வங்கதேச கிரிக்கெட் அணியின் புறக்கணிப்பும் உலகக் கோப்பை மாற்றங்களும்
வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்கவுள்ள ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருபது நாடுகள் பங்கேற்க உள்ளன. ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தின் கிரிக்கெட் அணி இப்போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சற்றே ஏமாற்றம் அளித்துள்ளது.
வங்கதேச அணியின் வளர்ச்சி மற்றும் வீரர்களின் திறமை
1970-களில் இலங்கை அணி உலகின் கவனத்தை ஈர்த்து, ஐம்பது ஓவர் உலகக் கோப்பையையே வெல்லும் அளவுக்கு உயர்ந்ததுபோல, வங்கதேச அணியும் கடந்த இருபது ஆண்டுகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறது.
தற்போது ஐ.சி.சி. தரவரிசையில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஒன்பதாம் இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் பத்தாம் இடத்திலும் வங்கதேசம் உள்ளது. மேலும், பலம் வாய்ந்த சர்வதேச அணிகளை 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவ்வப்போது தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் போன்ற உலகத் தரமான வீரர்கள் வங்கதேச அணியில் உள்ளனர். குறிப்பாக, ஷகிப் அல் ஹசன், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்து விளங்கும் ஆல்ரவுண்டர்களுக்கான உலகத் தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என மூன்று வகைப் போட்டிகளிலும் முதலிடம் வகித்தவர். இவர்களின் திறமை காரணமாகவே ஐ.பி.எல். போட்டிகளில் வங்கதேச வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல் பதற்றம் மற்றும் புறக்கணிப்பு முடிவுகள்
வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஷகிப் அல் ஹசன், 2024ஆம் ஆண்டில் நாட்டில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், நிகழாண்டு ஐ.பி.எல். போட்டிக்கான தேர்விலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாஃபிசூர் ரஹ்மானின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதற்குப் பதிலடியாக, ஐ.பி.எல். போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்புவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய மைதானங்களில் ஆடுவதற்கும் வங்கதேச அணி மறுப்புத் தெரிவித்தது. மேலும், தாங்கள் விளையாட வேண்டிய போட்டிகள் அனைத்தையும் இந்தியாவுக்குப் பதிலாக இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
வங்கதேச முடிவின் நியாயம் குறித்த விவாதம்
இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பதையும், வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுப்பதையும் ஒரே கோணத்தில் பார்க்க முடியாது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான் போராளிகள் அல்லது தலிபான்கள் போன்றோரின் தாக்குதல் அபாயம் நிலவும் நிலையில், இந்தியாவில் வீரர்கள் உற்சாகப்படுத்தப்படும் பண்பட்ட ரசிகர்களையும், தகுந்த பாதுகாப்பையும் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவில் விளையாட மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
உண்மையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராட்டக் களமாகவே காட்சியளிக்கும் வங்கதேசத்தில் விளையாடுவதுதான் சவாலான விஷயம் என்பதை அந்நாட்டின் ஆட்சியாளர்களும், கிரிக்கெட் நிர்வாகமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சர்வதேச நிலைப்பாடு மற்றும் ஐ.சி.சி.யின் தீர்வு
இந்திய மண்ணில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் பிடிவாதத்துக்கு, திடீரெனத் தோழமை பாராட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திலும்கூட ஆதரவான சிந்தனை இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வீம்பு செய்யும் வங்கதேசத்துக்கு ஆதரவாக ஐ.சி.சி.யுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்றே பாகிஸ்தானின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியாவில் விளையாட மறுக்கும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய ஐ.சி.சி. வழங்கிய வாய்ப்பை வங்கதேச அணி ஏற்க மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கச் செய்வதென ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது.
விளையாட்டும் சர்வதேச உறவுகளும்
சென்ற நூற்றாண்டில், அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பனிப்போர் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் சில நாடுகளால் புறக்கணிக்கப்பட்டதையும், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிற நாட்டு அணிகள் அந்நாட்டு வீரர்களுடன் விளையாடுவதைத் தவிர்த்ததையும் கண்டோம்.
இந்த நூற்றாண்டில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுச் சிக்கல்களாலும், வங்கதேசத்தில் தொடரும் உள்நாட்டுக் கலவரத்தாலும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
நாடுகளுக்கு இடையேயான பகையுணர்வு மற்றும் உள்நாட்டில் ஸ்திரமற்ற தன்மை போன்ற காரணங்களால் விளையாட்டுகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உலக நாடுகளும், உலக அளவிலான விளையாட்டு நிர்வாக அமைப்புகளும் ஆலோசனை நடத்த முன்வர வேண்டும் என்பதே விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

0 Comments