மாதர்குல மாணிக்கம் மேரி கியூரி

மாதர்குல மாணிக்கம் மேரி கியூரி மேரி கியூரி பேராசிரியர் க.சுபத்ரா எமனுடன் போராடித் தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி என்னும் பெண்ணின் கதையைப் புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால் புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நாம் நினைவுகூரவேண்டும். உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது. மேரி கியூரி, 1903-ம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். தம் கணவர் மறைவுக்குப் பிறகு 1911-ம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இப்படி இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றதும் ஒரு வரலாற்றுச் சாதனையே. 1867-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி போலந்து நாட்டில் பிறந்தார். இவரது தந்தையாரும் தாயாரும் ஆசிரியர்கள். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மரியா ஸ்கலோட்டொவ்ஸ்கா என்பதாகும். பின்னர் மேரி எனப் பெயர்மாற்றிக்கொண்டார். பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கினார். உயர்கல்வியில் அறிவியல் படிக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை. ஆனால் இவர் பெண் என்பதால் போலந்து நாட்டில் எந்த நிறுவனமும் இவருக்கு இடமளிக்கவில்லை. இவருக்கு அறிவியலில் ஆர்வம், இவருடைய அக்கா பிரானியாவுக்கு மருத்துவம் படிக்கவேண்டும் என்று ஆசை. பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுதான் அவர்கள் படிக்கமுடியும். பிரான்சுக்குச் செல்லவேண்டும். கல்விச்செலவுக்குப் பணம் வேண்டுமே. என்ன செய்வது? தங்கை வேலைக்குச் சென்று அக்காவுக்குப் படிப்புச் செலவுக்கு அனுப்புவார் எனவும், அக்கா டாக்டர் படிப்பை முடித்தவுடன் தங்கை அறிவியல் படிக்க உதவிசெய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். குடும்ப ஒற்றுமைக்கும், சகோதர பாசத்திற்கும் இலக்கணமாக அந்தச் சகோதரிகள் விளங்கினர். பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி (டியூசன்) சொல்லிக் கொடுத்தும் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்தும் தங்கை அக்காவுக்குப் பணம் அனுப்பினார். அக்கா படிப்பு முடியும் தறுவாயிலேயே தங்கையைப் பிரான்சுக்கு அழைத்துக்கொண்டார். அவர் விரும்பிய அறிவியல் கல்வியைச் சிறப்பாகப் படித்தார். ஆராய்ச்சிக்கூடத்தில் பியாரி கியூரி என்பவருடன் இணைந்து ஆராய்ச்சிகளைச் செய்தவரையே தம் வாழ்க்கைத் துணைவராகவும் ஏற்றார். மேரி கியூரியும் அவர் கணவர் பியாரி கியூரியும் அவர்களுடைய பேராசிரியர் ஹென்றி பெக்கோரலும் இணைந்து இயற்பியல் துறையில் நிகழ்த்திய சாதனையே அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. யுரேனியத்தின் கதிரியக்கத்தைக் கண்டறிந்த பிறகு, மேரியும், பியாரியும் வேறொரு தனிமம் கண்டுபிடித்தனர். அது யுரேனியத்தைப் போல 300 மடங்கு ஆற்றல் கொண்டு விளங்கியது. தன் தாய்நாடு போலந்து என்பதால் அதனை நினைவுகூரும் வகையில் மேரி, இந்தத் தனிமத்திற்குப் ‘பொலோனியம்’ எனப் பெயரிட்டார். மேலும் கடுமையாக உழைத்தனர். வேறொரு தனிமம் கண்டுபிடித்தனர். இதற்கு ‘ரேடியம்’ எனப் பெயரிட்டனர். இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பைக் கியூரி தம்பதியினர் தங்களுக்கு உரியதாகக் காப்புரிமை பெற்றுப் பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. இதன் விளைவாக நிறைய நிறுவனங்கள் ரேடியம் தயாரித்துப் பொருளட்டின. கியூரி தம்பதியினரின் தன்னலமற்ற இந்தப் பெருந்தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது. ரேடியம் கண்டுபிடிப்புக்குப் பிறகு அதனைப் பயன்படுத்தி மருத்துவசேவை புரிவதிலும் மேரி கியூரி ஈடுபட்டார். முதல் உலகப்போரில் ரேடியத்தைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களின் புண்களை ஆற்றினார். நடமாடும் எக்ஸ்ரே வண்டிகளை இயக்கிப் போர்வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்த இடங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை பெற உதவினார். போரின் போது இருபது வண்டிகளை இவ்வாறு இயக்கிப் பலர் உயிரைக் காப்பாற்றினார். மனிதநேயம், தொண்டு ஆகியவற்றின் இலக்கணமாக விளங்கினார். 1906-ம் ஆண்டு இவருடைய கணவர் சாலைவிபத்து ஒன்றில் உயிரிழந்தார். தம் கணவர் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து நிறைய ஏழை மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிபுரிய உதவினார். அமெரிக்கா இவரை அழைத்துப் பாராட்டியது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு கிராம் ரேடியத்தை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதனையும் மேரி ரேடியம் ஆராய்ச்சி சாலைக்காகவே வழங்கினார். 1923-ம் ஆண்டு ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டதன் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டபோது பிரெஞ்சு அரசாங்கம் மேரி கியூரிக்குச் சொந்தச் செலவுக்காக ஆண்டுதோறும் 40 ஆயிரம் பிராங்குகள் வழங்கப்படும் என்றும், அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகள்களுக்கு இது வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இவருடைய மகள்களில் ஒருவராகிய ஐரீன் கியூரி தம் கணவருடன் இணைந்து செயற்கைமுறைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். இதற்காக இருவரும் வேதியியல் துறைக்குரிய நோபல் பரிசு பெற்றனர். ஒரே குடும்பத்திலேயே தாய், தந்தை, மகள், மருமகன் என நால்வரும் நோபல் பரிசு பெற்ற சாதனை மேரி கியூரி குடும்பத்தின் தனிச்சிறப்பு ஆகும். தமது ஆய்வுகளுக்காக மேரி கியூரி யுரேனியம், பொலோனியம், ரேடியம் என்னும் தனிமங்களுடன் சோதனை செய்தார். இதன்விளைவாகக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் நோய்வாய்ப்பட்டு, 1934-ம் ஆண்டு ஜூலை நான்காம் நாள் மறைந்தார். அயரா உழைப்புக்கும் நாட்டுப்பற்றுக்கும் மனிதநேயத்திற்கும் இலக்கணமாகத் திகழும் மேரி கியூரி மனித இன வரலாற்றில் என்றும் ஒளியுடன் திகழும் மாணிக்கம் என்பதில் ஐயமில்லை. நாளை (ஜூலை 4-ந்தேதி) மேரி கியூரி நினைவு தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments