Sunday 11 February 2018

உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்

உலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவரது அப்பா பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்தினார். பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான். ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் எடிசன். ரெயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரெயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி 'வீக்லி ஹெரால்டு' வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். எடிசன் இரவு நேரங்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டியிருந்தது. அதனை ஏன் தானியங்கி மயமாக்கக் கூடாது என்று நினைத்து தகவல் அனுப்பும் முறையை தானியக்கம் ஆக்கினார். ரெயில் நிலையத்தில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால், அதை கட்டுப்படுத்தும் கருவியையும் கண்டுப்பிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் அவர் தீர்வு கண்டார். ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரெயில் பெட்டியில் தீப்பற்றியது. ரெயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்க காது கேட்காமல் போனது. பின்னர் மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். எவரும் அக்காலத்தில் கண்டுபிடிக்காத இவ்வுலகுக்கு தேவையான அரிய கண்டுபிடிப்புகளை இவ்வுலகுக்கு தந்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் பேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. ஒலிக்கான சாதனத்தை கண்டறிந்த பின்பு அவரது கவனம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின் விளக்குகளைப் பற்றி ஆராய தொடங்கினார். அவரது மின் ஒளிவிளக்கு பற்றிய ஆராய்ச்சிகள் முட்டாள்தனமானவை என நகையாடினர் அவரது சமகால விஞ்ஞானிகள். முடியாது என்ற சொல்லை விரும்பாத எடிசனுக்கு அது தீர்க்கக் கூடிய ஒன்றாகவே அவரது எண்ணத்தில் பட்டது. உடனே பணியில் இறங்கினார். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டத்தட்ட 1500 சோதனைகளை செய்து பார்த்தார் எடிசன். அதன் மூலம் மின் விளக்குகள் பற்றிய மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றில் ஒரே கோட்பாடு தான் அவர் தேடிய விடையை தந்தது. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணி நேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிர வைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சி பார்ப்பது தான் எடிசனின் நோக்கம். அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பல முறை ஒடிந்து போனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பல முறை முயன்று கடைசியாக 1879-ம் ஆண்டு அக்டோபர் 21-ல் கடைசியாக உருவாக்கிய கார்பன் இழையை கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். உலகின் முதல் மின் விளக்கு எரிந்தது. எடிசன் திறமையை உலகமே மெச்சியது. அவர் ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்பார். எடிசன் தனது 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன. ஆராய்ச்சிகான பொருட்கள் கிடைக்காத அக்காலத்தில் தானே ஆராய்ச்சிக்கான பல பொருட்களை கண்டறிந்து உலகை நவீனமாக்கி பள்ளிக்கே செல்லாத ஒருவர் உலகுக்கே ஒளியை தந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வசதியும் இல்லாத கிராமத்து அரசுப் பள்ளியில் படித்து இந்தியாவின் தலைமை விஞ்ஞானியான அப்துல் கலாம், தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் போன்றவர்கள் பல தடைகளை தகர்த்து சாதனைப் படைத்தவர்களாய் வரலாற்றில் இடம் பெற்று விட்டனர். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அறிவியல் சோதனைகள் பதிவேட்டு தாள்களில் எழுத்துகளாக மட்டுமே இடம்பெறுவதும், ஆசிரியர்கள் அறிவியல் பாடத்தினை மொழிப் பாடங்கள் போன்று கற்பிப்பதையும் பார்க்கும்போது, இவ்வுலகம் நவீனம் அடைந்தும் அறிவியல் பற்றிய ஆர்வம் இல்லாமல் காலங்களை வீணாக்குகிறோமோ? என்ற வருத்தம் தோன்றுகிறது. அறிவியலின் அவசியத்தை உணரும் விதமாக நம் நாட்டில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆசிரியர்கள் அறிவியலை ஆராய்ச்சி இயலாக கற்பிக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளின் பக்கம் திரும்ப வேண்டும். மின்னணு வடிவிலான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். கிராமத்து மாணவர்கள் கல்வியின் வழியே அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும். | ஆசிரியர் க.தர்மராஜ்

No comments:

Popular Posts