Sunday 8 July 2018

புத்தக சுமையை குறைக்க புதிய வழி

புத்தக சுமையை குறைக்க புதிய வழி முன்பெல்லாம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மஞ்சள் பையிலும், நரம்பு பையிலும் புத்தகம், நோட்டுகள், சாப்பாட்டு பாத்திரத்தை அடுக்கிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்கள். 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏதோ கொஞ்சம் புத்தகங்களை எடுத்துச் சென்றனர். ஆனால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் நம் மாணவர்களுக்கு மிகப்பெரிய புத்தக மூட்டையை தோளில் சுமந்து கொண்டு இடுப்பு எலும்பு வளைந்தபடி கஷ்டப்பட்டு தூக்கி சுமக்கிறார்கள். ஏன் இப்படி எல்லாவற்றிலும் நவீனம் புகுந்து விளையாடும் போது பள்ளி மாணவர்கள் மட்டும் புத்தக மூட்டையை சுமந்து செல்கிறார்கள். அதற்கு ஒரு வழி பிறக்காதா? என்ற ஏக்கம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி புத்தகப் பையை சுமப்பதால் இடுப்பு எலும்பு தேய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது குழந்தைகளின் படிப்பு முக்கியம் அல்லவா? என பெற்றோர் தங்களை அமைதிப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த புத்தக சுமையை குறைக்கவும் ஒரு அரசுப்பள்ளி வழி ஏற்படுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தி காட்டிவிட்டது. அந்த பள்ளிக்கு சென்று பார்த்தால் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அந்த வழியை கையாள முடியும். புதுக்கோட்டை அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான் அது. ஆம், தங்கள் மாணவர்களுக்கு இடுப்பு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக புத்தக சுமையோடு வரும் மாணவர்களின் மனச் சுமையையும் குறைத்து இருக்கிறது அந்த பள்ளி. அதற்காக கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். இதற்காக அந்த பள்ளி என்ன செய்தது தெரியுமா? புத்தக பைகளை சுமந்து வந்த மாணவர்களைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்து அனைத்து வகுப்பறையிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அலமாரிகளை உருவாக்கினார். அதில் புத்தகம், நோட்டுகளோடு மாணவன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் அவனது நடவடிக்கைகள் அடங்கிய கோப்பு, அந்த கோப்பிலேயே அந்த மாணவனின் தினசரி, வாராந்திர, மாதாந்திர தேர்வு தாள்கள் அத்தனையும் வைக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பாட வகுப்புக்கும் அதற்கான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும், வீட்டுக்கு செல்லும் போது வீட்டுப் பாடம், அடுத்த நாள் தேர்வுக்கான நோட்டுப் புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். மற்றவை மாணவர்களின் அலமாரியில் பாதுகாக்கப்படும். இதனால் தங்களுக்கு புத்தக பை சுமக்கும் வேலையும், கவலையும் இல்லை என்று சந்தோஷப்படுகிறார்கள் அந்த பள்ளி மாணவர்கள். இந்த முறையை ஏன் அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க கூடாது? இந்த முறையை அரசாங்கமே எல்லா பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரலாமே. அப்படி கொண்டு வந்தால் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதுடன் இடுப்பு வலி, மன வலியையும் குறைக்கலாம். அதே வேளையில் கல்வித் தரம் குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். -ப.ரோ.மகிழினி

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts