Thursday 16 August 2018

சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம்

சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம் குமரி அனந்தன், தலைவர், காந்தி பேரவை நாட்டினுடைய சுதந்திரப் போர் தீவிரமாக நடந்துகொண்டு இருந்தது. அந்த சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு, தேசத்தின் தென்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விடுதலை வேட்கையை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார். அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வந்தார். அந்த சமஸ்தான ராஜா, மாலையீடு என்ற இடத்தில் நேருவின் காரை தடுத்து நிறுத்த சொன்னார். அவரின் உத்தரவுக்கு இணங்கி நேருவின் காரை காவலர்கள் நிறுத்தினர். அப்போது ராஜா, ‘உங்கள் கார் 60 மைல் வேகத்தில் சென்றுவிட வேண்டும். நீங்கள் மெதுவாக சென்றால், உங்கள் முகத்தை பார்த்து உணர்ச்சிவசப்படும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்புவார்கள். எனவே உங்கள் கார் வேகமாக சென்றுவிட வேண்டும்’ என்றார். உடனே நேரு, ‘நான் சரி அப்படியே செய்கிறேன்’ என்றார். சுற்றி இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே வியப்பு, நேருவா இப்படி சொன்னார்? என்று. அதன் பிறகு, தன்னை தடுத்து நிறுத்திய காவலர்களிடம் ‘என் காரை 60 மைல் வேகத்தில் அனுப்பிவிடுகிறேன். இந்த சுண்டக்காய் சமஸ்தானத்தை நான் நடந்தே கடப்பேன்’ என்றார். அந்த நேரு பெருமகன் தான் சுதந்திரம் பெற்றப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி இரவை கடந்து 15-ந்தேதி விடிந்துகொண்டு இருந்தது. டெல்லி செங்கோட்டையில் ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் இசை முழங்க, நேரு பெருமகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்ததன் மூலம், ‘நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று உலகுக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவித்தார். அன்றில் இருந்து இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவருக்கும், உரிய வயது வந்ததும் வாக்களிப்பதற்கான உரிமை கிடைத்தது. தேர்தலில் நிற்பதற்கும் உரிமை கிடைத்தது. ஆனால் வெள்ளையர்கள் நம்மை ஆண்டபோது இங்கு இருந்த நிலைமை என்ன? நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரத்தின் அருமை புரியும். ஒரு முறை சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் நேரு தேசிய கொடி ஏற்றிவைத்தார். பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது ஒரு இளைஞன் ஓடிவந்து குறுக்கே நின்று அவருடைய காரை மறித்தார். நேரு என்னவென்று அவரிடம் கேட்டார். ‘சுதந்திரம் பெற்று நீங்கள் கொடி ஏற்றுகிறீர்கள். இந்த சுதந்திர நாடு எனக்கு என்ன செய்தது?’ என்று கேட்டார். இதை கேட்டு நேரு கோபப்படவும் இல்லை. பதற்றம் அடையவும் இல்லை. மாறாக, ‘இந்த நாட்டின் பிரதம மந்திரியின் காரையே மறித்து கேள்வி கேட்கிற உரிமையை உனக்கு தந்திருக்கிறது பார். அதுதான் சுதந்திரம்’ என்றார். இந்த சுதந்திரத்தை நாம் பேணி காக்க வேண்டுமல்லவா? ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. வெள்ளைக்காரன் ஆட்சியின்போது ஒரு ரூபாய் செலவு செய்து உற்பத்தி செய்கிற உப்பை 27 ரூபாய்க்கு விற்க உத்தரவிடப்பட்டது. இதில் 26 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி. இதை கண்டித்த மகாத்மா காந்தி தண்டியாத்திரை சென்று, கடற்கரையில் வெயிலில் காய்ந்து கிடந்த உப்பை அள்ளி எடுத்தார். அப்போது காந்தி கூறும்போது, ‘ஆங்கிலேயே அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். அன்று காந்தி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் இன்று நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமாக உப்பை எடுத்து உணவில் சேர்த்து உண்டு மகிழ்கிறோம். காந்திமகான் மேற்கொண்ட தண்டி யாத்திரையின் 75-வது ஆண்டை நினைவுகூரும் விதத்தில் பவள விழாவில் காந்தியின் பேரன் தலைமையில் காந்தி நடந்த பாதை முழுவதும் யாத்திரை நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டு நடந்தேன். அப்போது எங்களுடன் தண்டி யாத்திரையின் போது பங்கேற்ற 90 வயது முதியவரும் வந்தார். அவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி, ‘இந்த இடத்தில் 2 இடங்களில் சமையல் நடந்தது. தூரத்தில் ஒரு இடத்திலும் சமையல் நடந்தது. இதை கவனித்த காந்தி, ஏன் தனித்தனி இடங்களில் சமையல் நடைபெறுகிறது என்று கேட்டார். அதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிடுவதற்காக அங்கு சமையல் நடந்தது என்று கூறினர். இதை கேட்ட காந்தி கடும் கோபத்துடன், ஒன்று அவர்களை இங்கு வந்து சாப்பிட சொல்லுங்கள். இல்லாவிட்டால், நான் அங்கே சென்று சாப்பிடுகிறேன் என்று கூறினார்’ என்று அவர் குறிப்பிட்டபோது மனம் நெகிழ்ந்தோம். “நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்தோம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்ற பாரதி கண்ட கனவு நனவாக ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை நிலை நாட்டி சுதந்திரத்தின் மாண்பினைக் காப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts