வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்தியா 97-வது இடத்தில் இருப்பது தெரியவந்து உள்ளது. மனிதனுக்கு 4-6 வயதில் உள்ளவர்களுக்கு 1,950 கலோரியும், 10-12 வயதினருக்கு 1,970 கலோரியும், 13-15 வயதினருக்கு 2,060 முதல் 2,450 கலோரியும், 16-18 வயதினருக்கு 2,060 முதல் 2,640 கலோரியும் உணவு தேவைப்படுகிறது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் 5-ல் ஒருவர் ஏழை. உலகில் 76 கோடி மக்கள் ஏழைகள். 80 கோடி பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை, சுதந்திர வாழ்வை பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. வறுமையை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையை பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயற்சிக்கின்றன. முதலாவது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.எச்.ஐ.) எனும் அறிக்கை. அடுத்தது, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைவு மற்றும் இந்தியாவின் வளத்தை பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை. உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவை கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயற்சி செய்கிறது. இந்த அட்டவணை மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் 4 கூறுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறது. இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளை கொண்டிருக்கிறது. இதில் 100 என்பது முற்றிலும் பட்டினி எனும் நிலையையும், 0 என்பது முற்றிலும் பட்டினியின்மை எனும் நிலையையும் குறிக்கிறது. உலக நாடுகளும், பிரதேசங்களும் கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கோ அல்லது அதற்கு குறைவாகவோ அளவீட்டின் கீழ் வரும் நாடுகள் குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை என்று கருதப்படுகிறது. 10 முதல் 19.9 வரையிலான அளவீட்டை கொண்ட நாடுகள் நடுத்தரமானவை என்றும், 20 முதல் 34.9 அளவீட்டுக்குள் வருபவை தீவிர நிலையில் இருக்கும் நாடுகள் என்றும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டில் வரும் நாடுகள் அபாயகரமான நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்கும் கீழ் அளவீடு கொண்ட நாடுகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கும் நாடுகள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பட்டினி அட்டவணையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. வறுமை அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது என்பது புலப்படுகிறது. 2000-ல் இருந்து இந்த நாடுகளில் வறுமை அளவு 29 சதவீதம் குறைந்து இருக்கிறது. 2017 அட்டவணையில் சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.எச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29 புள்ளிகள்). இந்த அட்டவணையில் பரிசீலிக்கப்பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில் இந்தியா படுமோசமாக 97-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது, இன்னமும் 'தீவிர' நிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தான் நாம் இருக்கிறோம். பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன. முதலாவதாக 1994-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே கால கட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் சதவீதம் 45-ல் இருந்த 22 சதவீதமாக குறைந்து உள்ளது. அதாவது, 13.3 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். எனினும் இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சொல்கிறது. இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களின் நிலையுடன் ஒப்பிடுகையில் படுமோசமாக இருக்கிறது. 2012-ம் ஆண்டு நிலவரப்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களில் 43 சதவீதம் பேர் பழங்குடியினர், 29 சதவீதம் பேர் பட்டியல் இனத்தவர்கள். மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாக தோன்றுகிறது. முற்றிலும், வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (6 கோடி பேர் ஏழைகள்), பீகார் (3.6 கோடி பேர்), மத்தியப்பிரதேசம் (2.4 கோடி பேர்) போன்ற மாநிலங்கள் முதன்மையான இடத்தில் இருந்தன. முதல் 7 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் ஏழைகளில் 62 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரிலும் 4 பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7 சதவீதம் தான். வறுமையின் அளவு குறைவதற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி இருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப்பதுடன் வறுமையும் அதிகமாக உள்ளது. நான்காவதாக, வளர்ச்சியும், மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிகமுக்கியமானவை. ஆகையால் அடுத்த 15 ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இனிவரும் எதிர்காலத்தில் வறுமையை இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் முயற்சி செய்திடல் வேண்டும்.
Monday, 29 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment