Sunday 26 April 2020

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் கரோனா! By பொ. குழந்தைவேல்

அண்ட சராசரங்களையும் அடக்கி ஆண்டு வரும் அறிவியல், இன்று கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு கரோனா தீநுண்மியை (வைரஸ்) கண்டு அஞ்சி நடுங்கி வருகிறது. கரோனா தீநுண்மிகள் போன்றவற்றை இந்த உலகம் பார்த்தது இல்லையா? மனிதகுலம் இதுபோன்றதொரு தீநுண்மியால் மடிந்தது இல்லையா? அப்படித் தோன்றிய தீநுண்மிகளை அழிக்க மருந்துகள் உருவானதில்லையா? ஏனிந்த மரண பீதி? கடந்த காலங்களில் உருவான தீநுண்மிகள் குறித்து அறிதல், அச்சம் தீர்க்கும் மன நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். வைரஸ் என்றழைக்கப்படும் தீநுண்மியின் மூலத்தை முதன்முதலில் 1887-ஆம் ஆண்டு டிமிட்டிரி ஐவனாஸ்கி என்ற ரஷிய நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானி கண்டறிந்தார். செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் பல்கலைக்கழகத்தில் ஐவனாஸ்கி பணியாற்றும்போது உக்ரைனில் உள்ள பாசர்பியா வட்டாரத்தில் புகையிலைப் பயிர்களைத் தாக்கிய நோய் குறித்து ஆராய்ச்சி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அவர் 1892-ஆம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் அந்தப் புகையிலை நோய் ஒரு தொற்றுக் கிருமியினால் உருவானது என்றார். வைரஸ் என்றால் லத்தீன் மொழியில் நச்சு என்று பொருள். வைரஸ் எனப்படும் தீநுண்மிகள் அளவிலும், கூட்டமைவிலும் சிறியதாகவும் துகள்களாகவும் காணப்படும். ஆனால், பாக்டீரியாவைப்போல இது ஓர் உயிரணு (செல்) கிடையாது. எனவேதான், தீநுண்மியால் (வைரஸ்) பாக்டீரியாவைப்போல புறவெளியில் தன்னு டைய பெருக்கத்தை நிகழ்த்த முடிவதில்லை. தீநுண்மியின் நடுப்பகுதியில் பெரும்பாலும் இரைபோ கருவமிலம் எனப்படும் ஆர்என்ஏவும் அதனைச் சுற்றி புரதமும் காணப்படுகின்றன. தீநுண்மி (வைரஸ்) தனியாக இருக்கும் வரை அதற்கு எவ்விதத் தனித்த ஆற்றலும் கிடையாது. ஆனால், அது வளர்வதற்கு உயிரணு எனப்படும் செல் கிடைத்தால், உடனே அதற்குள் சென்று அந்த உயிரணுவில் உள்ள புரதத்தை எடுத்துக்கொண்டு தன்னைப் பெருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டதாக உள்ளது.

அதன் பின்னர், அந்தத் தீநுண்மி மீண்டும் வெளியே வந்து அடுத்த உயிரணுவுக்குள் சென்று பெருக்கத்தை உண்டாக்கும். அப்போது அந்த உயிரணுவுக்கு நோய்த்தொற்று ஏற்படும். தாவரங்களை, பறவைகளை, விலங்குகள், மனிதர்களை இந்தத் தீநுண்மிகள் பாதிக்கும். சில கிருமிகள் பறவைகள், விலங்குகள், மனிதர்களை மட்டும் பாதிக்கும் இயல்பு கொண்டவையாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு பிளேக், பெரியம்மை, போலியோ, மஞ்சள் காமாலை, ரேபிஸ் போன்ற நோய்களில் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். வெவ்வேறு தீநுண்மிகள், மனித உடலில் வெவ்வேறு உறுப்புகளைப் பாதித்து உயிரிழப்பை உருவாக்குவதே இதற்கெல்லாம் காரணமாகும். ஆனால், அறிவியல் வளர வளர தீநுண்மிகளின் தன்மைகள் புரிந்துகொள்ளப்பட்டு, அதற்கான நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று அந்த நோய்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

1918-ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் முடிவுக்கு வரும் வேளையில், அந்தப் போரில் ஈடுபட்ட அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். அதே நேரத்தில் ஸ்பெயின் மக்கள் அதே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்தனர். ஃப்ளு காய்ச்சலுக்கான தீநுண்மியில் ஹீமோகுளுட்டினின், நியூராமினிடேஸ் என்ற இரண்டு புரதங்கள் உள்ளன. ஸ்பெயின் ஃபுளு என அறியப்பட்ட தீநுண்மி உலகம் முழுவதும் பரவியதால், சுமார் 5 கோடி மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரழிவுக்குப் பிறகு அறிவியல் உலகிலும், மற்ற துறைகளிலும் ஏற்பட்ட வளர்ச்சி தீநுண்மிகள் (வைரஸ்கள்) குறித்த ஆராய்ச்சியில் அதிக நாட்டத்தை உருவாக்கின. மீண்டும் அந்தத் தீநுண்மிகள் தங்களின் வடிவில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு 1957-ஆம் ஆண்டு ஆசியன் ஃப்ளுவாக சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 40 லட்சம் மக்கள் உயிரைப் பறித்தது. 1968-ஆம் ஆண்டு ஹாங்காங் ஃபுளு உருவானதால் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதேபோல, 2004-ஆம் ஆண்டு ஹெச்5என்5 தீநுண்மி உருவாகி பன்மடங்காகப் பெருகி பறவைகள், மனிதர்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது.

2009-ஆம் ஆண்டு உருவான ஹெச்1என்1 தீநுண்மி, 18,000 பேரைப் பலி கொண்டது. இந்தத் தீநுண்மி முதன்முதலில் பன்றியைத் தாக்கி, அதில் பெருக்கம் அடைந்து, பின்னர் மனிதர்களிடையே பரவியது. எனவே, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் தாக்கும் திறன் கொண்டதாக இந்த வகை தீநுண்மிகள் உள்ளன. விலங்குகள் அல்லது பறவைகளின் உடலில் உருவாகி வளர்ச்சியடையும் இந்தத் தீநுண்மிகள், மனித உயிர்களைத் தாக்கும்போது அதன் வீரியம் சற்று அதிகமாகவே இருக்கும். டெங்கு, சிக்குன்குன்யா, எபோலா என நீள்கிறது தீநுண்மிகளின் (வைரஸ்கள்) பட்டியல். 2002-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொவைட் என்ற புதிய தீநுண்மி பரவி பலர் உயிரிழந்தனர். அது ஹெச்1என்1 கிருமியிலிருந்து வேறுபட்டிருந்தது. அதனுடைய ஆர்என்ஏவும் அதைச் சுற்றியுள்ள புரதமும் வேறுபட்டிருந்தன. கரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள். சார்ஸ் எனப்படும் கொவைட் கரோனா, அதிதீவிரமாகப் பரவக்கூடிய சுவாசம் சார்ந்த பெருந்தொற்று நோயாகக் கண்டறியப்பட்டது.

இந்தத் தீநுண்மி 2012-ஆம் ஆண்டு ஒட்டகத்தில் உருமாறி மீண்டும் மனித உயிர்களைத் தாக்கி, சுமார் 1,000 உயிர்களைப் பறித்தது. இப்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மி, சீனாவில் வூஹான் என்ற பகுதியில் மீன் சந்தைக்குச் சென்றவர்களிடையே பரவி, பின்னர் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இந்தத் தீநுண்மி வெளவால், எறும்புத் திண்ணி போன்ற விலங்குகளுக்குச் சென்று தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு, தன்னுடைய இரைபோ கருவமிலம் உள்ள சில நியூக்ளியோடைட்டில் இடம் மாற்றிக்கொண்டு உருமாறி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்போதும் இதுபோன்ற புதிய தீநுண்மிகள் உடலுக்குள் வரும்போது நம் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் அதனைத் தாக்கத் தொடங்கும். தீநுண்மிகளின் வீரியம் குறைவாக இருந்தால் நம் உடலில் உள்ள எதிர்ப்பணுக்கள் மிகச் சாதாரணமாக அந்தத் தீநுண்மிகளை அழித்து விடும். ஸ்பெயின் ஃப்ளுவில் உருவான தீநுண்மிகள் நாளடைவில் மாறுதலுக்குள்ளாகி ஒவ்வொரு காலகட்டத்திலும் உயிரினங்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்தத் தீநுண்மி அடுத்த முறை வரும் போது தன்னை மாற்றம் செய்துகொண்டு வருவதால், அதை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால்தான் இந்த நூற்றாண்டில் பரவிய பல தீநுண்மித் தொற்றுகளை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. இப்போது உருவாகி உள்ள கொவைட்19 தீநுண்மி, 2002-ஆம் ஆண்டு சீனாவில் உருவான தீநுண்மியிலிருந்து சற்று மாறுபட்டதாகும். கொவைட் தீநுண்மி மனித உடலுக்குள் மூக்கு, கண், வாய் வழியாக நுழைந்து நுரையீரலின் மேற்பரப்பில் உள்ள செல்லில் உள்ள ஆன்ஜிநோடிசன் என்சைம் வழியாக செல்லுக்குள் நுழைகிறது. பிறகு, இந்தத் தீநுண்மி நுரையீரல் உயிரணுக்களிலுள்ள எண்டோசம் பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள புரதத்தை எடுத்துக்கொண்டு ஆர்என்ஐ மரபணுக்களில் பல பிரதிகளை அதேபோல உருவாக்குகிறது. பிறகு, அது ஒவ்வொன்றும் ஒரு தீநுண்மியாக (வைரஸ்) உருப்பெறுகிறது. தொடர்ந்து நுரையீரலில் உள்ள உயிரணுக்கள் நோய்வாய்ப்பட்டு மரணத்துக்கு வழிவகுக்கிறது. நுரையீரல் தொற்று, நிமோனியா - மூச்சுத்திணறல் முதலான உயிரைப் போக்கும் விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. கடந்த நூற்றாண்டில் பரவிய ஸ்பெயின் ஃப்ளுவுக்குப் பிறகு வந்த எல்லா தீநுண்மிகளும் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும்தான் பரவின.

ஆனால், தற்போதைய கரோனா தீநுண்மி உலகம் முழுவதும் பரவியுள்ளது. எனினும், இந்தத் தீநுண்மி காற்றில் பரவவில்லை என்பதும், பறவைகளுக்குப் பரவவில்லை என்பதும் சற்றே ஆறுதலான செய்தி. இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் தங்களின் இனத்தை இனப்பெருக்கம் செய்யவும், தங்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு வாழவும் ஏற்ற எல்லாத் திறன்களையும் பெற்றுள்ளன. அதேபோலத்தான் தீநுண்மிகளும் (வைரஸ்கள்) மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டும், தங்களுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டும், இனப்பெருக்கம் செய்துகொண்டும் மனிதன் அறிந்த அறிவியலை ஏமாற்றி வாழ்ந்து வருகின்றன. கரோனா தீநுண்மி மாதிரியான சவால்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். உயிரற்றவைகளைப் பற்றி அறிந்த அறிவியல், உயிருள்ளவற்றை ஆராய்ந்து அறிய முடியாமல் தடுமாறுகிறது. அதற்கு அதில் அடங்கியுள்ள அதிவேக ரசாயன மாற்றங்களும், அதுவே தனக்குப் பல கட்டளைகளைப் பிறப்பித்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றக் கற்றுக் கொண்டதுதான் காரணம் ஆகும். கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல கோடி ஆண்டுகளாக இயற்கை தன்னைத் தானே உயிர்ப்பித்து பல உயிரினங்களையும், மனிதகுலத்தையும் காத்து வருகிறது. தனித்திருப்போம். கரோனாவும் கடந்து போகும். கட்டுரையாளர்: துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

No comments:

Popular Posts