Sunday 5 August 2018

தமிழர் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள்

தமிழர் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள் முனைவர் வா.மு.சே.ஆண்டவர், தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை தமிழில் நடுகற்கள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகால வரலாற்றினை உடையவை. நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் என வழங்கப்பெறும் நடுகற்கள் போரில் தன் உயிர் துறந்து தாய் மண்ணுக்காக செய்யும் உயிர் தியாகத்திற்கான அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன. தென்னிந்தியாவில்தான் நடுகற்கள் பெருமளவில் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடுகற்கள் வரலாற்றுப் பெருமையும் தொன்மையும் உடையன. நடுகற்களில் பழங்கால சமூகநிலை, பண்பாடு, மொழி, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உயிர்த்தியாகம், வழிபாடு போன்ற உட்கூறுகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் நீர்ப்படை கால்கோள் என நடுகற்கள் வழிபடும் தன்மைக்கு மாறி பத்தினி நிலைக்கு உயர்ந்ததைக் கண்ணகி வரலாறு வழி காணமுடிகிறது. தமிழ்நாட்டில் நடுகல் வழியாக பல்வேறு வகையான தொல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக போர்கள் நிகழ்ந்தபோது ஏற்படும் உயிரிழப்புகளே நடுகற்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தமிழின் வீரத்தினை விளக்கும் புறத்திணை பசுக்கூட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆ என்றால் பசு. நிரை என்றால் கூட்டம். ஆநிரை கவர்தல் தான் புறத்திணையின் அடிப்படை. வெட்சி என்பது பசுக் கூட்டங்களை கவர்வது. கரந்தை என்பது கவர்ந்த பசுக்கூட்டங்களை மீட்பது. கால்நடை செல்வங்களாகிய மாடு, ஆடு போன்றவையே அக்காலத்தில் செல்வங்களாக மதிக்கப்பட்டன. அரசனின் பெருஞ்செல்வமான ஆநிரைகளை குறித்து போரிடும்போது அதில் பங்கு பெற்று உயிர்த்துறந்த வீரனுக்கு நடுகல் எடுத்து அவன் வீரத்தினை போற்றி அவனை இறை நிலைக்கு உயர்த்துவது பழந்தமிழரின் உயர்ந்த வீரப்பண்பாடு. தமிழ் இலக்கியங்கள் சொல்லும் பல உயிர்த்தியாகங்கள் நடுகற்களாக நமக்கு காணக்கிடைக்கின்றன. திருக்குறளில் (குறள் எண் 400-ல்) மாடு என்ற சொல் செல்வம் என்று சுட்டப்படுகிறது. பசு, எருமை, ஆடு ஆகிய மூன்று விலங்குகளைக் குறிக்க தொறு என்ற சொல்லை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். ஆநிரைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மட்டும் நடுகல் எழுப்பப்படுவதில்லை. ஊரினை அழிக்க வந்தவர்களிடமிருந்து ஊரைக் காப்பாற்றியவர்களுக்கும், பெண்கள் மானம் காத்தவர்களுக்கும், கொடிய விலங்குகளுடன் போரிட்டு உயிர் துறந்தவர்களுக்கும் நடுகற்கள் எழுப்பப்படுகின்றன. நன்றி உணர்வுடன் வீட்டைப் பாதுகாத்த நாய்க்கும் கடவுள் நிலை தந்து நாய்ப்படம் பொறிக்கப்பட்ட நடுகற்களும், உயர்ந்த தமிழ் பண்பை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன. மேலும் நடுகற்கள் மக்களால் வணங்கப்பட்டு இறை நிலைக்கு உயர்ந்து ஊர்த் தெய்வங்களாக உருமாறுகின்றன. திருவண்ணாமலையில் வேடியப்பன் வழிபாடு இதற்கு மிகச்சிறந்த சான்று. கிராமப்புறத்தை ஒட்டிய பழந்தெய்வங்கள் நடுகல் ஒட்டியே தோன்றியவை. பயிர்த் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது நீர். அந்நீரை தேக்கி வைக்க உதவும் ஏரி உடைந்தபோது அதனை பாதுகாப்பதற்காக உயிரை நீத்து சமுதாயக் கடமையாற்றியவருக்கும் நடுகற்கள் உண்டு. நடுகற்களில் பொறிக்கப்படும் செய்திகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழரின் வீரப்பண்பாடான ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலின் போது உயிர்நீத்த வீரனுக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைத்த கல்வெட்டு, ‘கோவுரிச் சங்கள் கருவந்துறையில் எருது விளையாடி பட்டாள் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு’ என்ற நடுகல்லில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சங்கன் மகனுக்கான கல்வெட்டு தமிழரின் வீரத்தியாகத்தினை வெளிப்படுத்தும் நடுகல்லாகும். வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் நடுகற்கள் நிறையக் கிடைக்கின்றன. ஜவ்வாது மலைக்கருகில் இருக்கும் செங்கம் நடுகற்கள் மிகமுக்கியமான வரலாற்றினை உடையன. நடுகற்கள் பிற்காலங்களில் கோவில்களாகவும், தூண்களாகவும், வழிபாட்டுச் சின்னங்களாகவும், சுமைதாங்கி கற்களாகவும் உருமாற்றம் பெறுகின்றன. நடுகற்கள் வீரன் குலதெய்வமாக மாற்றப்பட்டு நாட்டார் தெய்வநிலைக்கு உயர்கின்றன. தமிழ் மக்களின் அறிவு, ஆற்றல், பண்பு, கொடை, வீரசுவர்க்கம் என பல பண்பாட்டுக் கூறுகள் நடுகற்களின் வழி பழந்தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் கூறுகின்றன.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts