Tuesday 7 January 2020

வன்முறைக்களமாகும் பல்கலைக்கழகங்கள்!

வன்முறைக்களமாகும் பல்கலைக்கழகங்கள்! By வ.மு. முரளி  |  கடந்த 2019ஆம் ஆண்டு,  நமது பல்கலைக்கழகங்களுக்கு போதாத காலமாக அமைந்திருந்தது என்றே சொல்லலாம். அரசியல் சதிராடிய காரணத்தால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அமைதியின்மை கோலோச்சி, நமது உயர் கல்வித் துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, தலைநகர் தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சர்ச்சைகளின் மையமாகவே மாறிவிட்டது. இடதுசாரி மாணவர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ள இந்தப் பல்கலைக்கழகம் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அமைதியிழந்து காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல  முயற்சிகளை மேற்கொள்வதும் அதற்கு  மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்புவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகதீஷ்குமார் 2016 ஜனவரியில் பொறுப்பேற்றபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். அதன் பிறகு அரசுடன் மாணவர்களின் மோதல் தொடர்ந்து,  2019-இல் உச்சத்தைத் தொட்டது.

ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அல்லாதவர்களை வெளியேற்ற துணைவேந்தர் கொண்டுவந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளை எதிர்த்தும், உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யக் கோரியும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2019 நவ. 11-இல் பல்கலைக்கழகம் சார்பில் ஏஐசிடிஇ வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கை சுமார் 6 மணிநேரம் முற்றுகையிட்டு சிறைப் பிடித்தனர் மாணவர்கள்.

இந்தப் போராட்டங்களின்போது பல்கலைக்கழக வளாகத்திலிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை அவமதிக்கப்பட்டது. பல்கலைக்கழகச் சுவர்களில் எழுதப்பட்ட மோசமான வாசகங்கள், நாம் பயிற்றுவிக்கும் கல்வி மாணவர்களைப் பண்படுத்துகிறதா, பாழ்படுத்துகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் டிச.15-இல் நடத்திய போராட்டம் வன்முறை வடிவெடுத்ததால், பல்கலைக்கழகத்துக்குள் காவல் துறையினர் நுழைந்து மாணவர்களைத் தாக்கினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை உருவாக்கி, மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுக்கக் காரணமானது.

ஆனால், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்  குறித்து யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கலவரத்தின்போது 14 பேருந்துகளும் 20 தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன; 31 காவலர்கள் உள்பட 70 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 10 பேர் மாணவர்களே அல்லர் என்பது தெரியவந்தது.

உ.பி. மாநிலத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வன்முறைக்களமாக மாறியது. டிச. 15-இல் நடந்த வன்முறையால் பெருமளவு பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இங்கு, மாணவர்கள் ஆயிரம் பேர் மீது வன்முறை வழக்கு பாய்ந்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஜாதவ்பூரில் நடந்த நிகழ்வுகள் மிகவும் வெட்கக்கேடானவை. அங்கு மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக கல்வித் துறையிலும் இந்த மோதலின் மோசமான விளைவுகள் தென்படுகின்றன. 

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் டிச. 24-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற பல்கலைக்கழக வேந்தரும் மாநில ஆளுநருமான ஜகதீப் தன்கர், விழாவில் கலந்துகொள்ள விடாமல் தடுக்கப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ் ஆதரவுள்ள பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தினர் ஆளுநரை முற்றுகையிட்டு, பட்டமளிப்பு விழா அரங்கினுள் செல்லவிடாமல் தடுத்தனர்.  விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநர் திரும்பினார்.

மேற்கண்ட நிகழ்வுகள் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி ஆராய்ச்சி மையங்களிலும் வெறுப்பு அரசியல் பெருகி வருகிறது. இது கல்வியின் உயர்வுக்கு வழிவகுக்காது. பல்கலைக்கழகங்களில் அரசியல் ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் துடிக்கும் சில கட்சிகளுக்கும், உயர்கல்வி நிலையங்களைத் தன் பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பலப்பரீட்சை மைதானமாகக் கல்விக்கூடங்கள் மாறி வருகின்றன.

இந்த நிலையில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று  இரு தரப்பு மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் மிகவும் மோசமான சூழலில் நமது கல்வி நிறுவனங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மோதலின்போது முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தேர்வுக்குப் பதிவு செய்யச் சென்ற மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்; அலுவலகக் கணினிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோதல் குறித்து இருதரப்பு மாணவர்களும் பரஸ்பரம் புகார் கூறுகின்றனர். ஆனால், கல்வி நிலையத்தில் வன்முறை கோலோச்சுவதை யாராலும் நியாயப்படுத்த முடியாது.

கல்வி என்பது மானுட வளர்ச்சியின் அடையாளமாக இருக்க வேண்டும்.  குறைந்தபட்ச நாகரிகம்கூட அற்றவர்களாக, வன்முறையில் நாட்டமுள்ளவர்களாக  மாணவர்களை மாற்றுவது நல்லதல்ல என்பதை இப்போதேனும் அரசியல் கட்சிகள் உணர வேண்டும். கல்வி நிலையங்களை விட்டு அரசியல் தலையீடு வெளியேற வேண்டும். "சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனை சொந்தக்காலில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை; மனிதனைப் பண்படுத்தி அவனை பரிபூரண நிலைக்கு இட்டுச் செல்வதே கல்வி' என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

No comments:

Popular Posts