Friday 7 February 2020

ஆன்மிகமோ நாத்திகமோ, தேவை நல்லாட்சி!

ஆன்மிகமோ நாத்திகமோ, தேவை நல்லாட்சி! By வாதூலன்  |   அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் ஒரு வகையான கருத்து பரவிக் கொண்டு வருகிறது. முகநூலில் வெளியாகும் கருத்துகள், ஊடகப் பேட்டிகள், கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகள், அனைத்தையும் உற்று நோக்கும்போது இத்தகைய எண்ணம் பலமாக வேரூன்றி வருவது போலத் தோன்றுகிறது.அதாவது, "இறை நம்பிக்கையே இல்லாத திராவிடக் கட்சிகளை அகற்றி ஆன்மிகம் சார்ந்த கட்சிதான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்' என்பதே அதன் பொருள். பாஜக கூட்டணியைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள் என்பது வெளிப்படை.நாத்திகம் என்பது ஹிந்து மதத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இராமாயணத்திலேயே ஜாபாலி என்ற முனிவர் இருந்தார். தந்தை சொல்லைச் சிரமேற்கொண்டு வனவாசம் மேற்கொள்ளத் தயாராயிருந்த ராமரை அவர் தடுக்கிறார். "தசரதன் என்பது ஓர் உடல்; அந்த உடல் போய்விட்டது. வெறுமனே சத்தியம், சத்தியம் என்று கூறிக் கொண்டு காட்டுக்குப் போகாமல், ராஜ்ய பரிபாலனம் செய்' என்ற அறிவுரை செய்கிறார்.

ராமர் அதிருப்தியுடன், "நீங்கள் நாத்திகம் பேசுகிறீர்கள், தந்தையின் வாக்கை நிறைவேற்றுவது என் கடமை' என்று உறுதியாக நிற்கிறார்.கி.பி.600-900-இல் பக்தி இலக்கியம் செழித்து வளர்ந்த காலகட்டத்தில்தான் சித்தர்களும் தோன்றினார்கள். "நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்' என்ற ஒரு பிரபலமான பாடல் உண்டு. உண்மையான, ஆழ்ந்த தூய பக்தி இல்லாமல், வெறுமனே மந்திரங்களை மட்டும் முணுமுணுக்கும் பக்தர்களைச் சாடுகிற மாதிரி பல சித்தர் பாடல்கள் உள்ளன.

ஆனால், இன்றைக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மேற்சொன்ன சித்தர்களுக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், அடிப்படையான ஹிந்து மதக் கோட்பாடுகளை அவர்கள் இகழ்ந்தது இல்லை.
வேறொரு கருத்தும் இப்போது முன் வைக்கப்படுகிறது. இறை நம்பிக்கை இல்லாத ஆட்சியாளர்களால்தான், தமிழ்நாடு "கெட்டு' விட்டது என்று வலியுறுத்துகிறார்கள். இது சரியான கணிப்பா?முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும் சரி, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, அமைச்சர்கள் கோயிலுக்கு வெளிப்படையாகச் சென்றார்கள். புற மதச் சின்னங்களை இட்டுக் கொள்கிறார்கள். ஏன், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரே மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றது ஒரு பிரபல நிகழ்வு.

மற்றொன்றையும் இங்கு குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. இங்குபோல் "நா தழும்பேறி நாத்திகம்' பேசாத மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறதா? கம்யூனிஸ்ட் உள்பட (எல்லாரும் கொண்டாடும்) துர்கா பூஜையை கொண்டாடும் மேற்கு வங்கம்; சீர்திருத்தவாதியான நாராயண குரு தோன்றிய கேரளத்தில்தான் சபரிமலை சாஸ்தாவும், குருவாயூரப்பனும் பிரபலமாக இருக்கின்றனர். உலகமே வியக்குமளவுக்கு பக்தர்கள் கூடும் கும்பமேளா நடக்கும் உத்தரப் பிரதேசம். ஆனால், இந்த மாநிலங்களை விடத் தமிழ்நாட்டின் வளர்ச்சி சில அம்சங்களில் மேலானதுதான். (காங்கிரஸ் ஆட்சியின் மிச்சங்கள் என்று ஒரு சாராரும், அதிகாரிகளின் திறமைதான் எனப் பிறிதொரு சாராரும் கருதுகிறார்கள்.)

இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய குறுக்கீடாக இருப்பது ஊழல்தான்; இந்த ஊழலைப் பெரும்பாலோர் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்பது வேதனையான உண்மை. இங்கு ஒரு சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை  மௌலிவாக்கத்தில் (2016-ஆம் ஆண்டு) அடுக்ககம் ஒன்று எழும்பும் நிலையிலேயே சரிந்து விழுந்து சில தொழிலாளர்கள் இறந்தனர். அப்போது பெங்களுரில் வசிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் நாளிதழில் எழுதினார். "இது போன்ற ஒரு நிகழ்வு வேறு எந்த மாநிலத்திலாவது நடந்திருந்தால், ஜனங்கள் கொதித்து எழுந்திருப்பார்கள், பூகம்பமே வெடித்திருக்கும்.'

2016-க்குப் பிறகு மும்பை புறநகரில் கட்டடம் இடிந்து விழுந்தது. அது சற்று வயதான பழைய கட்டடம். ஆனால், மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மையமான பகுதியில் நிறுவிய ஒரு பாலம் விரிசலடைந்தது. பலர் காயம் அடைந்தனர். சிலர் உயிரை இழக்க நேரிட்டது. எல்லா அரசியல்வாதிகளைப் போல முதல்வர் மம்தா  பானர்ஜியும் அதிகாரிகளின் மீது குற்றஞ்சுமத்தினார்.பொதுவாக, இந்த நாட்டில் அரசியல்வாதிகளும், சில திரையுலகப் பிரமுகர்களும்  எல்லாக் குற்றங்களிலிருந்தும் தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். "நானே ராஜா' என்ற நினைப்பில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

மூன்று வாரத்துக்கு முன்பு, "சாய்பாபாவின் பிறந்த ஊர் ஷீரடி அல்ல, பர்பணி மாவட்டத்திலுள்ள பாத்ரி கிராமம்' என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஓர் அறிவிப்பு வெளியிட்டார். பக்தர்கள் நிறைய பேர் குழுமுகிற ஷீரடியில் கண்டனப் போராட்டங்கள் நிகழ்ந்தன; கடையடைப்பு நடந்து வியாபாரம் முடங்கியது. பிறகுதான் முதல்வர் சற்று இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்.சாய்பாபாவை ஹிந்து மதத்தினரைத் தவிர வேறு மதத்தவர்களும் தெய்வமாகப் போற்றுகிறார்கள். அவருடைய சரித்திரத்தை எழுதிய பலரும் பிறந்த இடம் "ஷீரடி' என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆந்திர புட்டபர்த்தியில் வேறொரு சாய்பாபா இருந்த போது, வேறுபடுத்திக் காட்ட "ஷீரடி' என்றே சொல்வதுண்டு. நிலைமை இவ்வாறிருக்க, மகாராஷ்டிர முதல்வர் சாய்பாபா பிறந்த இடம் குறித்துப் புதிய செய்தியைப் பரப்புவானேன்? முதலமைச்சரானதால் என்ன வேண்டுமானாலும் மாற்ற தனக்கு அதிகாரமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? அரசியலில் ஆன்மிகம் குறுக்கிடுவதற்கு இதை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆன்மிகத்தில் அரசியல் நுழைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. கோயில்களில் பிரசாதத்துக்கு "டெண்டர்' விடுவதிலிருந்து, அண்மைக்கால சிலை திருட்டு வரை  சகல முறைகேடுகளுக்கும் அரசியல்தான் மறைமுகக் காரணி.அது நாத்திக அரசியலா, ஆன்மிக அரசியலா என்பதல்ல அடிப்படைப் பிரச்னை. இறை நம்பிக்கையை இகழாமை, நிலையான சட்டம் - ஒழுங்கு, ஊழலை ஒழிக்க தீவிர முனைப்பு ஆகிய மூன்றும் நிலவுகிற நல்லாட்சி மலர  வேண்டும்.

No comments:

Popular Posts