Friday, 31 January 2020

நெடுஞ்சாலைப் பயணம் இனிக்க...

நெடுஞ்சாலைப் பயணம் இனிக்க...By  எஸ். ஸ்ரீதுரை  |   நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் ஒவ்வொரு பயணத்திலும் கடந்து செல்லும் சுங்கச்சாவடிகளில் ஒன்றிலாவது பிரச்னை இல்லாமல் கடக்க முடிவதில்லை.
வார இறுதியிலும், பண்டிகை விடுமுறைகளுக்கு முன்பும் பின்பும் இந்தச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது இயல்பு. குறைந்த நேரத்தில் அதிக தொலைவைக் கடப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதால் பயண நேரம் அதிகரிப்பதுடன், பயணமும் அலுத்து விடுகிறது.

இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ. இடைவெளி இருக்கவேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால், நமது நாடு முழுவதிலும் இந்த விதிமுறையை மீறி, அருகருகில் அமைக்கப்பட்ட சுமார் 100 சுங்கச்சாவடிகள் செயல்படுவதாகவும், அவற்றில் ஆறு தமிழகத்தில் இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இவை போதாதென்றுஆங்காங்கே புதிய சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் ஒரே சீரான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. ஏற்கெனவே பெட்ரோல், டீசலுக்கென அதிகம் செலவிட வேண்டியுள்ள நிலையில், சுங்கச்சாவடிக் கட்டணத்துக்காகவும் செலவழிக்க வேண்டிய நிலை வாகன உரிமையாளர்களுக்கு அதிக சுமையைத் தருகிறது. சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிப்பதற்காக "ஃபாஸ்டேக்' என்ற புதிய முறை அண்மையில் அமலுக்கு வந்துள்ளது. இந்த முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு முன்கூட்டியே (செல்லிடப்பேசிக்கு ரீசார்ஜ் செய்வதுபோல) பணம் செலுத்திவிட்டால், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ரொக்கமாகச் செலுத்தாமல் மின்னணுப் பரிவர்த்தனைமுறையில் ஃபாஸ்டேக் தொகையிலிருந்து சுங்கக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.

ஆனால், இந்தப் புதிய நடைமுறையிலும் பல குளறுபடிகள் உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. "ஃபாஸ்டேக்' கணக்கில் பணம் இருந்தாலும், "உங்கள் கணக்கில் பணம் இல்லை' என்று கம்ப்யூட்டர் சொல்கிறது; "நீங்கள் ரொக்கமாகத்தான் செலுத்தவேண்டும்' என்று சுங்க ஊழியர்கள் கூறுவதாகச் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இன்னொரு சம்பவத்தில், "ஃபாஸ்டேக்' முறையில் முன்கூட்டிப் பணம் செலுத்திய ஒருவர் தனது காரை வெளியில் எடுக்காத போதும், உங்களின் வாகனம் குறிப்பிட்ட சுங்கச்சாவடியைக் கடந்தபோது, குறிப்பிட்ட தொகை சுங்கக் கட்டணமாகக் கழித்துக்கொள்ளப்பட்டது. என்ற குறுந்தகவல் வந்துள்ளது. பதறிப் போன அந்தக் கார் உரிமையாளர், தன் காரின் பதிவு எண்ணை வேறு எவராவது முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற அச்சத்தில் உறைந்துபோனார்.

இவ்வாறு அன்றாடம் பல சம்பவங்களைக் கேள்விப்படும் பயனாளிகள், "ஃபாஸ்டேக்' முறைக்கு மாறுவதற்குத் தயங்கிவருகின்றனர். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், "ஃபாஸ்டேக்' அல்லாத வழிகளில் காத்திருக்கும் நீண்ட வாகன வரிசையே இதற்குச் சான்றாக அமைகிறது. இந்த நிலையில் "ஃபாஸ்டேக்' கணக்கு வைத்திருக்காத வாகனம், "ஃபாஸ்டேக்'குக்கான வழியில் கவனக் குறைவாக நுழைந்துவிட்டால்கூட அவர்களிடம் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புகள் பயணிகளைப் பதறச் செய்கின்றன. சுங்கச்சாவடிக் கட்டணங்கள், காத்திருப்பு நேரம், "ஃபாஸ்டேக்' குழப்பங்கள் ஆகியவற்றுடன் பயணிகளின் பிரச்னைகள் முடிந்துவிடுவதில்லை. சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் வேற்றுமொழி பேசுபவர்கள் பணிபுரிவதால் ஏற்படும் மொழிச் சிக்கல் காரணமாக, அவர்கள் வாகனங்களைக் கையாள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

சில அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் பல வாகனங்களில் செல்லும்போது, சுங்கச்சாவடி தொழிலாளர்களுடன் பிரச்னை ஏற்பட்டு வன்முறை அரங்கேறுகிறது. சில நேரங்களில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொதுமக்களைத் தாக்குகின்றனர். செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியிலும், திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சுங்கச்சாவடியிலும் அண்மையில் இதுபோன்ற இரு நிகழ்வுகள் நடைபெற்றன. பரனூர் சுங்கச்சாவடியின் வழியே சென்ற அரசுப் பேருந்து ஒன்று ஏற்கெனவே "ஃபாஸ்டேக்' முறையில் கட்டணம் செலுத்தியிருந்த போதிலும், அதன் ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக்கட்டணம் கேட்டனர்; தொடர்ந்து ஓட்டுநர், நடத்துனரைத் தாக்கியதாகவும், இதைக்கண்டு வெகுண்டெழுந்த பிற வாகன ஓட்டிகளும், பயணிகளும் அந்தச் சுங்கச்சாவடி ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கி அங்குள்ள கணினிகள் உள்ளிட்ட கருவிகளைச் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தக் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அந்த சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்பட்ட பணத்தை சூறையாடிச் சென்றதாகவும் தெரிகிறது.

நான்குனேரி சுங்கச்சாவடி வழியே ஒரு திருமணத்துக்காகக் குடும்பத்துடன் பயணித்த ஒருவர், ஊழியர்களின் தாமதமான செயல்பாட்டை தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து, அந்தப் பயணியையும் அவரின் உறவினர்களையும் அந்த ஊழியர்கள் தாக்கியதில் 10 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இனிமேலும் தாமதிக்காமல் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பொதுமக்கள் தொடர்பில் நன்கு பயிற்சி பெற்ற அந்தந்தப் பிராந்திய மொழியை பேசக்கூடிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். சுங்கக் கட்டணங்களைச் சீரமைப்பதுடன், "ஃபாஸ்டேக்' முறையில் காணப்படும் குறைகளை வெகு விரைவில் களைய வேண்டும். பயணங்கள் இனித்திடுவதற்கு வழுவழுப்பான நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, நேர்த்தியான சுங்கச்சாவடி சேவையும் மிக மிக அவசியம்.

No comments:

Popular Posts