Monday 16 July 2018

நம் தமிழக வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ?

நம் தமிழக வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ? எழுத்தாளர் தங்க.கலியமூர்த்தி நம் தமிழகம் பண்டை நாளில் உலக நாடுகளோடு வாணிபம், அரசியல் ஆகிய துறைகளில் தனியே தொடர்புகொண்டு இருந்தது. இதர மொழிகள் வழங்கும் நம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கே உலகில் அதிக மதிப்பு இருந்தது. அன்று, உலக நாடுகளின் மதிப்புக்குரிய இந்திய துறைமுகம் நம் காவிரிப்பூம்பட்டின துறைமுகம் ஒன்றே ஆகும். பண்டைய காலத்திலேயே தமிழ்நாட்டு வணிகர்கள் கிழக்கு நோக்கி கடல் கடந்து சென்று மத்திய அமெரிக்காவை அடைந்து அங்கு தங்கள் நாகரிகத்தை பரப்பினர் என ‘இந்து அமெரிக்கா’ என்ற நூலில் அறிஞர் சமன்லால் கூறுகிறார். தமிழ் வணிகர்கள் உலக நாடுகளுக்கு தங்கள் கண்டத்தை ஈந்து பொருள் தேடியதோடு, தமிழ் பண்பாட்டையும் தந்து தமிழகத்துக்கு புகழ் தேடினர். குறிப்பாக, மத்திய தரைக்கடல் நாடுகளுடன் தமிழகத்தின் ஒரு பகுதியான பாண்டிய நாடு வாணிபம் செய்து வந்ததாக பிளினி என்ற மிகச்சிறந்த ஆய்வாளர் கூறுகிறார். முற்காலத்தில் நாகரிக பொருட்கள் அனைத்துக்கும் உலக நாடுகள் தமிழகத்தை எதிர்பார்த்து இருந்தன. ஏலம், சந்தனம், கிராம்பு போன்ற வாசனை பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின. எகிப்து நாட்டு வணிகர்கள் நம் தமிழகம் வந்து வாசனை பொருட்களை வாங்கிக்கொண்டு ஒட்டகங்கள் மூலம் கொண்டு சென்றதாக யூதரின் சமய நூல் கூறுகிறது. அரேபிய நாட்டார், பாண்டிய நாட்டாருடன் குதிரை வாணிபம் செய்து வந்ததாக அறிகிறோம். கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க வணிகர்களுக்கு பயன்படும்படி எழுதப்பட்ட நூல்களில் தமிழகத்தில் கப்பல் வாணிப சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டின துறைமுகத்தின் மூலமே நம் நாட்டில் இருந்து உணவு பொருட்கள், வாசனை பொருட்கள், முத்து, பவளம் போன்ற மணி வகைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின. காவிரிப்பூம்பட்டின துறைமுகம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடும்போது, “நீரில் வந்த நிமிர் பரித்துறைவியும் ஈழத்துறையும் கழகத்தாக்கமும் அரியவும், பெரியவும் நெடிய ஈண்டி” என்கிறது. அதாவது, கடல் வழியே வந்த குதிரைகளும், ஈழ (இலங்கை) நாட்டில் இருந்து வந்த உணவுப் பொருட்களும், காழக (பர்மா) நாட்டில் இருந்து வந்த உணவுப் பொருட்களும், பிற அரிய, பெரிய உணவு பொருட்கள் யாவும் நிறைய குவிந்து இருந்தன என பட்டினப்பாலை பகிர்கின்றது. இவ்வாறு புகார் துறைமுகம் மூலம் நம் தமிழகம் பெற்றிருந்த உலக வாணிப சிறப்பை ஒரு தனி நூலாகவே எழுதலாம். பிற நாடுகளிடம் இருந்து நம் தமிழர்கள் பெற்ற பொருட்களை அறிந்தால் அக்கால தமிழரின் நாகரிக சிறப்பு விளங்கும். யவனர் பெரிய கப்பல்களில் தங்கம் கொண்டு வந்து நம் தமிழருக்கு தந்து அதற்கு ஈடாக தமிழகத்தில் இருந்து மிளகை வாங்கி செல்வார்களாம். அலரிக் என்பவர் ரோம் நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது, அவருக்கு மிளகு கொடுத்து சமாதானம் செய்தனராம், ரோம் நாட்டினர். அந்நாளில் தமிழ்நாட்டிற்கும், உலக நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வாணிபத்தில் மிளகுக்கு இருந்த மதிப்பு வேறு பொருட்களுக்கு இல்லை என்றால் அது மிகையாகாது. கி.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்த கொற்கை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. கொற்கையில் கிடைத்த வரலாற்று எச்சங்களை வைத்து பார்க்கும்போது, கொற்கை கி.மு. 1000-ம் தொட்டே துறைமுகமாக செயல்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே போல, பாண்டி நாட்டின் காயற்பட்டின துறைமுகம் பற்றி மார்க்கோபோலா என்ற புகழ்பெற்ற யாத்திரிகர் பின்வருமாறு எழுதியிருக்கிறார். காயற்பட்டினத்தில் சுறுசுறுப்பான வாணிபம் நடந்தது. மேற்கில் இருந்து வரும் கப்பல்கள் காயற்பட்டினத்தில் தங்காமல் போவதில்லை. சீனா மற்றும் மேலைநாடுகளின் பொருட்கள் எல்லாம் இங்கு வந்து குவியும். இங்கு சுதேசிகளின் பொருட்கள் ஏராளமாக ஏற்றுமதியாகி பொன் குவியும். ஒரு காலத்தில் அரசியல், வாணிபம், நாகரிகம், கலை ஆகிய துறைகளில் உலகில் சிறப்பு பெற்ற நாடு ரோமாபுரி. அந்த ரோமாபுரியோடு எல்லா துறைகளிலும் போட்டியிட்ட நாடு உண்டு என்றால் அது தமிழ்நாடு அன்றி வேறு எது? தமிழ்நாட்டின் வளர்ச்சியைக்கண்டு ரோமாபுரியும் பொறாமை கொண்டதாம். இந்தியா, வாணிபத்தால் ரோமாபுரியை தோற்கடிக்கிறது. இந்தியாவுக்குள் பொன்னாறு பாய்கிறது என்று கி.பி.130-ல் வாழ்ந்த தாளமி என்பவர் அங்கலாய்த்துக்கொண்டார். அவர் கூறும் இந்தியா தமிழ்நாடே. தமிழர் ரோம் சாம்ராஜியத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டதற்கு அடையாளமாக தமிழகத்தில் ரோம நாணயங்கள் அடிக்கடி அகப்படுகின்றன. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் இருந்து ரோமர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே வாணிபத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அது மட்டும் அல்ல, சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர் வாணிபத்துறையில் நன்கு பயிற்சி பெற்று இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சோழர்கள், ஜப்பானோடு வாணிபம் செய்து வந்தனர். ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் வாணிபம் தமிழகத்தில் முன்னெப்போதும் இருந்ததை விட முதன்மை பெற்று இருந்தது. சோழர்களது கப்பல்கள் நாகப்பட்டினத்தில் இருந்து சாவக தீவிற்கு நாள்தோறும் போய்க்கொண்டு இருந்தன. தமிழகத்தில் கப்பல் தொழில் மிக உயர்ந்த நிலையில் இருந்ததால்தான் தமிழர்கள் வாணிபத்தில் முதன்மை பெற்றிருந்தனர். கப்பல் துறையின் நுட்பங்களை விளக்கும் தனி நூல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை தமிழகத்துடன் வாணிபம் செய்து கொண்ட அரேபியர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருந்த ரோம் சாம்ராஜ்யத்தில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் ஆணி அடித்து பலகைகளை ஒன்று சேர்த்து கப்பல் கட்டிய காலத்திலேயே தமிழ்நாட்டினர் பலகைகளை ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியாதவாறு நெருக்கி அழகாக கட்டியிருந்தனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து தேச மன்னர் சாலமன் தமிழ்நாட்டில் இருந்து குரங்கு, மயில் முதலியவைகளை பெற்று சென்றதாக தெரிகிறது. சுருங்கக்கூறின், உணவு உள்பட எல்லா வாழ்க்கை பொருட்களுக்கும் இப்போது தமிழகம் வெளிநாடுகளில் எதிர்பார்க்கிறது அல்லவா? இதற்கும் நேர்மாறாக அன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் தமது தேவைகள் அனைத்துக்கும் நம் தமிழகத்தை எதிர்பார்த்திருந்தன. இந்தியா என்ற பெயரில் பண்டைய கால வாணிபம், அரசியல் பற்றி பல உலக அறிஞர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் தமிழகத்திற்கே உரியது ஆகும். நமது அருமை தமிழகத்தின் பெரும் சிறப்பை என்னவென்று சொல்வது! நம் தமிழகத்தின் வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ?

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts