Friday 21 February 2020

தமிழைப்பயன்படுத்துவோம், தலைநிமிர்ந்து வாழ்வோம்...!

மறைமலை இலக்குவனார் (துணைத் தலைவர், தமிழகப் புலவர் குழு,சென்னை.)

இன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலக தாய்மொழி தினம்.

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று டாக்காவில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவையும் மீறி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். இந்தத் துயர நிகழ்வின் நினைவாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்க்கோ நிறுவனம்) பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது.

2000 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாள் உலக தாய்மொழி நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளை போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்து தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் வழங்குவது தாய்ப்பால் மட்டுமல்ல; தாய்மொழியும் தான். தாய் வழங்கும் தாய்ப்பால் உடல்நலத்தை வலிமைப்படுத்துகிறது. தாய்மொழி அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை அமைக்கிறது. நாம் பிறந்து வளர்ந்து பேசத் தொடங்கியபின்தான் நாம் வாழும் சமுதாயத்தில் ஓர் அடையாளத்தைப் பெறுகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக அங்கீகாரமும், அடையாளமும் பெற்றுத் தரும் தாய்மொழிதான், நம் சிந்தனைக்கும் அடித்தளமாக அமைகிறது. உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டாலும் அவரவருக்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.

தாய்மொழியே தங்கள் சிந்தனையை இயக்கும் ஆற்றலையுடையது என்பதை அறியாத பலர் பெருமைக்காகவும், போலி விளம்பரத்துக்காகவும் பிறமொழிகளில் நாட்டம் செலுத்தி பயனின்றிக் காலம் கழித்துவிடுகின்றனர். ஒருவன் தன் தாய்மொழியைத் தவிர எத்தனை மொழிகள் கற்றாலும் அவன் சிந்திப்பது அவனது தாய்மொழியில்தான் எனவும் அதனையே பின்னர் தான் கற்றறிந்த ஏனைய மொழிகளுக்கு மடைமாற்றம் செய்துகொள்கிறான் என்றும் மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஒருவன் தன் தாய்மொழியில் கல்வி பெறாமல் வேறுமொழி மூலம் கல்வி பெறுவது அவன் தன் மனைவியிடம் வக்கீல் வைத்துப் பேசுவதைப் போன்ற அறியாமை என்கிறார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

தாய்மொழியைப் புறக்கணித்து பிறமொழி படிப்பவரை “வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ! வீட்டுவார்த்தை கற்கிலாய் போ! போ! போ!” என்று பாரதியார் வெறுத்தொதுக்கினார்.

பிரதமர் மோடி, “இந்திய மொழிகளுள் காலத்தால் மிகவும் மூத்தமொழி தமிழே” என பலமுறை பேசியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்ப்புலவர் கணியன் பூங்குன்றனார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். நம் நாட்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நிதிநிலையறிக்கை வழங்கும்போது புறநானூற்றிலிருந்தும், ஆத்திசூடியிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் மூலம் தமிழுக்கு 3600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்துவடிவம் இருந்தது தெளிவாகியுள்ளது. ஆனால் இந்தப் பெருமையால் என்ன பயன்? ஐந்து நிமிடம் தமிழில் பேசினால் நூறு சொற்கள் ஆங்கிலத்திலிருந்து பயன்படுத்துகின்றோமே? ஏன்? நம் தாய்மொழியை மறந்து வருகிறோமா?

இசையரங்குகளில் தெலுங்கு கீர்த்தனைகள் முழக்கம்! பாட்டுக்குப் பொருள் புரியாமல் தலையை ஆட்டுகிறோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பேசுவது வாதிக்கும் பிரதிவாதிக்கும் புரியாத ஆங்கிலத்தில்! மழலை வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஆங்கிலத்தின் வழியாகக் கல்வி! மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் அங்கேயும் புரியாத மொழியில் வழிபாடு! இத்தனைக்கும் பிறகு “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என முழங்குவது பொருந்துமா?

ஒவ்வொரு கூட்டம் தொடங்கும்முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் தொடங்குகிறோம். இந்த வாழ்த்து பாடிவிட்டாலே தமிழ்த்தாய்க்குப் பெருமையும் சிறப்பும் சேர்ந்துவிடுமா?

“தொண்டுசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும், துடித்தெழுந்தே” என்று பாரதிதாசன் முழங்கியது ஏன்? காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை எத்தனை சேவைகளைப் பயன்படுத்துகிறோம்? மளிகைக்கடையில் விலைப் பட்டியல், வங்கியில் கணக்குப் பதிவு, அஞ்சலகத்தில் பணவிடை(மணியார்டர்) அனுப்புதல், மருந்துக்கடையில் மருந்துச்சீட்டு(பிரஸ்கிரிப்ஷன்), பேருந்து, தொடர்வண்டி ஆகியவற்றில் பயணச்சீட்டு, பதிவுப்படிவங்கள் என்று எத்தனை எத்தனை சேவைகள்! ஒன்றிலாவது தமிழ் உண்டா? அத்தனைத் துறைகளிலும் தமிழ் இடம்பெறவேண்டும் என்பதைத்தான் பாரதிதாசன் நமக்கு அறிவுறுத்துகிறார்.

நம் தாய்மொழியை எல்லா இடங்களிலும் பயன்படுத்தவேண்டியது நம் அடிப்படை கடமை. நம் கடமையை செய்யாமல் உயிர் என்றும் அமுதம் என்றும் போற்றிப் பாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதனை நாம் உணரவேண்டும்.

அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவோம்.தலைமுறைகளை தலைநிமிர செய்வோம்.

No comments:

Popular Posts