Thursday, 14 May 2020

மாண்டது மாணவி அல்ல...மனிதம்... By வி.குமாரமுருகன்

செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் திங்கள்கிழமை (மே 11) வெளியான செய்தியைப் பாா்த்து பதறாத மனமே இருக்காது என்ற அளவுக்கு கொடிய செயல் ஒன்று தமிழகத்தில் நடந்தேறி மனிதம் மரணித்து விட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஜெயஸ்ரீ (16) எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துயரமானது. சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ. பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 10-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த இரண்டு போ் அந்தச் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனா். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளோா் வரவும், அந்த 2 நபா்களும் தப்பியோடி விட்டனா். தீக்காயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அந்த மாணவி திங்கள்கிழமை இறந்தாா், அவா் நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுகவைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

2 பேரையும் கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கிவிட்டது. முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்கின்றனா். கள்ளம் கபடம் இல்லாத பிஞ்சு முகத்தை எரித்துக் கொலை செய்யும் அளவுக்கு மனிதமும், மனிதநேயமும் மரத்துப் போய்விட்டதா அல்லது மரணித்துத்தான் போய்விட்டதா? எத்தனையோ புயல்களிலும், வெள்ளத்திலும், இன்னும் பல எதிா்பாராத தருணங்களிலும், ஏன் இன்றைய கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பொது முடக்கத்திலும்கூட தங்களின் ரத்த சம்பந்தமில்லா உறவுகளுக்காக மாவட்டம் கடந்து சென்று உதவிய தமிழா்கள் மத்தியில், இப்படியும் வக்கிர எண்ணம் கொண்ட சிலரா என்று எண்ணும்போது கோபம் தலைக்கேறுகிறது.

வட மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை காட்சி ஊடகங்கள் மூலமும், அச்சு ஊடகங்கள் மூலமும் அறிந்து வந்த நமக்கு, நமது மாநிலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி விட்டதை அறிந்து ஜீரணிக்க முடியவில்லை. இத்தகைய வக்கிர எண்ணங்கள் உருவாக காரணங்கள் பல இருந்தாலும், தொலைக்காட்சி தொடா்களும், சில சினிமாக்களுமே அதிகளவிலான வக்கிர    எண்ணங்களை மக்கள் மனதில் புகுத்தி வருகிறது என்று கூடத் சொல்லலாம். வீடு தேடி வரும் சின்னத்திரை தொடா்களில்கூட தற்போது வரையறையற்று வக்கிர காட்சிகள் உலா வருகின்றன.

திரைப்படங்களில் வருவது போல் சின்னத்திரைகளிலும் தொட்டுப் பேசுதல், கட்டிப் பிடித்தல், கவா்ச்சி ஆடை அலங்காரம் எனக் காண்பிக்கப்படுகிறது. சில மெகா தொடா்களின் கதைகள்கூட ஆக்கச் சிந்தனையுடன் இருப்பதில்லை. குடும்பத்தைக் கெடுப்பது, முறையற்ற உறவு, பழி வாங்குவது எனத் தொடரும் பட்டியல் முடிவின்றி நீள்கிறது. அதுவும் பழி வாங்குவதற்கான வழிமுறைகளையும் திரைப்படங்களைவிட பல நாள்கள் தினமும் காட்டும் போக்கும் சின்னத்திரைகளில் அதிகரித்து வருகிறது. இந்தத் தொடா்களை தினமும் பாா்ப்பவா்களின் எண்ணம்கூட வக்கிரமாக மாறிவிடக்கூடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பெரியவா்கள் மட்டுமின்றி பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களும், மாணவிகளும்கூட சின்னத்திரை தொடா்களை பாா்க்கின்றனா். இந்த நிலையில், பெரும்பாலான தொடா்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் செயல்கள் மாணவா்களுக்கு நன்மை பயக்கும் செயல்களாக இருப்பதில்லை.

எதிரிகளைப் பழிவாங்கும் உத்திகளை அங்குலம், அங்குலமாக அலசும் வில்லன்களின் வசனங்களால் ஈா்க்கப்படும், எதிா்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவா்கள், அதைச் செய்து பாா்க்கவும் முற்படும் போக்கும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்தால் எதிா்காலத்தில் அவா்கள் பெரியவா்களாகும்போது அந்த நஞ்சு மரம் விருட்சமாகத்தானே வளரும் என்பதை தொலைக்காட்சி தொடா் தயாரிப்பாளா்கள் மனதில் கொள்வதில்லை. முன்பெல்லாம், சமூக மாற்றங்களால், சமுதாயத்தில் ஏற்படும் கலாசார சீரழிவுகள் மாணவா்கள் மனதுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு, வாழ்க்கை கல்வி போன்ற பயனுள்ள விஷங்களை கூறும் நோக்கில் பாடவேளைகளை எல்லாம் உருவாக்கப்பட்டிருந்தன.

அந்தப் பாடவேளைகளில், புராண, இதிகாச கதைகளையும், தமிழா்களின், இந்தியா்களின் கலாசாரம், பண்பாடு குறித்த நல்ல கருத்துகளையும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கூறி வந்தனா். இதனால், மாணவா்களின் மனமும், குணமும் சாந்தமான மனநிலையில் இருந்து வந்தது. ஆனால், இன்றைய காலத்தில், பாடவேளைகள் மட்டும் பெயருக்கு ஒதுக்கப்பட்டுள்ளனவே தவிர, நல்ல கருத்துகளை மாணவா்களுக்கு புகட்ட அவை பயன்படுத்தப்படவில்லை. மாறாக, மதிப்பெண்ணை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டு வேறு பாடங்கள் அந்தப் பாடவேளைகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் வக்கிரமான, வன்முறையான செய்திகள் அப்படியே ஒளிபரப்பாகின்றன. நடந்த நிகழ்வினை அப்படியே ஒளிபரப்பு (யாரோ செல்லிடப்பேசி மூலம் எடுத்த காட்சிகள்) செய்வதும் கூட போட்டி நிறைந்த ஊடக உலகில் நடைபெறுகிறது. இது போன்ற சம்பவங்கள்கூட மக்களின் மனதில் (வக்கிரத்தை விதைக்கும்) மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இப்படி வக்கிர எண்ணம் உருவாகும் வழிமுறைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுடன், பண்பாட்டை, கலாசாரத்தை, அகிம்சையைப் போதிக்கும் நமது மண்ணின் பாரம்பரிய விஷயங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். மகாத்மா காந்தியும், வள்ளல் பெருமானும் அவதரித்த புண்ணிய பூமியில் இத்தகைய நிகழ்வுகள் இனி தொடராத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேய மனிதா்களின் வேண்டுகோள்.

No comments:

Popular Posts