Sunday 26 April 2020

சமூக ஊடகங்களும் சமூகப் பொறுப்பும் By வி. குமாரமுருகன்

உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைத் தடுக்க அனைவரும் போராடி வரும் நிலையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு, சமூக அக்கறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கரோனா தீநுண்மி தாக்குதலின் அறிகுறிகள் என்ன, அத்தகைய அறிகுறிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் முதலான விளக்கங்களை, உலக சுகாதார நிறுவன ஆலோசனையின்படியும் அதன் சார்பு அமைப்புகளின் ஆலோசனையின்படியும் நாடுகள் தத்தமது மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றன. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணி உலக அளவில் மிக விரைவாக நடைபெறுகிறது. அப்படிக் கண்டறிந்தவர்களின் விவரங்கள் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருவதுடன், கண்காணிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் எனப் புலம் பெயர்ந்தவர்களை அடையாளம் கண்டு வருவாய்த் துறை, நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பு, காவல் துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் தனிமைப்படுத்தும் பணியும், வெளிநாடு - வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியும், வந்திருக்கும் நபர்களின் கையில் அடையாள முத்திரை பதிக்கும் பணியும்கூட துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் ஆணையத்தினர் முதலானவர்கள் நம்மைத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாட்டைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சமூகத் தொற்றாக மாறிவிடாமல் தடுக்கும் வகையில், வரும் மே 3-ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் இது குறித்து தினமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி உண்மையான விவரங்களை தெரிவித்து வருவதுடன், தேவைப்படும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் என்பதை காட்சி, அச்சு ஊடகங்கள் தினமும் தெரியப்படுத்தி வருகின்றன. ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைக் கடந்தது கரோனா தொற்று என்பதைக்கூட இன்னும் சிலர் புரிந்துகொள்ளாமல் இருப்பதை, சமூக ஊடகங்களில் உலா வரும் தேவையற்ற செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள் என அனைவருமே மக்களுக்காக சேவையாற்றக் கூடியவர்கள். எனினும், கட்செவி அஞ்சல், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக நாள்தோறும் சிலர் தவறான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருவது சமூக ஒற்றுமையைக் குலைக்கும் செயலாகும். இந்தியாவைப் பொருத்தவரை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பது குறித்து அரசு தெளிவாகத் தெரிவித்து, பரவலைத் தடுக்க தனித்திருங்கள் என்று தெரிவித்தும்கூட, அதைப் புரிந்து கொள்ளாமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உண்மைக்குப் புறம்பான செய்திகளை, சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து மக்களை பீதியடையச் செய்கின்றனர்.

உண்மையிலேயே தெளிவான சிந்தனை உடையவர்கள் ஆக்கச் சிந்தனைகளை முடிந்தவரையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குப் பரப்ப வேண்டும். உண்மையான தகவல்களைத் தெரியப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு வீட்டில் பொழுது போகாமல் சும்மா தானே இருக்கிறோம், வெளியே சென்றால் காவல் துறை எச்சரிக்கிறார்களே என்ற கோபத்தில், ஏதோ ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவோமே என்று எண்ணி செயலாற்றுவது இந்த சமூகத்துக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரும் துரோகம்தான். தடை உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைக்கூட "மீம்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் தவறாகச் சித்தரித்து பதிவேற்றம் செய்யும் நபர்களை என்னவென்று சொல்வது? கரோனா தீநுண்மி வேகமாகத் தொற்றிவிடக் கூடாது. நமது தனித்திருக்கும் செயலால், அந்தத் தொற்று தோற்றுப் போக வேண்டும் என்பதற்காகத்தானே காவல் துறையினர் எச்சரிக்கின்றனர்.

சில நேரங்களில் நடவடிக்கைகளை எடுத்தால்தான் நிலைமை கட்டுக்குள் வரும். இது காவல் துறையின் பணி. அப்படிப் பணி செய்யும் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஊடகங்களில் விமர்சனம் செய்வது எந்த அளவுக்குச் சரியாக இருக்க முடியும்? சமூக ஊடகங்கள் வாயிலாக எத்தனையோ விழிப்புணர்வு பிரசாரங்களை நம்மால் செய்ய முடியும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் முதலான விவரங்களை நாம் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து தெரியப்படுத்தினால், அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமையும். அதை விடுத்து தவறான செய்திகளைப் பரப்பினால், நாம் சமூகத்துக்குத் துரோகம் செய்கிறோம் என்பதுதானே அர்த்தம். சமூக ஊடகங்களும் இது போன்ற தவறான தகவல்களை தாங்களே நீக்க வேண்டிய காலகட்டம் இது. இது சாதாரண விஷயமல்ல. தவறான செய்திகள் மனிதர்களின் மன வலிமையைச் சீரழித்து விடும் என்பதை சமூக ஊடகங்களும் உணர்ந்து அவற்றைக் களைவதில் முனைப்புக் காட்ட வேண்டும். எனவே, இனியாவது சமூக ஊடகங்களை சமூகப் பொறுப்புடன் பயன்படுத்துவோம் என சூளுரைப்போம்.

No comments:

Popular Posts