புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வேண்டும்.
வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி.
ஜூலை 23-ந் தேதி என்றால், புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான பாலகங்காதர திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த நாள் என்பது தான் நினைவுக்கு வரும். இந்த இருவரின் பிறந்த நாளிலும் நாம் சிரம் தாழ்த்தி அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று முன்னிலை பெற்றுள்ள கதாநாயகர்கள் பட்டியலில் இவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாபெரும் தேச பக்தர்களிடம் இருந்து உத்வேகத்தை பெற்றுக்கொள்வதோடு இந்தியர்கள் நின்றுவிடக்கூடாது. இளைஞர்கள் அனைவரிடமும் தேசியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றையும் விதைக்க வேண்டும்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக பாலகங்காதர திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரை இளைஞர்கள் தங்களின் முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனது பேச்சு, எழுத்து, செயல்பாடு ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியவர் பாலகங்காதர திலகர். ஒற்றுமையின்மையும், தேசிய பெருமையை உணராமல் போனதும்தான் ஆங்கிலேயரின் அதிகாரங்கள் நம்மை வசப்படுத்தியதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்பதை திலகர் உறுதியாக நம்பினார்.
இந்திய சுதந்திரத்துக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மிகச்சிறந்த தியாகத்தைச் செய்தவராக சந்திரசேகர் ஆசாத் அடையாளம் காணப்படுகிறார். நமது சுதந்திர வரலாற்றை திரும்பிப் பார்த்தோம் என்றால், சுதந்திரத்தை அடைவதற்காக பழம்பெரும் தியாகிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தனர் என்பதை காணலாம்.
வேறுபாடான கருத்துகள் இருந்தாலும் பொதுவாக அவர்களுக்குள் காணப்பட்ட ஒன்று, தேசத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு என்பதுதான். இதுதான் சுதந்திர இந்தியா உதிப்பதற்கு காரணமாக இருந்தது. லட்சக்கணக்கான சுயநலமற்ற இந்தியர்கள், சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றனர். சந்திரசேகர் ஆசாத் போன்ற தைரியம் மிகுந்த தலைவர்களும், தேசியவாதியான பாலகங்காதர திலகரும் அவர்களை வழிநடத்திச் சென்றனர்.
அசைக்க முடியாத தைரியத்துக்கு எடுத்துக்காட்டாக ஆசாத் விளங்குகிறார். ‘டீன் ஏஜ்’ பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர் அவர். கைதாகி பெனாரஸ் கோர்ட்டில் நிறுத்தப்பட்டபோது, ‘எனது பெயர் ஆசாத் (விடுதலை), தந்தை பெயர் சுதந்திரா, முகவரி சிறை’ என்று மாஜிஸ்திரேட்டிடம் தைரியமாக கூறியவர் ஆசாத். இதற்குத் தண்டனையாக அவருக்கு 15 கசையடிகள் கிடைத்தன.
தாய்நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவர், வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை. புரட்சிக்காரராக மாறி, ஆசாத் மிக ஒழுக்கமான வாழ்க்கைக்கு உட்பட்டார். தனது வாழ்நாளின் இறுதி வரை அவரது கொள்கையைவிட்டு அவர் விலகவில்லை.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்று முழங்கியவர் பாலகங்காதர திலகர். அவர் ஒரு தத்துவ மேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். வரதட்சணை கொடுமையையும், பெண்ணுக்கு 16 வயதுக்கு முன்பு திருமணம் செய்வதையும் கடுமையாக எதிர்த்தார். மதுவிலக்கை ஆதரித்தார்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்த பிறகும், வறுமை, கல்வி அறிவின்மை, குடிநீர்-மின்சார தட்டுப்பாடு, வீடற்ற நிலை, சுகாதாரமின்மை, பாலினப்பாகுபாடு, நகர-ஊரக வேற்றுமை ஆகியவை இன்னும் பிரச்சினையாக நீடிப்பது மிகவும் வலிதரக்கூடிய உண்மையாகும். இவை மிகச்சீக்கிரமாக ஒழிக்கப்படாவிட்டால் இந்தியாவின் வளர்ச்சியை அவை தடுக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதை அனுமதிக்கக்கூடாது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக ரவீந்திரநாத் தாகூர் எச்சரித்ததுபோல, சாதி, மத அடிப்படைவாதம், இனம் என்ற சுவர்கள் மூலம் மக்கள் பிரிந்திருப்பதை காணமுடிகிறது. ஊழலும், பயங்கரவாதமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான மிகப்பெரிய எதிரிகளாக உள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளரவில்லை என்ற கூற்றுக்கு இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
சமூக, மத, இன ரீதியிலான கருத்து வேறுபாடுகளால் இந்தியாவின் வளர்ச்சி பின்னால் இழுக்கப்பட அனுமதிக்க முடியாது. ஆனால் இந்தியாவின் எதிரிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். இதுபோன்ற போக்குக்கு எதிராக அனைத்து இந்தியர்களும் சாதி, மதத்தை மறந்து ஒன்றுகூட வேண்டும்.
இந்தியாவைப் பற்றிய விஷயத்தில் நாம் யாரும் அக்கறையற்ற பார்வையாளராக இருந்துவிடக்கூடாது. புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் இளைஞர்கள் முன்னிலை வகிக்கவேண்டும். உலகப் பொருளாதார வரிசையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா உருவாவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் உச்சியில் இந்தியா இருக்கும்.
வறுமை ஒழிப்பு, கல்வி அறிவு, ஊரக-நகர பாகுபாடின்மை, வேளாண்மைக்கு முன்னுரிமை, சுகாதாரம், தொழில், பாதிக்கப்பட்டோருக்கு வாழ்வு ஆகியவற்றில் நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நமது இலக்கை அடையலாம். அரசியல் முதல் கல்வி வரை பல்வேறு தளங்களில் ஊழலற்ற நிர்வாகம் அமைவதற்காக சீர்திருத்தங்களை நாம் தொடங்க வேண்டியது அவசியமாக உள்ளது. உலக அரங்கில் ஒரு அறிவு மையமாக இந்தியா உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக பாலகங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரைப் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையைப் படித்து ஊக்கம் பெறவேண்டும். இந்தியாவை நூற்றாண்டுகளாக பின்தங்கச் செய்த அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கு தங்களின் ரத்தம், வியர்வைச் சிந்திய அவர்களை மறந்துவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.
சமத்துவத்தையும், சுதந்திர காற்றையும் நாம் சுவாசிப்பதற்கு தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் அவர்கள். இந்தியாவைப் பற்றிய அவர்களின் நோக்கம் நிறைவேற நாம் பாடுபடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment