சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி

சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும்புலவர், சுதந்திரப் போராட்ட தியாகி, சமய நல்லிணக்கத்தைப் போற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். ஒரே நேரத்தில் எட்டு பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறும் ஆற்றல் படைத்தவர்கள் ‘அஷ்டவதானி’ என்று அழைக்கப்படுகிறார்கள். பத்து கேள்விகளுக்கு விடை அளிப்பவர்கள் ‘தசாவதானி’ என்றும், நூறு கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் ‘சதாவதானி’ என்றும் போற்றப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சதாவதானியாக விளங்கியவர் செய்குத்தம்பி பாவலர். இவர் 1874-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பக்கீர்மீரான் சாகிப்- அமீனா. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சங்கரநாராயணர் என்ற தமிழ்ப் புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்றார். அப்போதே கருத்தாழமிக்க கவிதைகளை இயற்றியதால் இவரை ‘பாவலர்’ என்று மக்கள் அழைத்தனர். சீறாப்புராணத்துக்கு உரை எழுதி வெளியிட்டார். கோட்டாறில் பிள்ளைத்தமிழ், அழகப்பாக்கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா உள்பட பல கவிதை நூல்களையும் வசன நடை காவியங்களையும் எழுதினார். அவதானக் கலை என்பது பல்வேறு நினைவாற்றல் அல்லது கவனகம் என்பதாகும். அற்புதமான நினைவாற்றல் கொண்ட செய்குத்தம்பி பாவலர் அதில் பயிற்சி பெற்றார். ஒரே நேரத்தில் 100 பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறனைப் பெற்றார். 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி சென்னை விக்டோரியா மண்டபத்தில் செய்குத்தம்பி பாவலரின் சதாவதான நிகழ்ச்சி நடந்தது. மகாவித்துவான் ராமசாமி நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார் முதலான தமிழறிஞர்கள் முன்னிலையில் ஒரு கவிதையைப் பாடிக்கொண்டே 100 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியின்போது, அவரது முதுகில் போடப்பட்ட தானியங்கள் எவை என்பதை கூறினார். பலவகை நீர் வகைகள் தெளிக்கப்பட்டன. அவை எந்த நீர் வகை என்பதை தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள மாதம், தேதி, கிழமை ஆகியவற்றையும் சரியாக சொன்னார். பலர் கேட்கும் கேள்விகளுக்கு தனது மதிகூர்மையால் தெளிவான பதிலை அவர் அளித்தார். ‘சதாவதானி’ என்ற பட்டத்தை பெற்றார். மேலும் உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். இதனால் சென்னையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘பாவலர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அன்று முதல் செய்குத்தம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. அந்தக் காலத்தில், ராமலிங்க வள்ளலாரின் திருஅருட்பாவுக்கு சிலர் கண்டன குரல் எழுப்பினர். ‘அருட்பாவா? மருட்பாவா?’ என்ற விவாதம் தொடர்ந்தது. பாவலர், விவாதத்தில் பங்கேற்று தம் வாதத் திறமையால் அருட்பா அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதனை பாராட்டி காஞ்சீபுரத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் அவருக்கு ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஒருமுறை பாவலர் சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது புலவர் ஒருவர் அவரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்பதுதான் ஈற்றடி. அவர் இந்த ஈற்றடிக்கு எப்படி பாடல் எழுதப் போகிறார்? என்று சபையினர் திகைத்து காத்திருந்தனர். பாவலரோ, புலவரின் விஷமத்தை புரிந்துக்கொண்டு பாடலின் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ‘ராமபிரானது தம்பிகளான பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்தார். இதன் மூலம் அந்த ஈற்றடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. அவையோர் மட்டுமல்ல குறும்பு செய்ய நினைத்தவர் வெட்கி தலைகுனிந்தார். இதேபோல, தமிழறிஞர் ஒருவர் அவரை சிலேடையாக சர்வமதத்துக்கும் கடவுள் வணக்கம் பாடும்படி கூறினார். உடனே பாவலர், “சிரமாறுடையான் செழுமா வடியைத் திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகார் வரமா தவமே மலிவார் பொலிவார்” என்னும் பாடலைப்பாடினார். அதில், சிரம் ஆறுடையான்- சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், சிரமாறு உடையான்- இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, சிரம் ஆறுடையான்- ஆறு தலைகளை உடைய முருகன், சிரம் ‘ஆறு’ உடையான்- திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால், சிரம் ஆறு உடையான்- தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் என ஐம்பொருளை சிலேடையால் விளக்கினார். செய்குத்தம்பி பாவலர் தமிழ்பற்று மட்டுமல்ல; நாட்டுபற்றும் மிக்கவர். ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920-ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதராடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான சுதந்திர போராட்ட கூட்டங்கள் பாவலர் தலைமையில்தான் நடந்தன. இப்படி தமிழுக்கும், நாட்டுக்கும் அருந்தொண்டாற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர், சமூக நல்லிணக்கத்துக்காக அரும்பாடுப்பட்டார். அவர் 1950-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி காலமானார். பலரும் கலந்துகொண்ட அந்த இரங்கல் கூட்டத்துக்கு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அப்போது அவர் “ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை, சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி” என்று வருந்திப் பாடினார். சதாவதானியாக திகழ்ந்த பாவலரின் அரிய தொண்டினை போற்றும் வகையில் அவர் பிறந்து வாழ்ந்த தெரு ‘பாவலர் தெரு’ என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக் குடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இந்திய அரசும் அவரது தமிழ் சேவையை பாராட்டி சிறப்புத் தபால் தலை வெளியிட்டு பாவலருக்கு பெருமை சேர்த்தது. இன்று (ஜூலை 31-ந்தேதி) சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் பிறந்தநாள் ஆகும். -நாஞ்சில் அண்ணா

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments