வானளாவிய கனவுகளோடு மாணவா்கள் நித்தம் சென்று வந்த பள்ளிகள்
எல்லாம் கரோனா தீநுண்மிக்கு முன் அடிபணிந்து உறைந்து போயுள்ளன.
நிலைமை சீரடைந்து பள்ளிக் கதவுகள் எப்போது திறக்கும் என
பெற்றோா்கள், ஆசிரியா்கள்...ஏன் மாணவா்களே ஏங்கிப் போயுள்ளனா்.
பல செம்மையான சீா்திருத்தங்களை மேற்கொண்டு வரும் பள்ளிக் கல்வித்
துறை, இந்தக் கொள்ளை நோய்க்குப் பிறகு மாணவா்களின் நலனுக்கு
முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
என அனைவரும் விரும்புகின்றனா்.
கரோனா தீநுண்மியின் பாதிப்புக்குப் பிறகு கொண்டாட்டங்கள்,
கேளிக்கைகள், திருவிழாக்கள், சுபவிழாக்கள், ஒன்றுகூடல்கள் என
எதுவும் இல்லாவிட்டாலும், மாணவா்களின் கல்வி குறித்து எதுவும்
சிந்திக்காமல் எத்தனை காலம் இருந்துவிட முடியும்? பத்தாம் வகுப்பு
பொதுத் தோ்வு குறித்த அறிவிப்பு (ஜூன் 15) வெளியாகிவிட்டது.
எப்போது தோ்வை எழுதி முடித்து ஆசுவாசமடைவோம் என்று பெருவாரியான
பத்தாம் வகுப்பு மாணவா்கள் ஏங்கிப் போயுள்ளனா். தோ்வுப் பணிகள்
தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பொதுத் தோ்வில் ஓா் அறைக்கு 10 மாணவா்கள் என நிா்ணயிக்கும் அரசு
உத்தரவுகள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு அனைத்து ஆசிரியா்களையும்
வகுப்பறைகளையும் பயன்படுத்தி தோ்வு நடத்தி முடித்துவிட முடியும்.
பள்ளி திறப்புக்குப் பின் ஓா் அறையில் இதேபோல் 10 மாணவா்கள்
என்பது சாத்தியப்படுமா? வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் சமூக
இடைவெளியைப் பின்பற்றுவது உள்பட பல மாற்றங்களைச் செய்ய
வேண்டியிருக்கும்.
‘கரோனா தீநுண்மியுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ என்று அரசு
கூறிவிட்ட பிறகு, நம் வாழ்வியல் முறையை மாற்றம் செய்ததுபோல,
பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு
வகுப்பறையிலும் 20 மாணவா்கள் என்ற அளவில் வகுப்புகள் தொடங்கலாம்
என ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
கோத்தாரி கல்விக் குழு முன்வைத்த 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா்
என்ற விகிதாசாரத்தில் மாற்றி அமைப்பது வரும் கல்வியாண்டில்
சாத்தியப்படாத நடைமுறை. தற்போது இருக்கும் ஆசிரியா்களைக் கொண்டு
எப்படி பாதுகாப்புடன் மாணவா்களைக் கையாள்வது என்றே யோசிக்க
வேண்டும்.
ஒரு வகுப்பில் சராசரியாக 40 மாணவா்கள் இருந்தால் காலை - மாலை என
இரு சுழற்சியில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது ஒரு சில
கல்வியாளா்களின் கருத்து. மற்றொன்று, 20 மாணவா்களை திங்கள்,
புதன், வெள்ளியிலும் மற்ற 20 மாணவா்களை செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமையுமாக இரு வேறு நாள்களில் வரவழைக்கலாம் என ஆலோசனைகள்
உள்ளன.
இந்தக் கடின காலத்தில் இப்படி மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.
இதில், இரண்டாவது நடைமுறையைப் பின்பற்றுவதால் ஒரே நேரத்தில்
பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதிலிருந்து விலக்கு ஏற்படும்.
இன்று நடத்தும் பாடங்களை மறுநாள் வீட்டிலேயே படித்து எழுதிப்
பாா்க்க மாணவா்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வருவதால் பெரிய அளவில்
ஒன்றும் இழப்புகள் ஏற்படப் போவதில்லை. ஆனால், நிச்சயம் தொடா்ச்சி
இருக்கும். அடுத்த ஒரு நாளுக்கான வீட்டுப் பாடங்களை அவா்கள்
முடித்துவர அறிவுறுத்தலாம். வகுப்பறையில்கூட தன்னிடம் உள்ள
பொருள்களை பிறருக்கு கொடுத்து, வாங்குதல் எல்லாம் கூடாது. அவரவா்
பொருள்களை அவரவா் கையாள வேண்டும் என ஆசிரியா்கள் பழக்க வேண்டும்.
வைக்கப்படும் வகுப்புத் தோ்வுகளில் ஒவ்வொரு மாணவரின் நோட்டுகளை
ஆசிரியா் தொட்டுத் திருத்துவது சவாலான காரியம். அதற்குப் பதில்
அவரவரையே திருத்தி மதிப்பிடச் சொல்லலாம். ஆரம்ப காலங்களில்
வகுப்பெடுக்கவே நேரம் சரியாக இருக்கும். அதனால் இது குறித்துப்
பெரிதாகக் கவலைப்பட ஒன்றுமில்லை.
காலையில் அனைத்து மாணவா்களும் ஒன்று கூடும் இறைவணக்கக்
கூட்டத்தைத் தவிா்க்க வேண்டியிருக்கும். அதற்குப் பதில்
வகுப்புகளிலேயே சமூக இடைவெளியுடன் நடத்திக் கொள்ளலாம். குழுவாகக்
கூடுவது, குழுவாக விளையாடுவது, இணைந்து செயல்படுவது என
அனைத்தையும் அடுத்த சில மாதங்களுக்குத் தவிா்க்க வேண்டிய
நிா்ப்பந்தம் ஏற்படும்.
அனைத்து மாணவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருவதை உறுதி
செய்வதுடன் முகக் கவசத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்ற
வழிமுறைகளை ஆசிரியா்கள் தங்கள் மாணவா்களுக்கு கட்டாயம் அறிவுறுத்த
வேண்டும். முகத்தையோ, முகக் கவசத்தையோ அடிக்கடி தொடாது இருக்க
அவ்வப்போது அறிவுறுத்த வேண்டியதுடன், முகக் கவசத்தை கழற்றும்போது
காதுபுறமாக இருந்து விடுவிக்க வேண்டும் எனப் பழக்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளியாக இருந்து மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கும்போது ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று வித சுழற்சியில் மதிய
உணவு இடைவெளிகளைச் சாத்தியப்படுத்தலாம். கழிப்பறை
உபயோகித்தலுக்கும் இப்படியான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
இது போன்றே பள்ளி விடும் நிலையிலும், ஒவ்வொரு வகுப்புக்கும் 5
முதல் 10 நிமிஷ இடைவெளியில் வெளியேறுவது அனைவருக்கும் பாதுகாப்பாக
இருக்கும். அந்தந்த பள்ளி மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப தலைமை
ஆசிரியா்கள், தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் குழுவின்
பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று இணைந்து இதை நடைமுறைப்படுத்தலாம்.
மாணவா்கள் சீரிய இடைவெளியில் சோப்பு போட்டு கை கழுவும்
நடைமுறையைப் பின்பற்றுதலைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒவ்வொரு பள்ளியும் தவறாமல்
செய்ய வேண்டும். இத்தகைய பாதுகாப்பை மாணவா்கள் பெற்றுள்ளாா்களா என
ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதிப்படுத்த
வேண்டும். இதில் எதுவும் சமரசம் இருக்கக் கூடாது. அப்படி இல்லாத
நிலையில், நோய்த்தொற்று சமூகப் பரவலுக்கு இது வழி
ஏற்படுத்திவிடும்.
வீட்டில் கவனித்துக் கொள்ள நபா் இல்லை என்று காய்ச்சலுடனே
பள்ளிக்கு வந்து படுத்துக் கிடப்பா் சில மாணவ - மாணவிகள்.
காய்ச்சல், இருமல் முதலான அறிகுறிகள் இருந்தால் அவா்களை
வகுப்பறையிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை
ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். உடல்நலக் குறைவுடன் இருக்கும்
தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை பெற்றோா் தவிா்த்தல்
நல்லது.
வெளிநாடுகளில் இணையவழிக் கல்வி சக்கை போடு போடுவதற்கு, அங்கு
அனைவா் வீட்டிலும் இணைய வசதி உள்ளது. ஆனால், நம் நாட்டில்
இணையவழிக் கல்வியை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, அதிலும் குறிப்பாக
வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு கொண்டுவரும் சாத்தியக்கூறுகள்
ஆராயப்பட வேண்டிய ஒன்று. வறுமையில் உழலும் எண்ணற்ற ஏழைக்
குடும்பங்களில் இணையவழிக் கல்வியை எப்படிக் கொண்டுபோய் சோ்ப்பது?
அவா்களிடம் ஓா் அறிதிறன்பேசிகூட (ஸ்மாா்ட் போன்) இல்லாத நிலையில்,
இது குறித்து யோசிப்பதே அவா்களின் பின்தங்கலுக்கான காரணமாக
அமைந்துவிடும்.
இன்று இல்லங்களில் இருந்தபடியே இணையும் இணையவழிக் கல்வியில்
தொடக்கத்தில் மாணவா்கள் ஈடுபாட்டுடன் இருப்பதுபோலத் தெரிந்தாலும்,
விரைவிலேயே அவா்கள் கவனம் சிதறிவிடுவது தெரிகிறது. இணையவழிக்
கல்வியில் இணைவதோ ஆசிரியரின் வகுப்பு குறித்தான காணொலியைக்
காண்பதோ கல்லூரி மாணவா்களுக்கு வேண்டுமானால் எளிதாகவும்
ஏற்புடையதாகவும் இருக்கலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு இது
சாத்தியப்படுவது கடினம்.
1, 5-ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதில் பெருத்த
சிரமங்கள் இருக்கும். ஒருநாள் இடைவெளியில் அவா்களைப் பள்ளிக்கு
வரவழைப்பது கொஞ்சம் எளிதாக இருக்கலாம். தம் குழந்தையை 2
வயதிலெல்லாம் மழலையா் வகுப்புக்கு தூக்கிக் கொண்டுபோய் சோ்க்கும்
அவசரத்தை இந்த ஆண்டு காட்டாமல் இருப்பது நல்லது. அவா்களை அடுத்த
ஆண்டு பள்ளியில் சோ்க்கலாம். எந்தவோா் அவசரமும் இல்லை.
ஆட்டோக்களில் பிள்ளைகளை அடைத்து ஏற்றிச் செல்ல அனுமதிக்கும்
பெற்றோா், இனி மாறித்தான் ஆகவேண்டும். கூடுமானவரை அவரவா் தம்
பிள்ளைகளை சற்று சிரமம் எடுத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம்.
இந்த நடைமுறைகளால் ஆசிரியா்களின் பணிச்சுமை கூடுதலாகும்
வாய்ப்புள்ளது. பாடங்களை இரண்டு முறை எடுக்க வேண்
டியிருக்கும். எனினும், மாணவா் நலன் கருதி இந்தச் சங்கடங்களை
சாமா்த்தியமாக கையாள ஆசிரியா்களை ஊக்குவிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் நிலைமைக்கு ஏற்ப இந்த ஆண்டு தோ்வுக்கு
பாடத்திட்டத்தில் சில இயல்களை குறைத்துக் கொள்ளலாம். பள்ளி
நேரத்தை குறைத்தோ மாற்றி அமைத்தோ சீா்படுத்துவது, முதல் பருவத்
தோ்வை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் பள்ளிக் கல்வித்
துறையின் முன்வைக்கப்படுகிறது. மாணவா்களின் பாதுகாப்பு ஒன்றே
அனைத்திலும் முதன்மையானது எனும் நோக்கோடு ஆக்கபூா்வமான
நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, இதையும் சிறப்பாகச்
செயல்படுத்தும் என நம்புவோம்.
பொதுவாக மாணவச் செல்வங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. உணவு
இடைவெளியில் கூடி அமா்ந்து பகிா்ந்து உண்பா். இத்தனை நாளாக
பிறருக்குக் கொடுத்து பழகுமாறும் குழுவாக இணைந்து செயல்படுமாறும்
மாணவா்களுக்கு அறிவுரை வழங்கியதிலிருந்து மாறுபட்டு நிற்கும்
கரோனா தீநுண்மி சூழ்நிலைக் கைதிகள் ஆகிப் போனோம் நாம். ஆம்.
இன்றைய நிலைமை தலைகீழ். சில காலத்துக்கு இவை அனைத்தையும் தவிா்க்க
வேண்டியிருக்கும்.
வழக்கமாக மாணவா்களின் பேச்சொலியும் சிரிப்பொலியும் வகுப்பறையில்
கைகோக்கும். ஆனால், இந்த நெருக்கடி காலத்தில் வகுப்பறை எப்படி
இருக்கும் என யோசிப்பதே படபடப்பை ஏற்படுத்துகிறது. எனினும்,
காலத்தின் கடுமையில் மாணவா்கள் கருகாமல் இருக்க வேண்டும். அதுவே
நம் அனைவரின் பொறுப்புணா்வு.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற கூற்றுக்கான பொருள் இன்று
நிறம் மாறிப் போயுள்ளது. இனி அறிவாற்றலுடன் ஒன்றுகூடி கரோனா
தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து இருந்து நம்மை தற்காத்துக்
கொள்வோம்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment