயிரம் பாடி முடித்திருக்கிறது என்றால் அது பரிபாடல் காட்டும் கூடல்நகரமே. அதற்கு முன்னதாக வைகை எப்படி இருக்கிறதாம்? வெண்ணிறத்தை ஊடுருவிய செந்நிற மணற்குன்றுகள். குறிஞ்சி நிலத்தில் ஊடறுத்து நிற்கும் நீருடை சுரம் போன்று வைகையிலும் தெள்ளிய நீராய் ஓடி குடித்திட தேனாய் இனித்திருக்கும். காளையர்கள் புதைமணலில் ஓடிவிளையாட, கன்னியர்கள் மணல் விளையாட்டுக்களில் மனமகிழ்ந்து மயங்கிக் கிடப்பர். கேட்கக், கேட்க இனித்திடும் கியா, கியா தாம்பாளம் எனும் ஆட்டம். முண்டியடித்து ஆடும் நுட்பமான விளையாட்டு. மணல் வீடுகள் கட்டி ஆடும் மங்கள விளையாட்டும் கோபுரங்கட்டி கும்பிட்டு விளையாடும் குதூகலமும் சேகரித்த சிறு வெண் சங்குகள் கொண்டு ஆடும் தாய ஆட்டமும் தமிழர்களின் தடயங்களாய் வைகையில் பதிந்து நிற்கும். அந்தி சாயும் வேளை அன்புக்காதலர்களுக்கான நேரம். தலைவன் கழுத்துமாலை வாடிக்கசங்கியிருந்தால் வந்தது வினை. தலைவி தகித்துப் போவாள். காதலன் கள்ளம் புரிந்திருக்கிறான். பரத்தமை கொண்ட பாவியவன் என ஊடல் கொள்வாள். சிவபக்தனான செம்மாந்த தலைவன் தாம் எந்த பரத்தையிடமும் சென்று இன்புறவில்லை என்பதை உறுதி செய்யும் பாங்கில் மணலில் அடித்து சத்தியம் புரிவான். திருநீறு போன்று புனிதம் மிக்கது வைகை மணல் எனப் போற்றி அதை நெற்றியில் இட்டுக்கொள்வான். வைகை வாழ்வியல் தளத்தில் மட்டுமல்ல. ஆன்மிக தளத்திலும் அருமை, பெருமைகளைக் கொண்டிருந்தது அந்நாளில். மணலாட்டங்கள் கண்டு மகிழ்ந்த மாந்தர் இனி புனலாட்டம் காண வேண்டுமல்லவா. அதற்கான புதுப்புனல் கூறப்போகிற பண்பாட்டு கூறுபாடுகளைப் பற்றி பரிபாடல் புகட்டுவதை இனி பார்ப்போம். கோட்டை மதில்களின் மீது குளிர்கர நீரலைகள் கொட்டிமுடித்த முழக்கம் பின் கோட்டை மதில் பறைகளில் எதிரொலிக்கத் தொடங்கினவாம். துடிப்பறை அதிர்ந்து ஒலித்து ஊரைக்கூட்டி புதுப்புனல் வருகையை உணர்த்துமாம். வானத்து முகில்கள் சிதைந்து வந்த பெருமழை வெள்ளம் ஊரைச்சுற்றி வளைத்து நிற்கிறது என்பதுபோல் ஓர் குரல் ஒலிக்கிறது. வைகை ஆற்றின் இருபுறமும் மலை அளவுக்கு கரைகள் உயர்ந்து சுந்தர சோலைவனங்களாய் காட்சி தர அந்தக்கரைகளோ இடியும் அளவிற்கு நுங்கும், நுரையுமாகச் செல்லும் வெள்ளநீர் பூக்களால் சேலை கட்டிக்கொண்டு சோலைகளுக்குள் புகுந்தனவாம். அப்போது நாட்டின் தலைவனை சிறப்பித்தபடி செல்கிறதாம். தென்னவனாம் மன்னவன் பாண்டியன், தன்னை எதிர்த்த பகைவர்களைத் தோற்கடித்து அவர் தம் செல்வங்களை கவர்ந்தது போல் வைகை நீர் பாய்ந்தோடியதாம். புனலாட புகுந்த பூவையர் மூலம் புதுப்புது சேதிகள் சொல்கிறது வைகை. கமழும் சந்தன மார்புடனும், மாலையுடனும் வந்து நீராடும் காளையரிடமிருந்து இவற்றை வைகைக் கவர்ந்து சென்றதுடன் கன்னியர் தம் கைவளைகள், ஆழிகள், தொய்யசந்தங்களை அணிந்த துகில்கள், அழகிய மேகலைகள் என அனைத்தையும் வைகை வாரிச்சுருட்டியெடுத்து செல்கிறதாம். இத்தகைய புனல் ஆட்டத்திற்காக மதுரை நகர மாந்தர் புறப்பட்டு வருகின்ற கோலம் இருக்கின்றதே அதுவொரு திருவிழாதான். மதுரை நகர மாந்தர் குதிரைகள் மீதேறி வருகின்றனராம். ஒற்றைக் குதிரை, இரட்டைக்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் பல்வேறு செல்வ மாந்தர் வர ஒற்றை மாட்டுவண்டி கட்டி, இரட்டை மாட்டு வண்டி கட்டி ஏராளமானோர் வைகை ஆற்றங்கரையில் வந்து குவிந்தனராம். யானைகள் மீதேறியும் கூட புதுப்புனலாட வருகின்றனராம். புதுப்புனல் ஆட்ட திருவிழாவுக்கு வந்த தலைவர்களில் நொந்த சிலரும் உள்ளனர். ஆற்றில் ஆண்களும், பெண்களும் நீராட இவர்களிடையே பரத்தையர் பலர் தம் எழில்காட்டி நீராட அதைக் கண்ணுற்ற தலைவன் பட்டபாடோ பெரும்பாடாகியது. அவனது எதார்த்த பார்வையை சந்தேகிக்கும் தலைவி தலைவனோடு கடுமையாக ஊடல் கொள்கிறாள். அவனே பாவமன்னிப்பு கோருவது போல பணிவன்புடன் பேசியும் அவள் மசிய மறுக்கிறாள். முடிவாக தன் தலைவனை ஏற்கிறாள். ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர்பண்பை அவனுக்கு உணர்த்தி உள்ளத்து அறத்தை இல்லறத்துள் இழுத்துச்சென்று இன்புறும் இணையற்ற தமிழ் பண்பாட்டை எடுத்து முன்வைக்க வைகை வரலாறு விரிகிறது. ஆடிப்பெருக்கன்று வைகை நதிக்கரையோரம் ஆண்களும், பெண்களும் கூடிநின்று பூஜை செய்து நீராடுவர். இன்று வைகை நதி தண்ணீரின்றி பாலை வனமாய் காட்சி தருவது துரதிர்ஷ்டவசமே. ‘வாடற்க வையை’ என வாழ்த்தி வைகை ஆற்றை வாழவைத்து தன்னையும், வாழவைத்து வளப்படுத்தி வரலாறு படைத்த பண்டைத் தமிழனின் பண்பாடு தொலைந்துவிட்டது. மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்துவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன. மணல் திட்டுகள் திருடப்படும்போது நிலத்தடிநீர் மட்டம் குறைகிறது. ஆற்றோரங்களில் இருக்கும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்றுநீர், மணல் இல்லாமல் கற்களிலும் பாறைகளிலும் பயணிக்கும் அவலநிலை உள்ளது. ஆற்றின் போக்கு மாறி ஆற்றோர விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீரின்றி பாழ் நிலங்களாகிவிட்டன. நாணல் வளர்ந்த இடமெல்லாம் நாசப்படுத்தப்பட்டு விட்டன. ஆற்றைச் சுரண்டி அடுக்கு மனை கட்டப்பட்டுவிட்டது. ஊற்று ஒழிக்கப்பட்டுவிட்டது. வைகையில் கைவைக்கும் போக்கு மாற்றப்பட வேண்டும். தண்ணீரின்றி வறண்ட வாழ்வை தொட்டுவிட்ட இன்றைய தமிழ் சமூக வாழ்வில் என்று வைகை மீட்டுருவாக்கம் பெறும்? அந்த நாளை எதிர்பார்க்கும் இதயங்கள் கோடி, கோடி எனலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts