உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள்! ...உருவாக்கிய நம் மாணவர்கள்
உள்ளங்கையில் ஒரு செயற்கைக்கோள்!
தாம் உருவாக்கிய செயற்கைக்கோளுடன் ஹரிகிருஷ்ணன், கிரிபிரசாத், அமர்நாத், சுதி
உள்ளங்கையில் அடங்கக்கூடிய, உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறார்கள் நமது மாணவர்கள்.
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியிருக்கும் அந்தச் செயற்கைக்கோள் உருவில் சிறியது என்றாலும், செயல்திறனில் பெரியது.
அதுபற்றி, செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர் குழுவின் தலைவரான ஹரிகிருஷ்ணன் மற்றும் கிரிபிரசாத், அமர்நாத், சுதி ஆகியோர் கூறுவதைக் கேட்போம்...
சர்வதேசப் போட்டி
‘‘நாங்கள் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் முதலாமாண்டு பயின்று வருகிறோம். எங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப, விண்ணியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். இந்நிலையில், ‘ஐடூடுல்எடு’ என்ற நிறுவனம் நடத்தும் ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ எனப்படும் சர்வதேசப் போட்டி பற்றி அறிந்தோம்.
விண்வெளியில் செலுத்தக்கூடிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான இப்போட்டிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஆதரவு அளிக்கிறது. 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும். நாங்கள் இப்போட்டிக்கு எங்களின் மாதிரித் திட்டத்தை அனுப்பிவைத்தோம். உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரம் திட்டங்களில், இறுதியாக நூறு திட்டங்களே அங்கீகரிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன. அவற்றில் எங்கள் திட்டமும் ஒன்று.
மிகச் சிறியது
எங்கள் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் நாங்கள் அத்திட்டத்தின்படி செயற்கைக்கோளை உருவாக்கி முடித்தோம். இதன் எடை வெறும் 33.39 கிராம்தான். இதற்கு முன்பு நமது ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி அதை நாசா மூலம் விண்ணில் ஏவினர். அதன் எடை 64 கிராம். ஆக, அதையும்விடச் சிறியது எங்களுடைய செயற்கைக்கோள். இது அளவில் சிறியது மட்டுமல்ல, தயாரிப்புச் செலவிலும் மிகவும் மலிவானது. ஆம், 15 ஆயிரம் ரூபாயில் நாங்கள் இதை உருவாக்கி முடித்துவிட்டோம்.
முப்பரிமாண அச்சிடல் முறையில் நைலானால் எங்கள் செயற்கைக்கோளை உருவாக்கியிருக்கிறோம். பிளாஸ்டிக் வகைகளில், நைலான் ஓரளவு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் நாங்கள் இதைப் பயன்படுத்தினோம்.
ஐ.ஐ.டி.யின் அங்கீகாரம்
எங்களின் இந்த செயற்கைக்கோள் முயற்சிக்கு, சென்னை ஐ.ஐ.டி. ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை ஆதரவாக இருந்தது. அவர்கள் எங்கள் செயற்கைக்கோளை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததுடன், இதன் எடை குறித்த அங்கீகாரச் சான்றிதழையும் வழங்கினர். இந்தச் செயற்கைக்கோளுக்கான திட்டமிடல் 2 வாரம், நிஜத்தில் உருவாக்கி முடிப்பதற்கு 3 வாரம் என மொத்தம் 5 வார காலம் ஆனது. இதில் பயன்படுத்தியுள்ள ‘சிப்’, ‘சென்சார்கள்’ போன்றவற்றை இத்தாலியில் இருந்து தருவித்திருக்கிறோம். நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக இச்செயற்கைக்கோளுக்கு ‘ஜெய்ஹிந்த்-1எஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்.
பலூன் மூலம்...
ஹீலியம் வாயு பலூன் மூலம் எங்கள் செயற்கைக்கோள், வானில் விண்ணை ஒட்டிய பகுதிக்கு அனுப்பப்படும். அங்கு, புவியீர்ப்புச் சக்தி மிகவும் குறைந்த நிலையில் நைலானின் தன்மை எப்படி இருக்கிறது என்று அறிவது எங்களின் முக்கியக் குறிக்கோள். அதன்மூலம், எதிர்காலத்தில் விண்வெளியில் நைலானை பயன்படுத்த முடியுமா என்று தெரிந்துகொள்ள முடியும். மேலும், பலூன் செல்லும் வேகம், பூமிப் பரப்பில் இருந்து அதன் உயரம், அங்கு நிலவும் வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம், புறஊதாக் கதிர்களின் அடர்த்தி போன்ற வானிலை சார்ந்த விஷயங்களையும் எங்கள் செயற்கைக்கோள் தெரிவிக்கும்.
விண்ணிலிருந்து மண்ணுக்கு
‘சென்சார்கள்’ மூலம் மேற்கண்ட தகவல்களைக் கிரகிக்கும் இந்தச் செயற்கைக்கோள், அதில் உள்ள மைக்ரோகண்ட்ரோலர் மூலம் அவற்றைப் பதிவு செய்யும், பூமிக்கும் அனுப்பி வைக்கும். அந்தத் தகவல்கள் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ‘கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது’ என்பார்கள். அதைப் போல எங்களது செயற்கைக்கோள் சிறியது என்றாலும், இதன் ஆயுட்காலம் ஒருநாள்தான் என்றபோதும், மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கும். எங்கள் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் தினேஷ்குமார், இத்திட்ட முயற்சியில் வழிகாட்டி உதவினார்.
ராக்கெட் தயாரிப்போம்
ஒரு நுண்செயற்கைக்கோளை நாங்களே உருவாக்கியது, எங்களுக்கு நம்பிக்கையையும், தெளிவையும் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக, சிறிய ரக ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட ஆவலாக இருக்கிறோம். அதற்கு உரிய அனுமதியும், பொருளாதார உதவியும் கிடைத்தால் எங்களால் அப்பணியை முன்னெடுக்க முடியும்.
விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எங்களைப் போன்ற விண்வெளிப் பொறியியல் மாணவர்கள் எதிர்காலத்தில் அதற்குத் துணைநிற்போம்’’ என்று உற்சாகக் குரலில் கூறி விடைகொடுத்தனர்.
64 கிராம் எடையுடைய செயற்கைக்கோளை உருவாக்கிய ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ மாணவர்கள், 500 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கிய திருச்சி மாணவி வில்லட் ஓவியா, தற்போது இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் என்று இந்தியாவில் இதுவரை உருவான முக்கியமான நுண்செயற்கைக்கோள்களை உருவாக்கியவர்கள் தமிழக மாணவர்கள்தான்.
அந்தவகையிலும் நமக்குப் பெருமைதான்!
Saturday, 30 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment