அடிப்படைத் தேவை - உணவு:
மனிதன் உயிர்வாழ இன்றியமையாதவை உணவு, உடை, இருப்பிடம். இவற்றில், இருப்பிடம் மற்றும் போதுமான உடை இல்லாமலும் பலர் வாழ்ந்தாலும், உணவு என்பது மனிதனின் அன்றாட, அத்தியாவசியத் தேவையாக உள்ளது. உணவு, மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது. ஆனால், உலகில் உணவு விநியோகத்தில் நிலவும் சமநிலையற்ற தன்மையால், பசியுடன் வாழும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. ஜாதி, மதம், மொழி, நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுகளில் முதன்மையானது பசி. "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் மகாகவி பாரதியார்.
உலக அளவில் பட்டினியின் நிலை:
உலகில் சுமார் 81 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர், பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. பசியுடன் இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், பெரும்பாலான குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் போதிய உணவு கிடைக்காததே ஆகும். காசநோய், எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு:
இந்தியாவில் நாள்தோறும் 30 கோடி பேர் இரவு உணவின்றி உறங்கச் செல்வதாகவும், சுமார் 18 கோடி பேர் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்வதாகவும் ஓர் கணக்கீடு தெரிவிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை. உலக அளவில் 8 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு - வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பசிக் கொடுமையை அனுபவிக்கின்றனர். அகதிகளாக வாழ்பவர்களும் உணவுக்காகப் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வறுமைக்கான வரையறை:
ஒருவர் ஆரோக்கியமாக இருக்க, நாள்தோறும் உணவின் மூலம் 2,100 கலோரி ஆற்றல் தேவை என ஐ.நா. வரையறுத்துள்ளது. அன்றாட உணவில் எவ்வளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவரின் வறுமை நிலை கணக்கிடப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட மூன்று வேளை உணவு கிடைக்காமல் வாடுவோர் உள்ளனர். உலகம் முழுவதும் போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உணவு வீணாவது வேதனை:
பசியால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுவது வேதனைக்குரியது. மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீணாக்குவதாகவும், திருமண மண்டபங்களில் சராசரியாக 10 முதல் 100 பேர் சாப்பிடும் உணவு வீணாவதாகவும் ஓர் ஆய்வு கூறுகிறது. உணவகங்களில் விலை கொடுத்து வாங்கும் உணவுகளை வீணாக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. பாதி உணவைச் சாப்பிட்டுவிட்டு, மீதியை வீணாக்குவதை நாகரிகமாக நினைத்துப் பலர் செயல்படுகின்றனர். வீடுகளிலும் அதிக அளவு உணவு வீணாக்கப்படுகிறது. பசியால் வாடுவோரைவிட, வீணாகும் உணவுப் பொருள்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதைப் பலர் உணராமல் இருக்கின்றனர். உற்பத்தி, பகிர்வு, நுகர்வு ஆகிய அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு தொடர்பான பல பிரச்னைகளுக்குக் காரணம்.
தீர்வு நோக்கிய நடவடிக்கைகள்:
பல்வேறு காரணங்களால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 960 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட்டினியைக் கட்டுப்படுத்தவும், முற்றிலும் போக்குவதற்குமான நிலையான தீர்வு காணவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. பட்டினியால் வாடுவோரை நினைவுகூரும் வகையிலும், அந்த நிலையை ஒழிக்கவும் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி உலக பட்டினி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தனிநபர் மற்றும் சமூகப் பொறுப்பு:
இந்த தினமே இருக்கக் கூடாது என்ற வகையில், பட்டினி இல்லாத நிலையை உருவாக்க ஒவ்வொரு நாடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பசியால் அவதிப்படும் மனித உயிர்களைக் காக்க முடியும். அரசு மட்டுமின்றி, உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீதமாகும் உணவுகளைக் குப்பைக்கு அனுப்பாமல், உணவுக்காக வாடுவோருக்கு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், ஒவ்வொரு தனிநபரும் முடிந்தவரை உணவின்றி வாடுவோருக்கு உணவு வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பசியைப் போக்குவதில் தனிமனிதனின் பங்கும் மிக அவசியம்.


0 Comments