Thursday 15 February 2018

புதுசு போய் பழசு வருமா?

புதுசு போய் பழசு வருமா? | பி.கே.இளமாறன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர், அரசு ஊழியர்களின் முதன்மையான கோரிக்கையாகும். இதற்காக பல போராட்டங்களை நடத்தினோம். இதன் எதிரொலியாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைத்திட ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். அக்குழு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து மூன்று கட்டங்களாக கருத்துரைகளை கேட்டறிந்தது. அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறினால், அரசின் சார்பில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதியோர் இல்லங்கள் கட்டிக்கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று எடுத்துரைத்தோம். வல்லுநர் குழு புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை உணர்ந்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு சாதகமாக ஆய்வறிக்கையை பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அன்று உறுதியளித்தது. அதன்பிறகு, முதல்-அமைச்சர் மரணம் மற்றும் அரசியல் மாற்றங்களால் வல்லுநர் குழுவின் தலைவர் தன் பதவியில் இருந்து விலகினார். மீண்டும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு பிறகு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் தற்போது வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஆசிரியர், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட எண் வழங்கப்பட்டு, அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. அந்த கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் மீதம் உள்ள 40 சதவீதம் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த 40 சதவீதம் தொகை எப்போது கிடைக்கும்? என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுவரை 3 ஆயிரத்து 256 பேர் பணியில் இருந்து ஓய்வுப்பெற்று உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் உயர்நீதிமன்றம் சென்று 60 சதவீதம் தொகையினை பெற்றுள்ளனர். மற்றவர்கள் யாருக்கும் 60 சதவீதத்தொகை வழங்கப்படவில்லை. ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பங்கு மற்றும் அரசு பங்கு என இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. இது எந்த கணக்கில் தற்போது உள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவசர மருத்துவ செலவினங்களுக்காக கூட தேவைப்படும் தொகையை பெற முடியாது. ஆனால் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து பணிவரன்முறை முடித்தவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை 60 சதவீத தொகையினை அவசரத்தேவைக்கு பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. பெற்ற தொகையினை சமகால தவணை முறையில் திரும்ப செலுத்தலாம். அதுமட்டுமின்றி 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பழைய ஓய்வூதிய திட்ட கணக்கில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம். பணம் திரும்ப செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அத்தனை பேருக்கும் ஓய்வூதியம் உண்டு. ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சுமார் 4.5 லட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்துவந்தால் அவர்களுக்கு 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 300 ரூபாய் வரையே மாதம் கிடைக்கும். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு மாதம் 9 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் நிச்சயத்தன்மையற்றதாகவே உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஓய்வுப்பெற்ற பிறகு அனாதைகளாக வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் தொடர்ந்திட வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாநில அரசு ரத்து செய்ய முடியுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுகிறது. ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தினை அறிவிக்கும்போதே செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதில், மாநில அரசு விரும்பினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடரலாம் என்று கூறி உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதிக்குள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்ததற்கான அறிவிப்பை ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு வெளியிடுமா? அல்லது ஆசிரியர்- அரசு ஊழியர்களை மீண்டும் போராட்டத்திற்குள் தள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Popular Posts