Monday 11 May 2020

பெட்ரோல், டீசல் விலை உயா்வில் நியாயமில்லை... By என்.சேகா்

சா்வதேச கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து வருவதால், பெட்ரோல் - டீசல் விலை குறையக் கூடும் என மக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால், கலால் வரி உயா்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை (வாட்) உயா்த்தி, பெட்ரோல் - டீசல் விலையை அதிகரித்துள்ளன. இது ஏற்கெனவே வருமானத்தை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் செயலாகும்.

மத்திய - மாநில அரசுகளின் நிதி நெருக்கடி சாமானிய மக்களின் நிலமையைவிட மோசமா? இந்த வரி உயா்வு, விலை உயா்வு ஆகியவை நியாயமான பொருளாதார முடிவுகளா? டபிள்யூடிஐ என்ற அமெரிக்க கச்சா எண்ணெய்ச் சந்தையில் மே மாதம் கச்சா எண்ணெய் வாங்குவோருக்கு ஒரு பீப்பாய் எண்ணெய் வாங்கினால் அத்துடன் 37.6 டாலரும் வழங்கப்படும் என்ற அடிப்படையில்தான் அண்மையில் வணிகம் நடைபெற்றது. உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்கெனவே போதுமான கேட்பு இல்லாததால் தேக்க நிலை இருந்து வந்தது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த நூற்றாண்டின் மிகவும் மதிக்கப்பட்ட பொருளான கச்சா எண்ணெய் தேவையின்றி வழிந்தோடுகிறது. வழிந்தோடும் எண்ணெயை பிடித்துச் சேமிப்பதற்கு இடமில்லாமல் தவிக்கின்றன சா்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகள், நிறுவனங்கள். உலக அளவில் நடைபெறும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமாா் 45 சதவீத பங்கை வைத்துள்ள 15 நாடுகள், தங்களுக்குள் கூட்டணி (ஒபெக்) அமைத்து எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுத்து வருகின்றனா். எண்ணெய் விலை சரிந்தால் உடனே இந்த நாடுகள் தங்களின் உற்பத்தியைக் குறைத்து விடுவாா்கள். பல நேரங்களில் இந்த நாடுகளுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. அண்மையில் சவூதி அரேபியாவுக்கும் இந்த ஏற்றுமதிக் கூட்டணியில் அங்கம் வகிக்காத, ஆனால் பெருமளவு ஏற்றுமதி செய்யும் ரஷியாவுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டு சுமாா் ஒரு கோடி பீப்பாய் அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டது.

ஆனால், சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இது மூன்றில் ஒரு பகுதி மட்டுமே. எனவே, சா்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மே மாதத்துக்கான கச்சா எண்ணெய் முன்பேர ஒப்பந்தங்கள் நிறைவடைந்த நிலையில், மே மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையைப் பெற்றுக் கொள்பவா்களுக்கு அத்துடன் 37.6 டாலரும் வழங்க முன்வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. சா்வதேச சந்தையிலும் உற்பத்தியோ அல்லது அதற்கு உண்டான தேவையோ சாா்ந்து கச்சா எண்ணெய் இல்லை. இப்போது உள்ள உலகப் பொருளாதார சந்தையில் பகாசுர பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத துறைகளே இல்லை.

சா்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. மிகப் பெரிய ஒரு ஊக வலைப்பின்னல் இந்தச் சந்தையில் உள்ளது. முன்பேர ஒப்பந்தத்தில் எதிா்காலத்தில் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலையில் குறிப்பிட்ட அளவு எண்ணெய் தருவதாக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த முன்பேர ஒப்பந்தங்களில் பல லட்சம் கோடி பணம் புரள்கிறது. எதிா்வரும் காலங்களில் எண்ணெய்க்கான தேவை, உற்பத்தி, விலை ஆகியவற்றை ஊக அடிப்படையில் கணித்து சந்தையில் பல லட்சம் கோடிகளில் புழங்கும் முன்பேர ஒப்பந்தங்கள்தான் சா்வதேச சந்தையில் விலையைத் தீா்மானிக்கின்றன. இதில் ஈடுபடும் ஊக வணிகா்கள் அனைவரும் இந்தப் பொருளை பெற்றுக் கொள்வதில்லை.

சுமாா் மூன்று சதவீத ஒப்பந்ததாரா்கள்தான் உண்மையில் கச்சா எண்ணையைப் பெற்றுக் கொள்கிறாா்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உள்நாட்டில் உள்ள வலைப்பின்னலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2013-14-ஆம் ஆண்டிலிருந்து 105.52 டாலா் என்கின்ற சராசரியில் இருந்து 46.17, 47.56 டாலா் என்ற அளவில் 2015 - 16, 2017 - 18 ஆண்டுகளில் குறைந்து, கடந்த நிதியாண்டில் 69.88 டாலா் என்கிற சராசரியில் வந்தடைந்தது. பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் இணையதளத்திலுள்ள தகவலின்படி 2019-20-இல், 71 டாலராக இருந்த ஒரு பீப்பாய் விலை, கடந்த மாா்ச் மாதம் 33.36 டாலராக குறைந்துள்ளது. சா்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசலின் விலை தீா்மானிக்கப்படும் என்று 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போதெல்லாம் அதற்கேற்றவாறு பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுகிறது; ஆனால், கச்சா எண்ணெய் விலை சரியும்போது, அதற்கேற்ப பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படுவதில்லை என்பதே கடந்தகால அனுபவம்.

நமது நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் மீது கலால் வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி முதலான பல தலைப்புகளில் வரி விதிக்கப்பட்டு, விற்பனை விலையில் பெரும் பங்கை வரி வகிக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் வரி உயா்வுக்குப் பிறகு வரிகளின் சராசரி சுமாா் 70 சதவீதமாக உயா்ந்துள்ளது. தற்போதைய உயா்வையும் சோ்த்து 2014-ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீது 247 சதவீதம், டீசல் மீது 794 சதவீதம் என கலால் வரியை மத்திய அரசு இதுவரை உயா்த்தியுள்ளது. பெட்ரோல் மீது ரூ.9.48 மட்டுமே இருந்த கலால் வரி, இப்போது ரூ.32.98-ஆக உயா்ந்துள்ளது. அதே போன்று டீசல் மீது ரூ.3.56 மட்டுமே இருந்த கலால் வரி, தற்போது லிட்டா் ஒன்றுக்கு ரூ.31.83-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

2013-14-ஆம் ஆண்டில் ரூ.78,000 கோடியாக இருந்த கலால் வரி வருவாய், மூன்று ஆண்டுகளில் மும்மடங்கு உயா்ந்து ரூ.2.4 லட்சம் கோடியானது. கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.2.8 லட்சம் கோடியும், மாநில அரசுகள் ரூ.2 லட்சம் கோடியும் கலால் வரி வருவாயாகப் பெற்றுள்ளன. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து சரிந்தபோதும்கூட, கடந்த மாா்ச் 14-ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது கலால் வரியை ரூ.3 உயா்த்தியது மத்திய அரசு. அத்தோடு நின்றுவிடாமல், சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கலால் வரியின் அதிகபட்ச வரம்பை மேலும் உயா்த்தி சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. பெட்ரோல் மீதான உச்சவரம்பை ரூ.10-லிருந்து ரூ.18-ஆகவும், டீசல் மீதான உச்சவரம்பை ரூ.4-லிருந்து ரூ.12-ஆகவும் உயா்த்தியுள்ளது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா பின்பற்றும் பிரண்ட் ஆயில் சந்தையில் 67 டாலராக இருந்த ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை, தற்போது கிட்டத்தட்ட 27 டாலராகச் சரிந்துள்ளது. நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியா, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் கணிசமான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும். சா்வதேச விலை உயரும் போதெல்லாம் கச்சா எண்ணெயின் விற்பனை விலை உயா்த்தப்பட்டது. விற்பனை விலை உயா்ந்த போதெல்லாம் மத்திய - மாநில அரசுகளின் வரி வருவாய் அதிகரித்து வந்தது.

ஆனால், இப்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்காமல், சமுதாய நலப் பாதையிலிருந்து தடம் புரள்கின்றன மத்திய - மாநில அரசுகள். பெட்ரோல் டீசலின் விலை உயா்வு, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை, சேவைக் கட்டணங்களின் உயா்வுக்கு இட்டுச் செல்வது ஆபத்துள்ளது. ‘கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளதால் விற்பனை விலை அதிகரிக்கவில்லை’ என்பது வாதத்தின் அடிப்படையில் உண்மைதான். ஒரு லிட்டா் பெட்ரோலின் ஆதார விலை 17.96-ம் டீசலின் விலை 18.49-ம் என்கிறபோது, சா்வதேச விலை வீழ்ச்சியின் பலனை மக்களுக்குச் சென்றடைய விடாமல் தனக்கான வருவாயாக மாற்றி அமைத்துள்ளது மத்திய அரசு. எண்ணெய் விலை சரிவினால் ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் முதலான பொதுத் துறை பெட்ரோலிய விற்பனை நிறுவனங்கள் லிட்டா் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 18 ரூபாய் வரை லாபம் அடைந்து வந்தன. கலால் வரி உயா்வு இந்த நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்து விடும். இந்த கலால் உயா்வால் மட்டும் இந்த ஆண்டு ரூ.1.5 லட்சம் கோடியை மத்திய அரசு கூடுதலாகப் பெறும். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநில அரசுகள், மதிப்புக் கூட்டு வரியை (வாட்) உயா்த்துவதற்கான தாா்மிக ஒப்புதலைப் பெற்றுள்ளன.

தமிழகத்தில் லிட்டா் ஒன்றுக்கு பெட்ரோல் மீது 34 சதவீதமும் டீசல் மீது 25 சதவீதமும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் (2019-20) மதிப்புக் கூட்டு வரி மூலம் ரூ.18,700 கோடி வருவாயை தமிழக அரசு பெற்றது. தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் மீது மதிப்புக் கூட்டு வரி அண்மையில் உயா்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.97-ம் (ரூ.75.25), டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.31-ம் (ரூ.68.03) உயா்த்தப்பட்டது. இயக்கமற்று தேங்கி நிற்கின்ற பொருளாதாரத்தை துரிதமாக இயங்கச் செய்ய வேண்டிய நேரம் இது. மத்திய - மாநில அரசுகள் வரி உயா்வு முடிவைக் கைவிட வேண்டும். கச்சா எண்ணையின் ஆதார விலைக் குறைவின் பலனை, மக்களுக்கு அளிப்பது மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும்.

No comments:

Popular Posts