Thursday 2 April 2020

ஊரடங்கல்ல.. உலகடங்கு சட்டம் போட்ட கரோனா...

டாக்டர். வ. மாசிலாமணி வித்யா

டாக்டர் வ. மாசிலாமணி
இந்தியாவில் எங்கேனும் கலவரம் என்றால் முதலில் 144 தடை சட்டம் போடுவார்கள். அதன்படி ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது. அதற்கும் கலவரம் அடங்காவிட்டால் ஊரடங்குச் சட்டம் போடுவார்கள். யாரும் வெளியே தலை காட்டக்கூடாது அவசரத் தேவைக்கு வெளியே வந்து வேலை முடிந்ததும் உடனே வீட்டுக் கூட்டுக்குள் அடைந்து விட வேண்டும். அப்படி ஒரு சட்டம் உலகுக்கே போட்டு விட்டது இந்த 'கரோனா' என்கிற வைரஸ். இந்த நோய் பற்றியும் அதன் பரவல் பற்றியும் தாக்கம் பற்றியும் ஒரு அறிவியல் கண்ணோட்டம் தருகிறது இந்தக் கட்டுரை.

1. 'வைரஸ்' என்றால் என்ன?

ஒரு கிராம் தங்கம் எடுத்து (விலை இன்றைக்கு எக்கச்சக்கம்) துண்டு செய்து கொண்டே போனால் கடைசியில் தங்க குணம் எல்லாம் கொண்ட ஒரு துகள்தான் அணு. அதேபோல இரத்தத்தின் குணங்கள் எல்லாம் கொண்ட ஒரு சிறு உயிர்த்துளிதான் ரத்தச் செல் (cell, RBC). அதன் பரிமாணம் சுமார் 10 மைக்ரான் அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்கு. அதில் பத்தில் ஒரு மடங்குதான் பாக்டீரியா (1 micrometersize); அதிலும் பத்தில் ஒரு மடங்குதான் (0.1µm = 100nm) ஒரு வைரஸ்.

2. அப்படி என்றால் 'வைரஸ்' என்ன உயிர்த்துளி தானா இல்லையா?

உயிர்த்துளி (living organism) மரியாதை கூட வைரஸுக்கு கிடையாது! ஏனென்றால் இந்த வைரஸ் உயிரற்ற கல் போல பலகாலமும் எங்கோ கிடக்கலாம். ஆனால் அதை உயிருள்ள ஒரு 'பாக்டீரியாவோ', நானோ, நீங்களோ தெரிந்தோ தெரியாமலோ தொட்டுவிட்டால் ஒட்டிக் கொண்டு மனிதர்களின் (அல்லது விலங்குகள்) உள்ள செல்லில் புகுந்து கொண்டு, பல்கிப் பெருகி விடும்!!. இதில் இப்போது படைஎடுத்துள்ள கரோனா வைரஸ் (COVID - 19), ஒரு RNA வைரஸ். இதன் உட்புறம் ஒரு மென்மையான பூப்பந்துபோலவும், அதைச் சுற்றி சூரியக் கதிர்கள் போல (NO, NO, முள்ளம்பன்றி!!! போல) முட்கள் உண்டு. இந்தக் கொக்கிகளை (protein spikes) வைத்துக் கொண்டுதான் - நம்முடைய மூச்சுக் குழாய்கள் (மூக்கு, வாய், தொண்டை) உள்ளே 'மலையேறி' புகுந்து செல்களுக்குள் நுழைந்து குடிகொண்டு குட்டிபோட்டு நாசம் செய்கின்றன.

3. இந்த வைரஸ் எங்கேயிருந்து புறப்பட்டு நம்மோடு போருக்கு வந்துள்ளன?

பெரும்பாலான வைரஸ்கள் (Viruses) விலங்குகளிடம் இருந்து நமக்குத் தாவியவை. மனித குலத்தை ஆட்டிப்படைத்த அம்மை (small box), தட்டம்மை (measles), போலியோ (polio) எல்லாமே எதோ ஒரு வகை விலங்குகளிடமிருந்து (மாடு, ஒட்டகம்) நமக்கு ஒட்டியவை. இந்த 'கரோனா' ஏதோ ஒரு வவ்வாலிடம் இருந்து மத்திய சீனாவின் வூஹான் நகரில் உள்ள (Wuhan) ஒரு மனிதருக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சிறைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னர், அவர் தும்ம பலர் அந்தத் துளிகளைத் தாங்க வெகுவிரைவில் கரோனாவுக்கு கொண்டாட்டம். அங்கு புறப்பட்ட 'கரோனா புயல்' சீனா முழுக்க ஒரு ஆட்டம் ஆடி பின்னர் உலகம் முழுவதும் பரவிவிட்டது.

4. இந்த கரோனா வைரஸ் நோய் எவ்வளவு ஆபத்து?

இதுவரை உலகின் 170 நாடுகளில் பரவி, உலக நோயாக மாறிய 'பெருமை' இந்த கரோனாவுக்குத்தான் உண்டு. கடந்த மூன்று மாதங்களில் (இறப்பு சதவீதம் (28660/62100) x 100 = சுமார் 4,5%)

5. கரோனாவை எப்படி தவிர்க்கலாம்?

முதலில் பயணத்தை தவிருங்கள். நீங்கள் தும்மினால், இருமினால் உங்கள் துகள் உங்கள் துணி அல்லது mask தாண்டி செல்லக்கூடாது. துணி கிடைக்கவில்லையால் குனிந்து உங்கள் சட்டைக்குள் தும்முங்கள். வெளியே போய் வீட்டுக்குள் வந்ததும் கையை முதலில் நன்றாக மூன்றுமுறை சோப்பு போட்டு கழுவுங்கள். முகத்தையும் கால்களையும் கழுவுங்கள். அவ்வளவுதான்.

6. இதற்கு முன்னர் இவ்வளவு மோசமான நோய் வந்தது உண்டா?

பல உண்டு!

2002 ல் SARS (Severe Acute Respiratory Syndrome) என்று ஒன்று. இதுவும் சீனாவில் துவங்கி, இதேபோல் எதோ ஒரு வவ்வாலிடம் இருந்து புனுகு பூனைக்குப் போக மனிதனுக்கும் பிடித்துக் கொண்டது. சீனாவை ஒட்டிய 25 நாடுகளுக்குப் பரவி 8000 பேர்களைத் தாக்கி 800 பேர்களை பழிவாங்கியது (10 % death rate) ஆனால் கரோனா அவ்வளவு மோசமில்லை (4 % இறப்பு இதுவரை).

2012 ல் MERS (Middle East Respiratory Syndrome) வந்தது. இதன் உற்பத்தி ஸ்தானம் சவுதி அரேபியா. சுமார் 2500 மனிதர்களைத் தாக்கி 866 பேரை பலிவாங்கியது. அதாவது 34 %. இது இப்போதுள்ள கரோனாவைவிட எட்டு மடங்கு கொடிய அரக்கன்.

மேலே சொன்ன மூன்றுமே காற்று மூலம் (தும்மல், இருமல் காரணமாக) பரவி மூச்சுக் குழாய் மூலம் மனிதனைத் தாக்குகின்றவை!

எபோலா வைரஸ் (Ebola Virus): இது பெரிதும் மேற்கு ஆப்ரிக்காவில், தோன்றி அருகில் உள்ள நாடுகளுக்கு மட்டும் பரவியது.(2014 - 16). 28,000 பேரைத்தாக்கி 11,000 பேரை (39%) பலி வாங்கிய மகாக் கொடிய நோய். இவைகளை இங்கே ஒப்பிட்டுக் காட்டுவதற்கு மிக முக்கியமான காரணம், மேலே குறித்த நான்கு கொடூரமான அண்ணன்களையும் மருந்து கண்டு அடக்கி ஒடுக்கிய மனித சமுதாயத்திற்கு இந்த கரோனா ஒரு ஜுஜூபி.

கொஞ்சம் பொறுங்கள் போதும். மேலே சொன்ன கருத்துக்கள் யாவும் முழுக்க முழுக்க விஞ்ஞானப் பூர்வமாக நிறுவப்பட்ட உண்மைத் தகவல்கள் (factual data). இனிவருவது மேலே குறித்த உலகை தாக்கும் கரோனா வைரஸ் பற் றிய கருத்தோட்டங்கள் (Hypothesis): அதாவது விஞ்ஞானத்தின் அடிப்படையிலான, educated impressions: (you may agree or disagree)

சீனாவில் துவங்கி ஜப்பானையோ இந்தியாவையோ தாக்காமல் ஏன் ஈரானையும் அதைவிட இத்தாலியையும் இந்தக் 'கரோனா'கொடுமை செய்கிறது? இதற்கு மூன்று காரணங்கள் எங்களுக்குப் படுகின்றன: A சீனர்கள் நன்றாக வசதியாக வாழ்கிறார்கள். அவர்களும் அண்மையில் உள்ள தென் கொரியாவும் பக்கத்து வீட்டுக் காரர்கள். (இந்தியாவும் வங்கதேசமும் போல) இவர்கள் உலகளவில் பயணம் செய்பவர்கள்.

கரோனா அரக்கனால் அநியாயமாக மாட்டிக் கொண்ட நாடு இத்தாலி. ஏன்? அங்கே நிறைய டூரிஸ்டுகள் போய் உள்ளனர். எவ்வளவுக்கு எவ்வளவு டூரிஸ்டுகள் அதிகமோ அந்த அளவுக்கு கரோனா வருகை அதிகம்! இரண்டாவது, வியாதி இறுக்கி பிடித்துக் கொள்ளக் கூடிய, அல்லது மடிந்து விடக்கூடிய முதியவர்கள் நிறைந்த நாடு இத்தாலி.

இதற்கு அடுத்த தாக்கம் ஸ்பெயினுக்கு. காரணம், அங்கும் வயதானவர்கள் அதிகம். டூரிஸ்டுகளும் அதிகம். பிரான்ஸுக்கும் இதே கதிதான்: ஆனால் பிரான்ஸ் நல்ல வசதி உள்ள நாடு. ஆகவே தாக்கம் ஸ்பெயினை விட பாதிதான். அமெரிக்காவும் முதியவர்கள் நிறைந்த நாடு; டூரிஸ்டும் அதிகம்.

இந்தியாவோ, வங்கதேசமோ, பாகிஸ் தானோ, இந்தப் பிரச்சனையில் மிகக் குறைந்த பாதிப்புதான். முதல் காரணம் இந்தியாவுக்கு வெளிநாட்டுக்காரர்கள் வருகை 5 மடங்கு குறைவு; இரண்டாவது இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு; இதன் காரணமாக கடைசிக் கட்டம் 0.6. அதாவது 1300 million மக்களுக்கு சுமார் 1600 பேர்தான் நோய்வாய் பட்டுள்ளனர். எனவே நாம் கவனமாக இருந்துவிட்டால் இந்த நோய் நம்மை ஒன்றும் செய்யாது.

இந்தியாவின் கேரளாவில் 3.5 கோடி ஜனத்தொகைக்கு 213 பேருக்கு கரோனா. மகாராஷ்டிராவில் கோடிக்கு நாலுபேர். தமிழ்நாடோ ஆந்திராவோ 0.3 தான். கேரளாவில் 100 மடங்கு அதிகம்! எல்லாவகையிலும் நம்மைபோன்ற கேரளாவுக்கு ஏனிப்படி சோதனை? ஒரே காரணம் கேரளாவில் வீடுதோறும் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு வரும்போது நோயையும் அழைத்து வருவதுதான்! எனவே, தமிழர்களே… அச்சம் தவிர்!

இத்தாலியில் இருவர் சந்திக்கையில் கட்டித் தழுவி கன்னத்தில் முத்தமிடுவார்கள். எனவே நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் போய்விடும். மற்ற ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளின் கைகுலுக்கலே முறை. இதுவும் நோய் தொற்றுக்கு ஒரு “நல்ல வழி ". ஆனால் இந்தியாவில் நாம் கை கூப்பி வணக்கம், நமஸ்தே சொல்கிறோம்; தொடுவது, தழுவுவது வழக்கமில்லை. இந்தியாவில் நோய் பரவாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணம்.

இப்பொழுது "நாடடங்கு சட்டம்" முடிந்து ஏப்ரல் 14-ல் இருந்து பெரிதும் இயல்பு வாழ்க்கையை துவங்கிவிட வேண்டும். நமக்கு இது போதும்.

1918 1920 ல் நூறாண்டுக்கு முன், இதேபோல் ஒரு "Flu" காய்ச்சலால் 5000 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்; சுமார் 800 லட்சம் மக்கள் இறந்தனர். அதே போல இன்னொரு கொள்ளை நோய் வந்துவிடுமோ என்ற அளவிறந்த அச்சத்தில் ஐரோப்பா எல்லா முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இது அங்கே அவசியம்; நிச்சயம் வெற்றியும் தரும்.

கடைசியாக மிக முக்கியமான விஷயம்! இந்த கரோனா என்ன செய்யப் போகிறது? எத்தனை நாட்கள் கொடுமை செய்யலாம்? கரோனாவைப் பற்றி நமக்கு இப்போது முழு மையாகத் தெரியா விட்டாலும், அதன் அண்ணன் "SARS" பற்றித் தெரியும். இது 40 நாட்கள் தான் ஆட்டிப்படைத்தது.

நாற்பது நாட்களில் முற்றிலும் அழிந்து போய்விடும் என்று அர்த்தமல்ல. புது தொற்று எதுவும் வராது. பேயாட்டம் ஓய்ந்து மூச்சு வாங்கும். அந்தக் கணக்குப்படிப் பார்த்தால் இந்தியாவில் பிப்ரவரி 25ல் முதல் விதை; மார்ச் 3 தேதி 5 பேர்; மார்ச் 25 அன்று 610 பேர்; மார்ச் 28 அன்று 824 பேர். இதன் இரட்டிப்பு நாட்கள் ஏழு. இப்போது எடுத்திருக்கும் ஊரடங்கு சட்டத்திலும் சித்திரை வெயிலிலும் கரோனா தாக்குப் பிடிக்காது என்பது எங்கள் கருத்து.

எதிர்பாராத சூழல்கள் நேரினும் 10000 பேருக்கு மேல் தொற்றாது பிரச்சினை முற்றாது. அதில் 200 இறக்க நேரிடலாம். எஞ்சிய 8800 பேர் முழுமையாக சிரித்துக் கொண்டே வீட்டுக்கு போவார்கள்! இந்த 200 பேர் இறப்பு வேதனைதான் என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே சாலை விபத்தில் இதைவிட அதிக மரணம்!

இந்த நூறாண்டுகளில், மனித சமுதாயத்தின் மருத்துவ அறிவும், சாதனங்களும் அறிவியல் துறையும் நூறுமடங்கு முன்னேறியாகிவிட்டது. எனவே இந்த கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்; கட்டுப்படுத்தப்படும்.

இப்படை தோற்கின் எப்படி ஜெயிக்கும் ?

No comments:

Popular Posts