Friday 16 December 2016

புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா.

புகழ்பெற்ற மனிதர்கள் துணிச்சல் நிறைந்த எழுத்தாளர் பிரான்சு நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா. 1840-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். தனது 7-வது வயதில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது மகனை சட்டம் படிக்க வைத்து வக்கீல் ஆக்க வேண்டும் என்பது அவரது தாயின் விருப்பமாக இருந்தது. ஆனால் தகுதித்தேர்வில் எமிலி தோல்வி அடைந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எழுத்து துறையில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆரம்பகாலத்தில் காதல் கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தினார். பின்னர் இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் விறுவிறுப்பான கட்டுரைகளை எழுதினார். அரசியல் ரகசியங்களை அவர் தனது எழுத்தில் வெட்டவெளிச்சமாக்கினார். குறிப்பாக யூதர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். இதையொட்டி யூதர்களை எதிர்க்கும் குழுவினர் அவரை கொல்ல முயற்சி செய்தனர். இந்த நிலையில் 1902-ம் ஆண்டு அவரது படுக்கை அறையில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த வேலைக்காரன் அந்த அறைக்கு சென்றபோது தரையில் எமிலி பிணமாக கிடந்தார். படுக்கையில் அவரது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். எமிலியின் படுக்கை அறையில் இருந்த 'குளிரை விரட்டி வெப்பத்தை தரும் அடுப்பில் இருந்து வெளியேறும் புகை பரவியதால் மூச்சுத்திணறி எமிலி மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இது ஒரு விபத்து என்றே அப்போது கருதப்பட்டது. ஆனால் 1927-ம் ஆண்டு வெளியான தகவலின்படி எமிலி திட்டமிட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. அவரது வீட்டில் உள்ள புகைக்கூண்டில் இருந்து புகை வெளியேறும் பகுதியை அடைத்து வைத்து, அதன்மூலம் புகை அறைக்குள் பரவி, அதை சுவாசித்ததால் எமிலி மரணம் அடைந்தார்' என்ற உண்மை வெளிப்பட்டது. அவரது வீட்டின் நெருப்பு புகைக்கூண்டை சுத்தம் செய்யும் நபர் இந்த சதி செயலை செய்துள்ளார். எமிலி யூதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் கோபம் அடைந்த யூதர்களுக்கு எதிரான குழுவினர் சதி செய்து அவரை கொன்றதாக கூறப்பட்டது. மேலும் 1890-ம் ஆண்டு யூத ராணுவ அதிகாரி கேப்டன் டிரேபியூஸ் என்பவர் மீது தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டது. அவர் ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டுக்கு கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்காக அவர் நாடு கடத்தப்பட்டு பேய் தீவு என்று அழைக்கப்படும் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கேப்டன் டிரேபியூஸ் யூதர் என்பதால் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்று எமிலி வாதாடினார். இதற்கான ஆதாரங்களையும் சேகரித்து அவர் கட்டுரையாக வெளியிட்டார். இதன்காரணமாகவும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தது. எமிலியின் எழுத்துப் போராட்டத்தை தொடர்ந்து கேப்டன் டிரேபியூஸ் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. இதில் இவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்குள் எமிலி மரணம் அடைந்துவிட்டார். இன்றுவரை அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. அதேநேரத்தில் அவரது எழுத்துக்கள், அவரது படைப்புகள் சாகா வரம் பெற்று திகழ் கின்றது.
 

No comments:

Popular Posts