Saturday, 8 February 2020

மனிதம் போற்றிய மகான்

மனிதம் போற்றிய மகான் | பி.ஏ.ராமையா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னாள் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை.

‘வா டிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் 5.10.1823 அன்று கடலூர் மாவட்டம் மருதூர் என்ற ஊரில் பிறந்து 30.1.1874 அன்றைய நாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மாளிகையில் தனது பூதவுடலை சோதியுடன் கலந்து மறைந்தார் என்பது வரலாறு.

எளிய குடும்பத்தில் பிறந்த அவரை உலகம் வள்ளலார் என்று வாஞ்சையுடன் அழைக்கும் என்றும் யாரும் அந்த தருணத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர் அவதாரகாலம் மனித சமூகத்துக்கு அளித்த மாபெரும் கருணைக்கொடை. அன்போடும் அறம் சார்ந்த உலக வாழ்க்கையை துய்க்க வேண்டும் என்று மாறுபட்ட வழிமுறையில், சித்தாந்தத்தில் மனித சமூகத்தை ஒழுங்குபடுத்த முனைந்த மிகப்பெரிய ஞானி. தமிழுலகம் கண்ட தவசீலர் அவர். மனித சமூகத்திற்கு அவர் அளித்த அறிவுக்கொடைகள் அளப்பரியது.

அறம் சார்ந்த வாழ்க்கை, வாழ்கின்றபோதுதான் மனிதப்பிறவி பெருமை அடைகிறது. அரசன் நீதி தவறினால் அறக்கடவுள் தண்டிக்கும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். உயிர்களிடத்தில் வேற்றுமை இல்லை. அவற்றை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று உலகிற்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தார் வள்ளலார்.

திருமூலர், திருவள்ளுவர், இயற்றிய நூல்களை தனது வழிக்காட்டி நூல்கள் என்று கருதிய அவர் உயிர் வதையை மிகவும் சாடினார். ஜீவ காருண்ய ஒழுக்கமில்லாமல் யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டார்கள் என்றும், எனவே உயிர்க்கொலைகள் கூடாது என்றும் உலகிற்கு அறைகூவல் விடுத்தார்.

அன்று முதல் இன்று வரை பசிப்பிணியால் மக்கள் வாடுவது அனைவரும் அறிந்த ஒன்று. பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்று அவ்வைபெருமாட்டியும், உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று சீத்தலைச்சாத்தனார் கூறிய மணிமேகலை செய்தியும் வள்ளலாரை மிகவும் வாட்டியது அனைவரும் உண்ண உணவு வேண்டும், பசிப்பிணி அகல வேண்டும் என்ற பொதுவுடமை சித்தாந்த கருத்தினை பாமரமக்களும் புரியும் வண்ணம்

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

என்று கூறினார். எனவே அவர் கண்ட லட்சியங்களை நிறைவு செய்ய, குறிப்பாக ஏழைகளுக்கு உணவளிக்க 1870-ம் ஆண்டு எரியூட்டப்பெற்ற சமையல் அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து கோடானு கோடி மக்களின் பெரும் பசியை நீக்கிக்கொண்டிருக்கிறது. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து மக்களுக்கு போதனைகள் செய்தார். நூல்கள் உரைகள் எழுதுதல் பத்திரிகை நடத்துதல், ஞான விளக்கம், சொற்பொழிவு போன்றவை செய்தல், சித்த மருத்துவம் மூலிகைகள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை அருளி சமூகத்தை வழி நடத்திய சீர்திருத்தவாதி.

திருவருட்பாவை மருட்பா என கூறி யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டார். அப்போது வள்ளலார் நீதிமன்றம் வந்தார். அவரைப்பார்த்து ஆறுமுகநாவலர் உள்பட அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு அவருடைய ஞானமார்க்கத்திற்கு உள்ள அரிய எடுத்துக்காட்டு. இறுதியாக திருவருட்பா பாடல்கள் மூலமும், கடிதங்கள் மூலமும், உரைநடை விளக்கங்கள் மூலமும் சமரச சுத்த சன்மார்க்க கருத்துகளை வருங்காலத் தமிழ் சமுதாயத்திற்கு மேலே கண்ட கருத்துகளை சுருக்கமாக அளித்துள்ளார். அவைகளில் சில வருமாறு.

1. எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து தாவரங்கள் முதலான அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுதான் மனிதநேயம். 2. கொல்லாமை நோன்பும், புலால் உண்ணாமையும் ஆன்ம சாதனைக்கு இன்றியமையாதவை. 3. உருவ வழிபாடு தேவையற்றது. அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவரே தெய்வமாவார். அவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிறார். 4. தவமுறையில் “ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தை ஜெபித்து வந்தால் நமக்குள் உறைந்து வாழும் ஆண்டவரை உச்சந்தலையில் ஒளிவடிவில் காணலாம். 5. தவநெருப்பினால் உடலின் குறைபாடுகளை எரிப்பதன் மூலம் எலும்பு, தசைகளாலான உடம்பு காற்றுடம்பாகும். காற்றுடம்பு பொன்னுடம்பாகும். பொன் உடம்பு ஒளி உடம்பாகும். அந்த ஒளி உடம்போடு இயற்கையுடன் கலந்து அருவமாகி எக்காலத்திலும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

இதுபோன்ற அறிய செய்திகளை அளித்துச்சென்ற வள்ளலார் தைப்பூசத்தன்று ஆன்மஜோதியில் மறைந்து கலந்து விட்டார். அப்பெருமகனாரின் கோட்பாடுகளை வாழ்க்கையில் பின்பற்றுவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல மனித சமூகம் உய்ய வழியும் அதுதான். அவருடைய திருநாமத்தை போற்றுவோம்.

இன்று (பிப்ரவரி 8-ந் தேதி) தைப்பூசம்.

No comments:

Popular Posts