மடியும் முன்பு மாநில மரத்தை மீட்போம்
வி.களத்தூர் எம்.பாரூக்
பனை மரம் நம் தமிழகத்தின் அடையாளம். தமிழர்களின் அடையாளம்.
மராட்டிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் மகாபல் என்பவர் தனது ஆராய்ச்சியின் மூலம் ‘பனைமரங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும்’ என்று உலகத்திற்கு அறிவித்திருக்கின்றார்.
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டது பனைமரம். தமிழ்மொழியின் எழுத்துக்கள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பல சங்க இலக்கியங்கள் கிடைக்கப்பெற்றது அந்த ஓலைச் சுவடிகளில்தான். அந்த காலகட்டங்களில் செய்தி பரிமாற்றங்கள் பனை ஓலையின் மூலம் தான் நடைபெற்று இருக்கின்றன.
கடுமையான புயலைக்கூட தாங்கி நிற்கக்கூடிய வீடுகளை நம் முன்னோர்கள் பனை ஓலைகளில்தான் அமைத்திருந்தனர். அவ்வளவு சிறப்புமிக்கது பனை மரம். பல வகையான பயன்களை தருவதால் பனையை கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் என்று தொன்மங்கள் குறிப்பிடும் ‘கற்பகத்தரு’வுடன் ஒப்பிடுகின்றனர். பனை மரங்களில் 34 வகைகள் இருப்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல்.
பனைமரம் பல்வேறு பயன்களை மனிதர்களுக்கு வழங்குகிறது. இதில் பதநீர் முதன்மையானது. இதே போல பனம்பழம், நுங்கு, பனங்கிழங்கு, கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, தூரிகைகள், பனையோலைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், மரப் பொருட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஒரு பனைமரத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு மட்டும் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை பெற முடியும். மேலும் 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றை அந்த ஒரு பனைமரத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
பனை மரம் மிக நீளமான உறுதியான சல்லிவேர் தொகுப்பை பெற்று இருப்பதால் மண் அரிப்பை தடுக்கும் ஆற்றலை அது பெற்றிருக்கிறது. இயற்கையின் அரணாக விளங்குவதால்தான் அதனை நம் முன்னோர்கள் வயல் வரப்புகளிலும், குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும், கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளிலும் நட்டு வளர்த்தனர். நிலங்களின் எல்லைகளை குறிக்க வயல்வெளிகளில், தோட்டங்களில் அதனை பயன்படுத்தி இருப்பதை இப்போதும் நாம் பார்க்கலாம்.
‘10.2 கோடி பனைமரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனைமரங்கள் உள்ளன’ என்று கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் கணக்கெடுத்து அறிவித்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி பனைமரங்கள் இருந்தன என்பதை அறிகின்றபோது எவ்வளவு பெரிய பாதிப்பை பனைமரங்கள் சந்தித்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம். இது நமக்கு எத்தனை இழப்பு என்றும் அறிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் 5 கோடி பனைமரங்கள் இருக்கிறது என்ற நிலையும் இன்றைக்கு மாறி இருக்கலாம். ஏனென்றால், பனை மர அழிப்பு மிக மும்முரமாக, தீவிரமாக நடந்து வருகிறது. இது வேதனையின் உச்சம்.
முன்பெல்லாம் பனையோலை பட்டை தண்ணீர் அருந்துவதற்கு, சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இறைச்சி, கருவாடு போன்ற உணவு பொருட்களை பொட்டலம் போட்டு கொடுக்க பனையோலைகள் உபயோகிக்கப்பட்டன. இந்த நிலை தற்போது நீடித்தால் பெரும்பாலான விஷயங்களுக்கு நாம் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இருப்போம்.
இப்படி பனையின் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை மக்கள் பயன்படுத்திய வரையில் பனைமரம் செழிப்பாக இருந்தது. தற்போது பனையின் பயன்களை மறந்துபோனதும், அரசின் தடை ஆணைகளும் பனைத்தொழிலை நிலைகுலைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மூலம் மதுபானம் பெருக்கெடுத்து ஓடும் தமிழகத்தில் இயற்கையான உடலிற்கு வலிமை தரும் கள் குடிப்பதற்கு தடை என்பது வினோதமாக இருக்கிறது. அளவோடு கள் பருகுவது உடலுக்கு நலமே.
கள் இறக்குவதற்கு அனுமதி இருந்தவரை, அதனால் வருமானம் கிடைத்தது. இதனால் பனை மரங்களை காப்பாற்றி வந்தனர் விவசாயிகள். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால், செங்கல் சூளைக்கு எரிபொருளுக்காக பனைமரம் வெட்டப்படும் துயரமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
விவசாயம், கைத்தறி ஆகியவற்றிக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பினை கொண்ட தொழிலாக பனைத்தொழில் விளங்கியது. தற்போது போதிய வருமானம் இல்லாததால் பனை ஏறும் தொழில் தொய்வடைந்து இருக்கிறது. பனைத் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் மாற்றுத் தொழிலுக்கு மாறிவிட்டனர். இருக்கும் கொஞ்சநஞ்ச பேரும் போதிய வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கச் செய்தால் பனைமரமும், பனைத்தொழிலும் சிறந்தோங்க வழி கிடைக்கும்.
‘இது தான் மாநில மரம்’ என்று நம் பிள்ளைகளுக்கு புத்தகத்தில் மட்டுமே பனை மரத்தின் படத்தை காட்டும் நிலையை நாம் ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கு பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை நமது அன்றாட பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யவேண்டும். இருக்கும் பனைகளை காப்பதோடு, பனைகளை பெருக்கவும் முன்வர வேண்டும். அதுவே முற்றிலும் மடியும் முன்பு நம் தமிழ் மரமான பனை மரத்தை காக்க துணை நிற்கும்.
Monday, 16 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment