Wednesday 27 June 2018

ஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை

ஊரெல்லாம் மணக்கும் தேர்மாலை கவிஞர் செங்கதிர்வேலவன், திருச்செந்தூர் மகிழ்ச்சியின் அடையாளம் மலர்கள். அவைகளின் வண்ணங்கள் வானவில் அழகு. அதன் வாசனை நேசத்தின் பிரதிபலிப்பு. மனிதன் முதல் கடவுள் வரை மலர்களை விரும்புகின்றனர். காதலர்களுக்கு ரோஜாவும், மணமானவர்களுக்கு மல்லிகையும் பிடித்தமான மலர்கள். இந்த மலர்களின் சங்கமமான ஊர் தோவாளை. இவ்வூர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை அழகு கொஞ்ச அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் மலர் முழுக்கு திருவிழா வேறு எங்கும் காண முடியாத சிறப்புமிக்க விழா ஆகும். அன்று காலை பக்தர்களின் பால்குட ஊர்வலம், இரவு தோகை மயில் மீது அமர்ந்த முருகனுக்கு வாசனை மலர்களால் அபிஷேகம் நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட கூடைகளில் எடுத்துவரும் மலர்களை முருகனுக்கு காணிக்கையாக்கி மகிழ்வார்கள். முருகன் திருமுகம் வரை சிறுகுன்றாக மலர்கள் குவிந்து வேலவன் புன்னகை திருமுகத்தை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். தோவாளை ஊரில் உள்ள தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள், வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இங்கு முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், சுடலைமாட சுவாமி கோவில், செக்கர் கிரி முருகன் கோவில் உள்பட 30-க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களின் வழிபாட்டுக்கு பூத்தோட்டம் அமைத்து மலர்கள் பெற மக்கள் முற்பட்டதன் விளைவாக இவ்வூரில் மலர் சந்தை அமையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இப்பகுதியில் விளையும் மலர்கள் வாசனை மிகுந்து காணப்பட்டதால் அவைகளை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது. இங்கு தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் மலர்களை வாங்க வருகின்றனர். மலர் சந்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தோவாளை மலர் சந்தை வியாபாரத்தில் சாதனை புரிய தொடங்கிவிட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் மலர் சந்தையில் தற்போது தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வணிகம் நடந்து வருகிறது. தோவாளையில் காலை கதிரவன் உதிக்கும் முன்பே மலர் சந்தை களை கட்ட தொடங்கிவிடும். சாதி, மத பேதமின்றி அனைத்து வீடுகளிலும் மலர் சரம், மலர் மாலை கட்டும் பணி நடைபெறும். இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் எளிதாக வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது மலர்களின் விலையை நிர்ணயம் செய்யும் வியாபார தலைமையிடமாக தோவாளை மாறிவிட்டது.

திருமணம், சடங்கு, திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் மலர்களை வாங்க கூடும் ஊர் தோவாளை தான். திருமணமான மாலைகள், திருவிழா மலர் தட்டிகள், தேர்மாலைகள் செய்வதில் தோவாளை தொழிலாளர்கள் அபார ஆற்றல் படைத்தவர்கள். இங்கு கட்டப்படும் தேர் மாலைகளை திருவிழா காலங்களில் மட்டுமே காண முடியும். மலர் சந்தை அருகில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், சுடலை ஆண்டவர் கோவில் திருவிழாக்களுக்கு அதிக அளவில் தேர்மாலைகள் கட்டப்படும். விலை மதிப்புமிக்க தேர்மாலைகள் கலை வடிவத்தில் இதயத்தை திருடும். அவைகளுக்கு புதிய வஸ்திரம் அணிவித்து கட்டிய கலைஞர்களுக்கு கணையாளி அணிவித்து கவுரவிப்பார்கள். தோவாளை தேர்மாலைக்கு தற்போது ஆர்டர்கள் குவிய தொடங்கிவிட்டன.

கேரளாவில் நடைபெறும் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாவுக்கும் தேர்மாலை வாங்கி செல்கின்றனர். தேர்மாலை 4 அடி முதல் 15 அடி விட்டம் கொண்ட மூங்கில் தட்டிகள் மீது கட்டப்படுகின்றன. இம்மாலைக்கு ஆரணி மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். இந்த மலர்கள் 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என்பதால் அதற்கு முதலிடம் வழங்கப்படுகிறது. மேலும், ரோஜா, மல்லிகை, முல்லை மலர்களை கொண்டும் தேர்மாலை கட்டப்படுகிறது. அவை ஒருநாள் மட்டுமே வாடாமல் இருக்கும். தேர்மாலைக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை மலர்களை பயன்படுத்துகின்றனர். ஒருவர் தலைமையில் 10 பேர் ஒருநாள் முழுவதும் வேலை செய்தால் தான் தேர்மாலை செய்யும் பணி முழுமை பெறும். இம்மாலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை மதிப்பு உடையதாக கட்டப்படுகின்றது.

தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகை காலங்களில் தான் அதிகமாக வணிகம் நடைபெறும். இப்பண்டிகையையொட்டி 10 நாட்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். கேரள வியாபாரிகள் மலர்களை போட்டிப் போட்டு வாங்கி செல்வார்கள். அப்போது தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை வியாபாரம் நடைபெறும். ஓணத்துக்கு முந்தைய நாள் ஒரே நாளில் ரூ.30 கோடி வரை வியாபாரம் நடக்கும். கேரளாவுக்கு வாங்கி செல்லப்படும் மலர்கள் அத்தப்பூ கோலம் போட பயன்படுத்தப்படும். கிரேந்தி, ரோஜா மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். வளர்பிறை முகூர்த்த நாட்களிலும் தோவாளை மலர் சந்தையில் வணிகம் அதிகமாக நடைபெறும். அன்று அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை வணிகம் நடக்கும். தோவாளை மலர் சந்தை மதுரைக்கு அடுத்து பெரிய மலர் சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் விளையும் மலர் தான் அதிகமாக கொண்டுவரப்படுகிறது. இவ்வூரை சேர்ந்த மாடசாமி பண்டாரம் என்பவர் மலர் தட்டி அலங்காரம் செய்வதில் புகழ் பெற்றவர். இவரது திறமையை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. மணக்கும் தோவாளைக்கு தேர்மாலை பெரும் புகழ்சேர்த்துள்ளது. தேர்வீதி வலம் வருவதால் தேர்மாலையின் மணம் ஊரெங்கும் மணக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts