Thursday 19 October 2017

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜா ராஜா!' என்றழைக்க... ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார். ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது. எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்... அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம். அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி. இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது... எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..." என்று கண்ணீர் மல்கி... பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்... இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல... இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

No comments:

Popular Posts