மறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும்

மறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும் எழுத்தாளர் மு.முகமது யூசுப் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா? அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது. அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது. கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது. பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது? உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது? அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்? இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும்? ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும்? அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன. அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள். தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை? எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம்? விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம்? எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம். அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா? பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா? சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா? தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது. 

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments