Wednesday 27 June 2018

திருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம்

திருநங்கைகளின் சமூகநிலையை உயர்த்துவோம். முதுமுனைவர் தர்மராஜா, திருநங்கை பாதுகாப்பு மாற்று மசோதாவை எழுதியவர் ஆண், பெண் என்னும் இரு பாலினங்கள் மட்டுமே மனிதர்கள் எனச் சமூகம் நெடுநாள் கருதிவந்தது. திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தை மனிதர்களுள் ஒரு பகுதியாகவே எண்ணிப் பார்க்காமல் புறக்கணித்துவந்தனர். இதனை இருபாலின ஆதிக்கம் என்பார்கள். உலகமொழிகளுள் ஒரு மொழியின் இருபாலின ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ள அதன் படர்க்கை ஒருமைப்பெயர்களைப் பார்த்தால் போதும். ஆங்கிலத்திலும் சரி இன்னபிற மொழிகளிலும் சரி, அனைத்து மொழிகளும் இருபாலின ஆதிக்கத்தோடே இருக்கின்றன (அவன்/ அவள்). ஆனால் இந்த இருபாலின ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கிய மொழியாகத் தமிழ் மொழி (அவன், அவள், அவர்) திகழ்கிறது. ஒருவன் என ஆணையும், ஒருத்தி எனப் பெண்ணையும் குறிப்பதைப்போல ஒருவர் என இருபாலினத்துக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்திக்கொள்ளத் தமிழ் இலக்கணம் இசைவளிக்கிறது. சிவபெருமான் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தநாரீசுவரனாக வடிவெடுத்தபோது, அவன் என்பதா? அவள் என்பதா? எனக் குழம்புவதாகவும் நல்லவேளையாக அவர் என்னும் சொல் தமிழில் மட்டும் விளங்குவதால் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குமரகுருபரர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் என்னும் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டபோது அர்ச்சுனன் பிருகன்னளை என்னும் திருநங்கை வடிவம் தாங்கி விராடதேசத்திற்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் ஏனைய நாடுகள் புறக்கணித்தாலும் நம் நாட்டில் திருநங்கை என்னும் மூன்றாம் பாலினம் நம் முன்னோரால் புறக்கணிக்கப்படவில்லை. நாம்தான் நம் முன்னோரைப் பின்பற்றித் திருநங்கையருக்கு உரிய மதிப்பை வழங்கத் தவறிவிட்டோம். இப்போது ஏற்பட்டுள்ள சமூகவிழிப்புணர்வு திருநங்கைகளை மதித்து அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகை காண வாய்ப்பளித்து வருவது ஒரு மகிழ்வான செய்தி எனலாம். திருச்சி சிவாவாலும், மத்திய அரசாலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருநங்கை பாதுகாப்பு மசோதாக்களுக்கு மாற்றாக, தமிழக திருநங்கைகள் முன்வைத்த திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா-2016 திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தையும், பாலியல் விருப்பு சுதந்திரத்தையும், திருமணம் செய்யும் உரிமையையும், இடஒதுக்கீட்டையும் கேட்டு முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதாக்கள் போதிய புரிதலின்றி கிடப்பில் போடப்பட்டு ஒரு பிற்போக்கு மசோதா முன்னிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட அரசின் புரிதலல்ல, மாறாக இந்த நிராகரிப்பு பிற்போக்கு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே. ஆண், பெண் என்ற இருபாலின ஆதிக்கத்திலேயே வாழக் கற்றுக் கொடுக்கப்பட்ட இந்த சமூகம் புதிய பாலினங்களையோ, பாலியல் விருப்புகளையோ, உடலமைப்புகளையோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வடமாநிலங்களில் திருநங்கைகள் கடவுளுக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டாலும், அவர்களுக்குச் சமூக, சட்ட அங்கீகாரங்கள் தமிழகத்தில் கிடைத்த அளவு வேறெங்கும் கிடைக்கவில்லை. இந்த மத்திய அரசின் மசோதாவில் திருநங்கைகளை அலிகள் என்று கொச்சையாக அழைப்பது சமூக இழிவின் சட்ட வெளிப்பாடன்றி வேறென்ன? அது மட்டுமன்றி இந்த மசோதா இட ஒதுக்கீட்டை, சட்டரீதியான திருமணத்தையும் திருநங்கைகளின் பண்பாட்டையும் வாழ்வாதாரத்தையும் மறுக்கிறது. இப்படிப்பட்ட மசோதாவிற்கு எதிராக திருநங்கைகள் ஜனநாயகரீதியில் போராட்டங்களை நடத்தினாலும் இதர பிரிவினரின் பங்கேற்பும் கலந்துரையாடல்களும் அவர்கள் வெற்றிபெற அவசியம். பாலியல் விருப்பு என்பது சமூகக் கட்டுப்பாடு சார்ந்ததல்ல. அது அவரவர் விருப்பு சார்ந்தது என்பதை மனித சமூகம் ஒத்துக்கொள்ள தொடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்திய தண்டனைச் சட்டம் 377 மற்றும் அதன்மீதான இந்திய நீதிமன்றங்களின் பார்வை என்பது பாலியல் விருப்புச் சுதந்திரத்தின் கதவை இறுக்கிப் பூட்டுகிறது. அரசைவிட, நீதிமன்றங்களைவிட, அரசியல்வாதிகளைவிட, மதங்களைவிட மக்களே மகத்தான சக்திகள் என்பதை உலகிற்கு சொன்ன சமூகம் தமிழ்ச் சமூகம். எனவே மாற்றுப்பாலினங்களோ, ஒரே பாலியல் விருப்புகளோ பாவமுமல்ல, கடவுளின் சாபமுமல்ல. மாறாக இவ்விருப்பங்கள் இயற்கையானவை மட்டுமல்ல, காலங்காலமாக நம் சமூகத்தில் இருந்து வருபவைகளே. இப்படிப்பட்ட விருப்பங்களை சமூக அவலங்களாகச் சித்தரிப்பது இயற்கைக்கு எதிரானது. உங்கள் குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம். அவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் பாலியல் ஈர்ப்பு யாரை நோக்கியும் இருக்கலாம். அவர்களையும், அவர்களின் ஈர்ப்பையும், உணர்வுகளையும் காயப்படுத்தி விடாதீர்கள். அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். மாற்றுப்பாலினத்தவரின் அங்கீகாரத்திற்கான சமூகப்போராட்டத்திலும், சட்டப்போராட்டத்திலும் நீங்களும் ஈடுபடுங்கள். அதற்கு முன்னோட்டமாக இந்த மசோதாவை பற்றிய கலந்துரையாடல்களில் பங்கு பெறுங்கள், திருநங்கைகளோடு அவர்களின் போராட்டத்தில் உடன் நில்லுங்கள். நினைவில் வையுங்கள். அன்பென்பது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல, அது வரம்புகளற்றது. திருநங்கைகளும் மனிதர்களே. அவர்கள் நம் குடும்பத்திலும் இருக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts