Thursday 5 July 2018

வரமான இயற்கையை வதைப்பதுதான் வளர்ச்சியா?

மலைக்குகைகளில் வசித்த ஆதிமனிதன் என்றைக்கு நிலப்பரப்பில் அடியெடுத்து வைத்தானோ, அன்றே தொடங்கியது இயற்கை அழிப்பு படலம். நமது ஒவ்வொரு வளர்ச்சிக்கு பின்னும் இந்த இயற்கை அழிப்பு தான் பிரதானமாக இருக்கிறது. விண்ணை முட்டும் கட்டிடங்கள், பரந்து விரிந்து கிடக்கும் சாலைகள், ரெயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என இவை அனைத்தும் இயற்கை அழிப்பின் அடையாளங்கள் தான். அதுமட்டுமா, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் தினம், தினம் இயற்கையை அழித்து கொண்டு இருக்கின்றன. புகை கக்கும் வாகனங்களால் காற்றில் மாசு கலக்கிறது. செல்போன் பயன்பாட்டால் கதிர்வீச்சு ஏற்படுகிறது. விளக்குகளின் ஒளி கூட புவியை சூடேற்றும் காரணியாக விளங்குகிறது. இவ்வளவு ஏன்? நாம் வசிக்கும் வீடு, உடுத்தும் ஆடை, பயன்படுத்தும் பென்சில் கூட இயற்கை அழிப்பின் அடையாள சின்னங்கள் தான். ஆனால் இயற்கை வளங்களை எல்லாம் நாசம் செய்து விட்டு, ‘நாம் வளர்ந்து விட்டோம்’ என்று மார்த்தட்டுகிறோம். இதற்காக நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். 100 அடி உயர கட்டிடத்தை 6 மாதங்களில் கட்டலாம். அதுவே 20 அடி உயர தென்னை மரம் வளர 5 ஆண்டுகள் ஆகும். பனையாக இருந்தால் 50 ஆண்டுகள் வேண்டும். கிராமங்களில் தார்சாலைகளை அமைத்து விட்டு அந்த கிராமம் வளர்ந்து விட்டதாக கூறுகிறோம். ஆனால் உண்மையில் அங்கே மண் சாலைகள் இருந்தவரை விவசாய நிலங்கள் அதிகம் இருந்தன. வளர்ச்சி என்ற போர்வையில் தார் சாலைகள் போட்டவுடன் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி இயற்கை அழிப்புக்கு அடித்தளமிடுகின்றன. அப்படியென்றால் இயற்கை அழிப்பை தவிர வளர்ச்சிக்கு வேறு வழியில்லையா? ஏன் இல்லை. ஒரு கோட்டை வரைந்து அதனை அழிக்காமல் அந்த கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் அருகில் ஒரு பெரிய கோட்டை வரைய வேண்டும். அது போல இயற்கை அழிப்பு 10 சதவீதம் என்றால், அதற்கு பதிலாக இயற்கை வளர்ப்பு 100 சதவீதம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் நமக்கு அழிப்பில் இருக்கும் ஆர்வம் வளர்ப்பில் இல்லை. உதாரணமாக நான்கு வழிச்சாலையை எடுத்து கொள்ளலாம். அந்த திட்டத்துக்கு லட்சக் கணக்கான மரங்கள் காவு கொடுக்கப்பட்டன. அதற்கு பதில் நாம் கோடிக்கணக்கான மரங்களை வளர்த்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நம்மால் முடியவில்லை. 1 மரத்தை அழித்தால் 10 மரத்தை வளர்க்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதே? நடைமுறைப்படுத்தினார்களா? ஒருவேளை நான்கு வழிச்சாலை முழுவதும் இன்று மரங்கள் வளர்ந்திருந்தால், அது தான் நமது உண்மையான வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அந்த வளர்ச்சியை அடையாமல் நாம் தோல்வி அடைந்து விட்டோம். எனவே தான் புதிய சாலை பணிகளுக்கு இயற்கை அழிப்பு என்ற கோஷம் வலுப்பெற்று நிற்கிறது. மேலை நாடுகளில் சாலை மற்றும் ஒரு கட்டிட பணிகள் தொடங்கும் போதே மரம் வளர்க்க தொடங்கி விடுவார்கள். அந்த பணிகள் முடியும் போதே, மரங்கள் வளர்ந்து நிற்கும். அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீர் நிலைகள் அழிக்கப்படுவதில்லை. லண்டன் நகரின் தேம்ஸ் நதி இன்னும் சீறிப்பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் கூவம் நதி கழிவு நீர் ஆறாக மாறி விட்டது. லண்டன் இயற்கையுடன் ஒத்து போய் அதிவேக வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஆனால் சென்னை இயற்கையை சீரழித்து அதிவேகமாக அழிந்து கொண்டு இருக்கிறது. ஆற்றில் நீர் ஓடாவிட்டால் அந்த நகரங்களில் எத்தனை பெரிய வளர்ச்சி இருந்தாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீருக்கே அலைய வேண்டிய நிலை வந்துவிடும். அதுதானே சிங்கார சென்னையில் நடக்கிறது...? நம்முடைய நான்கு வழிச்சாலைகளில் மரம் வளர்க்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நீர் பற்றாக்குறை. நீர் நிலைகள் அழிப்பு காரணமாக நிலத்தடி நீர் வற்றி போய் மரம் வளர்க்க முடியவில்லை. மரம் இல்லாததால் மழை இல்லாமல் போய் விட்டது. இனியாவது விழித்து கொள்ள வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கை அழிப்பு எதிர்ப்புக்கு மட்டுமல்ல; இயற்கை வளர்ப்புக்கும் கோஷம் வலுக்க வேண்டும். பல ஊர்களில் இளைஞர்கள் தங்களது பொருட்செலவில் கண்மாயை தூர்வாரி விட்டு, அதில் தண்ணீர் நிரம்புமா? என காத்திருக்கிறார்கள். ஆனால் கண்மாய் நிரம்புவதற்கு அதில் விழும் மழை நீர் மட்டும் போதுமா? அதற்கான வரத்து கால்வாயில் நீர் வர வேண்டாமா? ஆனால் அவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இதனை அகற்ற வேண்டிய அரசு சும்மா இருந்தால் எப்படி கண்மாயில் நீர் தேங்கும். இயற்கை அழிப்பால், வேடன் வலையில் சிக்கிய பறவைகளாகி விட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து பறந்தால் மட்டுமே உயிர் காக்க முடியும். மாறாக, வரமான இயற்கையை வதைப்பதுதான் வளர்ச்சி என்றால், அதற்கான தண்டனையை நாம் மட்டுமல்ல; நம் சந்ததியினரும் அனுபவிக்க நேரிடும். -ஆதிரன்

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts