Follow by Email

Wednesday, 31 January 2018

மனிதம் போற்றிய மகான்

மனிதம் போற்றிய மகான் | வள்ளலார் மருத்துவர் அமுதவடிவு, செயலாளர், திருவருட்பா இசை சங்கம், வடலூர் | இன்று (ஜனவரி 31-ந்தேதி) வள்ளலார் ஜோதியில் கலந்த தினம். | "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான். வள்ளலார் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மருதூர் கிராமத்தில் 5-10-1823-ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் 5-வது மகனாக அவதரித்தார். இவரது இயற்பெயர் ராமலிங்கம். இவருக்கு இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள். ராமலிங்கம் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது ராமையாவும், சின்னம்மையும் குழந்தையை தூக்கி கொண்டு நடராஜரை தரிசிக்க சிதம்பரம் சென்றனர். தீட்சிதர் திரையை விலக்கினார். அனைவரும் நடராஜரை தரிசனம் செய்த மகிழ்ச்சியில் பக்தி பரவசத்துடன் 'சிவ சிவ' என்று கூறி வணங்கினர். ஆனால் குழந்தை ராமலிங்கமோ கலகலவென்று சிரித்தார். அதைக் கண்டவர்கள் இது சாதாரண குழந்தை அல்ல; தெய்வக்குழந்தை என்று கூறி குழந்தையை வணங்கினர். அப்போது அருள் உண்மையை வள்ளலாருக்கு இறைவன் உணர்த்தினார். சிறிது காலத்தில் வள்ளலாரின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி சின்னம்மை தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையில் குடியேறினார். ராமலிங்கத்தின் மூத்த சகோதரர் சபாபதி புராண சொற்பொழிவு நடத்தி வந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். ராமலிங்கத்துக்கு 5 வயதானபோது அவரை சபாபதி முதலியார் என்கிற ஆசிரியரிடம் தமிழ் படிக்க சேர்த்தார்கள். ஆனால் ராமலிங்கம் கல்வி கற்க செல்லாமல் கந்தக்கோட்டம் கந்தசாமி கோவிலுக்கு சென்று தியானம் செய்து வந்தார். ஒருநாள் வள்ளலாரின் அண்ணன் சபாபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அன்று ஒரு புராண சொற்பொழிவுக்கு செல்வதாக இருந்தார். அவர் வள்ளலாரை அழைத்து இன்று ஒருநாள் மட்டும் நிகழ்ச்சிக்கு சென்று பக்தி பாடல்களை பாடிவிட்டு வா என்று உத்தரவிட்டார். வள்ளலார் சென்று சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவில் சபையோர் மெய் மறந்தனர். வள்ளலார் 1857-ம் ஆண்டு வரை சென்னையில் இருந்தார். பின்னர் தீர்த்த யாத்திரையாக சென்னையில் இருந்து தென்திசை பயணம் மேற்கொண்டார். சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் முதலிய தலங்களை தரிசித்தார். பின்னர் உடல் நலமில்லாத தம் இளைய அண்ணன் பரசுராமரைக்காண 'கருங்குழி' எனும் ஊருக்குச் சென்றார். கருங்குழியில் தங்கியிருந்தபோது அடிக்கடி வள்ளலார் சிதம்பரம் சென்றார். கூத்தனைக் கண்டார். தோத்திரம் செய்தார். பாமாலை புனைந்தார். சுமார் இருநூறு மாலைகள் பாடினார். சிதம்பரம் சென்று வழிபட்டபோது சிதம்பரத் திருக்கோவிலைப் புதுப்பிக்க எண்ணினார். அது நிறைவேறவில்லை. இறைவன் "வடலூர் என்னும் உத்தரஞான சிதம்பரத்தில் அளவு கடந்த நெடுங்காலம், சித்தி எல்லாம் விளங்கத் திருஅருள் நடம் செய்வோம். அதற்கு அடையாளமாக வடலூரில் ஓர் ஞானசபை காணுதல் வேண்டும்" என்னும் அருட்குறிப்பை அறிவித்தார். எனவே, இறைவனின் அருள் ஆணையின்படி ஞானசபை அமைக்க ஆயத்தமானார். அதனை உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் அமைக்க முற்பட்டார். ஞானசபைக்கான வரைபடத்தைத் தாமே வரைந்தார். 1871-ம் ஆண்டு ஆனி மாதம் ஞானசபை கட்டும் பணி தொடங்கியது. எட்டு கோண வடிவில், தாமரைப்பூ மலர்ந்ததுபோல் வடிவமைக்கப்பட்டது. ஞானத்தில் சிறந்த திசையாகிய தென்திசை நோக்கி வாயில் ஏற்படுத்தப்பட்டது. ஞானசபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும் அமைக்கப்பட்டது. ஞானசபையின் நடுப்பகுதியில் பன்னிருகால் மண்டபம் கட்டப்பட்டது. அதற்கு உட்பகுதியில் நாற்கால் மண்டபம் அமைக்கப்பட்டது. அம்மண்டபத்தின் நடுவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எழுந்தருளச் செய்தனர். அவ்வருட்பெருஞ்ஜோதிக்கு முன் ஏழு திரைகள் தொங்கவிடப்பட்டன. அவை கருமை, நீலம், பசுமை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய வண்ணங்களில் இருந்தன. பொற்சபை என்பது ஆன்ம ஆகாயம், சிற்சபை அதாவது ஞானசபை என்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அந்தப் பிரகாசத்தின் அசைவே அருள் நடனம். ஆன்மப் பிரகாசத்தை விளக்கம் செய்யாமல் மறைப்பவைகள் மாயைகள், மலங்கள், மதங்கள் என்னும் திரைகள். இத்திரைகளாகிய குறைகள் நீங்கினால் நமக்குள் பேரருட்ஜோதி பிரகாசத்தைக் காணலாம். 1871-ம் ஆண்டு ஆனிமாதம் தொடங்கப்பட்ட பணி 1872-ம் ஆண்டு தை மாதத்திற்குள் நிறைவடைந்தது. ஞானசபை கட்டப்படும்போது வள்ளற்பெருமான் மேட்டுக்குப்பத்தில் இருந்தார். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை என்ற பெயரில் அன்னதானத்தை தொடங்கினார். அன்று அவர் ஆரம்பித்த அன்னதானம் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. 1872-ம் ஆண்டு தைத்திங்கள் முழுமதி நாள், வியாழக்கிழமை. பூசவிண்மீன். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் இருந்த வள்ளற்பெருமான் சன்மார்க்க அன்பர்களை அழைத்தார். அகண்டம் ஒன்றினைத் தந்தார். தம் அருட்பார்வையில் ஒரு மண்டலம் வைத்திருந்த 5 அடி உயரமுள்ள கண்ணாடியையும் தந்தார். தைப்பூசத்தன்று வடலூர் ஞானசபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து பகல் 10 மணிக்கும், நண்பகல் 1 மணிக்கும், மாலை 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும், மறுநாள் காலை 5.30 மணிக்கும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பித்தனர். இவ்வாறே ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. மாத பூஜை நாட்களில் 6 திரைகள் நீக்கி இரவு 7.45-க்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 30-1-1874 அன்று இரவு ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அருளுரை ஆற்றினார். பின்னர் சித்திவளாக அறைக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அறைக்குள் செல்வதற்கு முன்பு நீங்கள் அறையை வெளியே பூட்டிக்கொள்ளுங்கள். அறையை திறந்து உள்ளே வர முயற்சிக்க வேண்டாம். கதவைத் திறந்தாலும் என்னைப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றார். வள்ளலார் கூறியபடியே அவரது சீடர்கள் அறையின் வெளிக்கதவை மூடினார்கள். அரசு அதிகாரிகள் அறையை திறந்து சோதனை செய்து பார்த்தபோது உள்ளே எதுவுமில்லை. வள்ளலார் ஜோதியாய் காற்றில் கலந்து விட்டார் என்று அறிவித்தனர். நாமும் சாதி, சமய, மத, இன சங்கற்ப, விகற்பங்களை விடுத்து கோபம், லோபம் முதலிய குறைகளாகிய திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்போம்.

No comments:

Popular Posts