Tuesday, 7 January 2020

எழுத்தும் பேச்சும் இயக்கங்கள் ஆகட்டும்

எழுத்தும் பேச்சும் இயக்கங்கள் ஆகட்டும் By கிருங்கை சேதுபதி  |  காலத்தின் கோலத்தால் சமூக அறங்கள் சமூக அவலங்களாக மாறிக்கொண்டிருக்கும் துயரம் குறித்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, சில அனுபவ உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவற்றுள் இருந்தே புதிய அறங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையையும் தெளிவையும் உணர்த்த நேர்ந்தது.

அதுவரையிலும் ஆர்வத்தோடு விவாதித்துக் கொண்டிருந்த நண்பர், நான் விவரித்த செய்தியைத் தனது வாதத் திறனால் மேற்கொண்டு எதிர்கொள்ள இயலாத நிலையில், "உங்களுக்கென்ன எழுத்தாளர், எப்படி வேண்டுமானாலும் சொல்வீர்கள்' என்று நிறுத்திக் கொண்டார்.இதேபோல, ஒரு நண்பர்கள் குழுவில் விவாதிக்கிறபோது, "நீங்கள் பேச்சாளர், எப்படி வேண்டுமானாலும் பேசுவீர்கள்' என்று சொல்லி நிறுத்திக் கொண்டவர்களையும் நினைத்துக் கொண்டேன்.

"நீங்க, கதை, கவிதைஎழுதறவங்க தானே? எப்படி வேண்டுமானாலும் எழுதுவீங்க' என்று ஒரு விமர்சனத்தை  விட்டெறிந்துவிட்டு அவர்கள் நிறுத்தியபோது, "சுருக்'கென்று முள் தைக்கும் உணர்வு. அவர்களின் விட்டேற்றியான மனநிலையை  அறிகிறபோது ஏற்படுகிற உள்மனத் துயரை மாற்ற மறுபடியும் எழுதவும், பேசவும் நேர்ந்துவிடுகிறது.பொருளின் தன்மை உணராமல், சொல்லைச் சுவைக்கிற அளவோடு நின்று விடுகிற, இவர்களது சொல்லாடல்களின் மூலம்  தெரியவருவது, "நீங்கள் எழுதுவதும் பேசுவதும் சுவைக்காகவும் சுவாரசியத்துக்காகவும்தானே ஒழிய, நடைமுறைக்கு ஒத்துவராது.

சத்திய ஆவேசம் கொப்பளிக்கப் புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், பிரபஞ்சனும், அசோகமித்திரனும், பிரேம்சந்த்தும், முல்க்ராஜ் ஆனந்த்தும், மாக்சிம் கார்க்கியும், லியோ டால்ஸ்டாயும், மாப்பசானும் இன்னபிற எழுத்தாளர்களும் எழுதியவையெல்லாம் வெறும் கதைகள்தாமா?அறநெறியை முன்னிறுத்திஆன்மிகம் போதித்த கிருபானந்த வாரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோர் நிகழ்த்தியவை வெறும் பேச்சுக்கள்தாமா?  ஆற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்களின் கருத்துரைகள் வெற்று முழக்கங்கள்தாமா? கபிலர், கம்பர், இளங்கோவடிகள், சாத்தனார், திருவள்ளுவர், சேக்கிழார், சமயத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், சூஃபிமார்கள், சித்தர்கள் எல்லாரும் பாடிக் கொடுத்தவை படிப்புச் சுவைக்கு மட்டும்தானா?

பெருங்கவிஞராகிய ரவீந்திரநாத்தாகூரும், மகாகவியான பாரதியும், பாவேந்தரான பாரதிதாசனும், கவியரசான கண்ணதாசனும் தன்னை உருக்கி மின்னல் ஒத்த கவிகளாய்க் கொடுத்தவை வெறும் சொற்கோவைகள் மட்டும்தானா? பொழுதுபோக்குக் கேளிக்கை வரிசையில் இவற்றைக் கருதுகிற மனோபாவம் அதிகம் படித்த மக்களுக்கே இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதை விடவும் அழுத்தமான உண்மை, பாமர மக்கள் அவற்றில் இருந்து தமது அன்றாட வாழ்வுக்கான அறத்தைப் படிப்பினையாகக் கொண்டுள்ளனர்.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக்கடை' என்று வள்ளுவர் சொன்ன வாய்மை மொழியை, வாய்மொழியாக மட்டுமே கருதியவர்களுக்கு உண்மைத் தன்மை எப்படி உறைக்கும்? மனம் ஒன்றிப் படிப்பது உயர்ந்தது. அதனினும் உயர்ந்தது, ஊன்றிப் படித்த ஒன்றில் இருந்துபடிப்பினை பெற்று நடைமுறைப்படுத்தக் கற்பது. அது ஏட்டுக் கல்வியாக, பட்டயமும் பட்டமும் தருகிற படிப்பாக இல்லாமல் பட்டறிவின் நுண்ணிய வெளிப்பாடாய் அமைவதுஎன்பதை ஆழ உணர்த்துபவர்களே எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, கவிஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.

அவர்களது கனவுகளும் கற்பனைகளும் உள்ளீடற்ற அற்ப ஆசைகள் அல்ல. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவல்ல ஆற்றல் மூலங்கள் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்கிற வர்க்கம் எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் அந்தச் சமுதாயம் முன்னேறும்.அப்படித்தான் சென்ற நூற்றாண்டில் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள்; வாழ்வித்தார்கள்; திருவள்ளுவரையும், கம்பரையும், இளங்கோவடிகளையும் நாடிப் பயின்றார்கள்; மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸ், சாக்ரட்டீஸ், பிளேட்டோ, ஜேம்ஸ்ஆலன் போன்ற உலகச் சிந்தனையாளர்களின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டனர். அவர்களுக்கு இணையான அறச்  சிந்தனையாளர்களை, இந்திய, மாநில மொழிகளில் தேடிக் கண்டுபிடித்து எடுத்துரைத்தனர்.

அக்காலத்தில் நிகழ்ந்த பட்டிமண்டப, வழக்காடு மன்றங்களில் வாதங்களைச் செவிமடுத்த பொதுமக்களில் பலர், நீதிமன்றங்களுக்கும், மனநல, உடல்நல மருத்துவமனைகளுக்கும் செல்லாமலேயே தமக்குள் எழுந்த சிக்கல்களுக்குத் தாமே தீர்வு காணப் பழகினார்கள்;பல்வேறு அரசியல் அமைப்பினரும் தெருமுனைகளில் அமைத்த படிப்பகங்களில் வந்த செய்தித்தாள்களைப் படித்து நாட்டின் நிகழ்வுகளை அலசி ஆராய்ந்தனர். அவற்றில் இடம்பெறுவனவற்றை பொழுதுபோக்குக்கு உரியன  என்று கருதாமல் தத்தம் வாழ்வின் சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஆற்றலை வளர்த்துக் கொண்டனர்.இதிகாசங்களில் இடம்பெறும் பாத்திரங்களை தமக்குப் பெயர்களாக வைத்துக்கொண்டனர். உடன்பாட்டுநிலையிலும் எதிர்நிலையிலுமான அந்தப் பாத்திரங்களுக்குள் மனிதம் புனிதமாக அமைந்ததை நினைவுகூர்ந்து நடைமுறைப்படுத்தினர். சீதை, பாஞ்சாலி, யசோதா, கெüசல்யா ஆகியோரோடு, கண்ணகியும், மாதவியும், மணிமேகலையும் காப்பியப் பாத்திரங்களாக மட்டுமின்றி, நம் சமகால மக்களும் ஆகினர்.

மெய்யான சமுதாய அக்கறையுள்ள சிந்தனையாளர்கள், கதைகளாகவும், கவிதைகளாகவும், சொற்பொழிவுகளாகவும் வழங்கி வருபவை உள்ளீடற்ற புனைவுகள் இல்லை. உண்மை வாழ்வின் நிகழ்வுகளில் உணர்ந்த புதிய அறங்கள் அவை.இந்தச் சமுதாயத்தில் இருந்து கற்றதை, மீளவும் இந்தச்  சமுதாயத்துக்குக் கற்றுத் தருகிற ஞானதானத்தை அவர்கள் செய்கிறார்கள்.

ஆழ்கடலில் இருந்து நீரை முகந்து விண்ணேற்றி மீண்டும் மண்ணில் மழையாகத் தருகிற கொடை ஒத்தது, இச் செயல்.மெய்ம்மை பேசும் இக்காலத்து ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறங்களைப் போதித்தவர்களாகப் புலவர்கள் இருந்தார்கள். ஆட்சியாளர்களும் பொதுமக்களும் அவற்றை உள்வாங்கி நடைமுறைப்படுத்தினர். அதற்கான அறங்கூறு அவையங்கள் இருந்தன. அறத்தை நிலைநிறுத்துகிற மாந்தர்களும் நிறைந்தனர். அது இக்காலத்திலும் இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றுதான், சென்ற வாரத் தினமணி தலையங்கம் ("இதுதான் தியாகம்' -31.12.2019) சுட்டிக் காட்டிய ஒரு நிகழ்வு.

அது திருவள்ளூர் மாவட்டத்தைச்  சேர்ந்த யாகேஷ் என்ற இளைஞரின் தியாகம். தனது இறுதி மூச்சுவரை, இந்தியா 2020 குறித்துத் தன் கனவுகளை இளைஞர்களின் முன் எடுத்து முழங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுரை, காற்றில் கரைந்துபோகாமல் களத்தில் இறங்கிச் செயல்பட வைத்ததன் ஒற்றைக் குறியீட்டுப் பதிவு இது. அதுவும் 2019விடைபெற்றுக்கொண்ட இறுதிக் கணத்தில், தன் உறுதிமிகு செயல்பாட்டால், வாழ்வைத் தியாகம்செய்திருக்கிறார் யாகேஷ்.இந்தச் செய்தியைப் படித்த கணத்தில் எனக்குள் முகிழ்த்த கம்பராமாயணக் கதாபாத்திரம் சடாயுதான். அடுத்த கணமே,முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாமரை (ஏப்ரல் 1959) இதழில், எழுதிய, "ஜடாயு'என்ற சிறுகதையும் மனதுக்குள் ஓடியது. அதில் வந்த தாத்தைய நாயக்கரும், கம்பனின் சடாயுவும்,இதற்கு முந்தைய கணம் வரை, கற்பனைப் பாத்திரங்களாகவே தெரிந்தனர். ஆனால், யாகேஷ் என்கிற வரலாற்றுப் பாத்திரம், வாழையடி வாழையென வந்த அந்தத் தியாகப் பரம்பரையைத் தற்காலத்தில் நிலைநிறுத்தி விட்டிருக்கிறது.

"பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வாக்கு பாப்பாவுக்கு மட்டுமல்ல, பையன்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை இந்தப் பாத்திரம் உணர்த்தியிருக்கிறது. இதைக் கண்ட பிறகும், கேட்ட பிறகும் கற்பனைக்கும் கேலிக்கும் கேளிக்கைகளுக்கும் உரியவர்கள் இளைஞர்கள், பெண்கள் அல்லர் என்பதை உணர்ந்து கொள்வதுபோலவே, மெய்யான இலக்கியவாதிகளையும் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் இணைத்துப் புரிந்துகொள்ளுங்கள்.

இத்தகு பாத்திரங்களையும் பாத்திரப் பண்புகளையும் தன்னுள் இருந்து வார்த்தெடுத்துத் தருகிற இவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வது, இவர்களைப் போற்றவேண்டும் என்பதற்காக அல்ல, இத்தகு தியாகங்கள் ஆற்ற வல்லவர்கள் தோற்றம் கொள்ள வேண்டும் என்பதற்காக. அதுகூட அல்ல, இத்தகு உயிர்த் தியாகங்களுக்கு இடமேயில்லாமல், அறந்தலை நிற்கவேண்டும் என்கிற ஆத்மார்த்தமான செயற்பாட்டுக்காக தன்னலமறுத்துப் பிறர் நலம் வேண்டிப் பொதுநலம் காக்க இன்னுயிரை ஈதல் எத்துணை பெரிய தியாகமோ, அதனை ஒத்தது தன்னுள் இருந்து தற்காலத்திற்கு ஏற்ற அறநெறிகளை நிலைநிறுத்தும் ஆக்கங்களை ஈன்று புறந்தருவது.

போலிகள் எல்லாஇடத்திலும் இருக்கலாம். பதர்களுக்காக, நெல்மணிகளைப் புறக்கணித்து விடலாகாது. புனைவுகள் விளக்கங்கள் பொய்கள் அல்ல; அவை போலியும் ஆகா; மெய்ந்நிறை வாழ்வின் உயிர்ப்புள்ள மீட்டுருவாக்கங்கள்.எழுத்தும் பேச்சும் இயக்கங்கள் ஆகிச் செயல்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை, 2020-ஆம் ஆண்டுக்கு எடுத்துரைக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால்தான் இன்னமும் எழுதுகிறோம்;பேசுகிறோம்; இயங்குகிறோம்; அதனால் இருக்கிறோம். இந்த இருப்பானது, மண்ணுக்குப் பாரமாக அல்ல, பலமாக; பாதுகாப்புக்குரிய பாலமாகவும் ஆனது என்பதே உண்மை.

கட்டுரையாளர்
பேராசிரியர்.

No comments:

Popular Posts