Saturday 31 March 2018

ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன? தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதி

ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன? தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதி
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது. ஆதார் பதிவு மற்றும் அட்டை அச்சிட்டு வழங்கும் பணிகளை யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆதார் பதிவு பணிகளை யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக மேற்கொள்ளாமல், தனியார் முகமைகள் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தனி நபரின் ஆதார் விவரங்கள் வெளியில் கசிந்து விடுமோ என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது. இதற்கிடையில், வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறாமல், ஆதார் தரவுகளைப் பயன்படுத்தி பேமென்ட் வங்கிக் கணக்குகளைத் திறந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களின் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. இந்நிலையில், ஆதார் தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அறவே இல்லை என்று யுஐடிஏஐ தலைவர் அஜய் பூஷண் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தனி நபர்களின் ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டும் தெரிந்துக்கொள்ளும் வசதியை, யுஐடிஏஐ நிறுவனம், அதன் இணையதளமான http://uidai.gov.in -ல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது: ஒரு நபர் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, குடும்ப அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தாலோ அது குறித்த விவரங்கள் மற்றும் நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விவரங்களும் யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவாகிவிடுகிறது. அதை யுஐடிஏஐ இணையதள முகப்பு பக்கத்தில் Aadhaar Services என்பதன் கீழ் உள்ள Aadhaar Authentication History -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். அதை கிளிக் செய்யும்போது, ஆதார் எண், பாதுகாப்பு குறியீடு ஆகியவை கேட்கப்படும். அதை கொடுத்தால், சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதன் பின்னர், திரையில் எந்த வகையான விவரங்கள் தேவை என கேட்கும். அதாவது, ஆதார் விவரங்களுக்காக ஓடிபி பெற்றது, பெயர், முகவரி (டெமோகிராபிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது, கருவிழி படலம், கை ரேகை (பயோமெட்ரிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது அல்லது அவை அனைத்தையும் பயன்படுத்தியது தொடர்பானதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால், தனி நபரின் ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்கள் தெரியும். ஒருவேளை ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முற்பட்டு, தோல்வி அடைந்தால், அது குறித்த விவரங்களையும் அதில் பார்க்க முடியும். இதுபோன்ற விவரங்களைக் கடைசி 6 மாதங்கள் வரையிலான, 50 பதிவுகள் மட்டுமே கிடைக்கும். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ஆதார் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் யுஐடிஏஐ நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 25 March 2018

புதியதோர் இணையம் செய்வோம்

புதியதோர் இணையம் செய்வோம் | எழுத்தாளர் கபிலன் வைரமுத்து | "இந்த பூமில எங்க எப்ப போர் நடக்கனும்னு முடிவு பண்றதும் நாங்கதான். அதுல எந்த பலனும் இல்லனா அந்த போர முடிச்சு வைக்கிறதும் நாங்கதான். நீங்க சாப்பிடற சாப்பாடு, போட்டுக்கற துணி, பாக்கற நியூஸ் எல்லாத்தையும் நாங்கதான் முடிவு பண்றோம்" இது சர்வதேச அதிகாரச் சமூகங்களைப் பற்றி விவேகம் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் பேசுகின்ற ஒரு வசனம். படம் பார்த்த சிலர் எனக்கு தொலைபேசியில் அழைத்து "நீங்க எழுதிய வசனம் கற்பனையா இல்ல உண்மையா?" என்று கேட்டார்கள். "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தைப் படியுங்கள். அனைத்து உண்மைகளும் புரியும்" என்று அனைவருக்கும் ஒரேவிதமான பதிலைச் சொல்லிவந்தேன். இன்று அந்த அதிகார மையங்கள் நம்மை மிக நெருங்கிய நிலையில், விவேக் ஓபராய் பேசிய அந்த வசனம் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடி அனுபவமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நிறுவன-அதிகார வர்க்கத்தால் நாம் ஆளப்படுகிறோம். இது ஆய்வுக்குட்பட வேண்டிய கருத்தியல் அல்ல. அனைத்துலக கள நிலவரம். "இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா விடுதலையே அடைய முடியாத நிரந்தர அடிமைகளாக ஆயிடுவோம்" என்று கவண் படத்தில் நாங்கள் எழுதிய வசனத்தையும் இங்கே மறுபதிவு செய்ய விரும்புகிறேன். எல்லையில்லா அடிமைத்தனத்தை நோக்கி நம் நாகரிகம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தவிர்க்கமுடியவில்லை. நிறுவனங்கள் நம்மை ஆண்டால்தான் என்ன? என்று சிலர் கேட்பதுண்டு. அரசியல் என்பது சாசனத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதில் மனிதர்களின் கேள்விக்கான உத்தரவாதம் உண்டு. நிறுவனம் என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது கேள்வியற்ற உலகம். சாசனப்படி மனிதர்கள் குடிமக்கள். ஒப்பந்தப்படி மனிதர்கள் நுகர்வோர். குடிமைச் சமூகத்திற்கு நேர் எதிரான மனிதத்தன்மையற்ற ஓர் ஆதிக்கத்தால் நாம் கட்டுண்டிருக்கிறோம். இது பன்முக ஆதிக்கமாக இருப்பதுதான் இதன் பலம். இதனை ஒருமுகமாக எதிர்கொள்ளாததுதான் நம் பலவீனம். நம் தரவுகளை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் என்பது ஆதிக்க பன்முகத்தில் ஒரு துணைமுகம். பேசுவதற்கு எத்தனையோ களங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் குறித்து நாம் உடனடியாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுற்ற தருவாயில் ஒரு கடிதம் வழியாக நான் பகிர்ந்த செய்திகளை மறுபடியும் பகிர்கிறேன். "சமூக விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. சமூக வலைத்தளம் என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவற்றின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் வெபியோ என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம். மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெல்லாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்" இதுதான் நான் கடந்த ஆண்டு எழுதிய கடிதம். இந்த கடிதத்திற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா அர்த்தம் சேர்த்திருக்கிறது. முகநூலில் பொதுமக்களின் பதிவுகளைத் திருடி அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட உலக பொருளாதாரம் இன்று தரவு வளத்தை (டேட்டா எக்கானாமி) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. சமூகவலைத்தளங்கள் தரவு பொருளாதாரத்தின் அச்சாரமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம் தரவுகளால் நாம் வகைப் பிரிக்கப்படுகிறோம். நாம் பதிவிடும் கருத்துகள், புகைப்படங்கள், விருப்பங்கள், நிகழ்த்தும் தேடல்கள் இவை அனைத்தையும் கொண்டு நம் குணாதிசியம் கட்டமைக்கப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் கூறு வரையப்படுகிறது. இதையெல்லாம் செய்ய பல கணினி வழிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படித் தயாரிக்கப்படும் தனிமனிதத் தரவுகள் பல்வேறு சந்தைகளில் விற்கப்படுகின்றன. இந்த தகவல்களுக்கு ஏற்ப வணிக நிறுவனங்களின் விற்பனை சூத்திரமும், அரசியல் கட்சிகளின் திரைக்கதையும், திரைப்படங்களின் கருத்தியலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இணைய பெருந்தரவு மறுசீரமைக்கப்படுகிறது. அந்தந்த நிறுவனங்களுக்கோ அல்லது கட்சிகளுக்கோ ஏற்ப உண்மைகள் திரிக்கப்படுகின்றன. இணையத்தை மட்டுமே அங்காடியாகவும் அறிவுக்கான தேடல் களமாகவும் வைத்திருக்கும் ஜனத்தொகை திரிக்கப்பட்ட உண்மைகளை உளமார உள்வாங்கிக்கொள்கிறது. நம்புகிறது. மக்களை நுகர்வு கலாசாரத்திற்குள் கட்டிப்போடவும், சமூகத்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலையில் வைக்கவும், நிழல் பொம்மைகளாக செயல்படும் அரசுகளை எதிர்த்து புரட்சிகளைத் தூண்டவும், நிஜ அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் பார்த்துகொள்ளவும் அதிகார நிறுவன வர்க்கம் தன் பரிவாரங்களைப் பயன்படுத்துகிறது. நம் ஒவ்வொரு நொடியும் யாருக்காகவோ கண்காணிக்கப்படுகிறது. யாருக்கோ விற்கப்படுகிறது. பயனாளர்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டுக்கு ஒத்துழைக்காதபோது இனப்படுகொலைக்கு கூட இந்த வர்க்கம் தயங்காது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. "நீ என்பது உடலா உயிரா பெயரா? மூன்றும் இல்லை. நீ என்பது செயல்" என்று என் தந்தை கோச்சடையானில் ஒரு பாடல் எழுதியிருப்பார். இன்றைய கால சூழலில் நீ என்பது தகவல் என்றே எண்ணுகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் பற்றி பேச விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களின் தொடர்ச்சியைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். இளைய தலைமுறையின் வாழ்வியல் புதிய சிந்தனைத் தளத்தில் இருந்து தொடங்க வேண்டும். உலக படையெடுப்பில் இருந்து நம்மை நாம் தற்காத்துகொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பகுத்தறிவு. அதுவே நம் அடையாளம். விழித்திருப்போம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 10 March 2018

வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை

வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் என்பது கவனிக்கத்தக்கது. நடைமுறை கட்டணங்கள் மற்றொரு வங்கிக்கு கடன் மாற்றம் செய்யும் சமயங்களில் அந்த வங்கியில் பெறப்படும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், கடன் தொகை மாற்றம் செய்பவர் சம்பந்தப்பட்ட வங்கியின் புதிய வாடிக்கையாளராக கருதப்படுகிறார். வீட்டின் மதிப்பை அறிந்துகொள்ளும் கட்டணம், சொத்து குறித்து வழக்கறிஞர் கருத்துக்கான கட்டணம், முந்தைய வங்கியில் உள்ள அடமானத்தை ரத்து செய்து, மீண்டும் அதை பதிவு செய்யும் கட்டணம் ஆகியவை பற்றி அறிந்துகொள்வது நல்லது. கடனுக்கான காலம் முந்தைய வங்கியில் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்களுக்கு கிடைத்ததோ அதே கால அளவுக்குத்தான் புதிய வங்கி கடன் தொகையை கணக்கீடு செய்யும். அதாவது, 20 வருட காலத்தை கணக்கிட்டு கடன் பெற்று, 5 வருடங்கள் கடனை திருப்பி செலுத்திவிட்ட நிலையில், மீதியுள்ள 15 வருடங்களுக்கு மட்டும் கடன் தொகை கணக்கில் கொள்ளப்படும். வட்டி விகிதம் பெரும்பாலும் வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சமயங்களில் பலரும் வேறொரு வங்கிக்கு கடனை மாற்றுகிறார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்ற நிலையில், புதிய வங்கியின் வட்டி விகிதம் பற்றி முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். கூடுதல் கடன் வங்கிக்கு கடனை மாற்றும் பெரும்பாலானவர்கள் கூடுதல் கடன் தொகையை மனதில் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு பெறப்படும் கூடுதல் கடன் தொகைக்கு வரிச்சலுகை தரப்படுவதில்லை. மேலும், கூடுதல் கடன் தொகைக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சமயங்களில் கடன் மாற்றம் செய்வது போதிய பயனை தராது. குறிப்பாக, புதிய வங்கியில் பெறப்படும் வீட்டுக் கடன் அதன் 'அப்ரூவலில்' இருந்தால், சில சலுகைகளுடன் கடன் பெறவும் வாய்ப்பு உண்டு. ஆவணங்கள் வீட்டுக்கடனை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' செய்யும்போது, சில ஆவணங்களை அவசியமாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தரவேண்டியதாக இருக்கும். அத்தகைய அடிப்படை ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வீட்டுக்கடன் மாற்றம் செய்யும் முயற்சியை தவிர்ப்பது நல்லது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts