Sunday 3 November 2019

மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி

மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி

சோ. கணேச சுப்பிரமணியன்,

கல்வியாளர்.

நாளை (நவம்பர்4-ந்தேதி) இந்தியப்பெண் கணித மேதை சகுந்தலாதேவி பிறந்த தினம்.

1980-ம் வருடம் ஜூன் மாதம் 18-ந்தேதி ஒரு பெண்ணிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி கணிப்பொறித்துறை இரண்டு பதிமூன்று இலக்க எண்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெருக்கி விடை தரச் சொன்னார்கள். அந்தப்பெண் வெறும் 28 வினாடிகளில் விடையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இதனை “இது போன்று இதற்கு முன் பார்த்ததில்லை, இனிமேலும் பார்ப்பேனென்று எண்ணவுமில்லை, நம்பமுடியாத வேகம்” என்று ஸ்டீவன் ஸ்மித் என்ற எழுத்தாளர் பதிவிட்டுள்ளார். யார் இந்தப் பெண்? “மனித கம்ப்யூட்டர்” என்றும் “கால்குலேட்டர் மூளை” என்றும் அறியப்படும் சகுந்தலா தேவி. இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

சகுந்தலா தேவி 1929-ம் வருடம் நவம்பர் மாதம் 4-ந்தேதி, பெங்களூருவில் பிறந்தார். சர்க்கஸ் வித்ததைக்காரரும் மாஜிக் நிபுணருமான அவரது தந்தையார் இளம் வயதிலேயே சகுந்தலா தேவியின் கணித புலமையை அறிந்து கொண்டார். சீட்டுகளை கொண்டு செய்யப்படும் மாஜிக் வித்தையை சகுந்தலா தேவிக்கு கற்றுத் தரும் போது அவர் காட்டிய வேகத்தையும் அந்த வித்தையின் சூட்சுமங்களை மிக எளிதாகப் புரிந்துகொண்ட விதத்தையும் வைத்து அவரது கணித புலமையை அறிந்து கொண்டு அவரை ஊக்குவித்தார்.

தனது ஆறு வயதிலேயே மைசூரு பல்கலைக்கழகத்தில் தனது கணிதப் புலமையை நிரூபித்தார் சகுந்தலா தேவி. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது அப்போது அவர் எந்த பள்ளியிலும் முறையான கல்வியை பயின்று இருக்கவில்லை என்பதுதான். 1950-களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் தனது கணித புலமையைச் செயல்முறை விளக்கமாக நிரூபித்தார்.

1977-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது படிமூலத்தை வெறும் ஐம்பது வினாடிகளில் கணக்கிட்டுக் கூறி சாதனை படைத்தார். இந்த கணக்கீட்டை “யூனிவாக்” என்ற சூப்பர் கம்ப்யூட்டர் செய்வதற்காகத் தனியாக ஒரு ப்ரோக்ராம் எழுத வேண்டியதாயிற்று. சூப்பர் கம்ப்யூட்டரை விட வேகமாகக் கணக்கிட்டுக் காட்டிய சகுந்தலா தேவி மனிதக் கம்ப்யூட்டர் என்று அடைமொழிக்குப் பொருத்தமானவர் என்பதில் யாருக்காவது சந்தேகம் வருமா என்ன?

1988-ல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சகுந்தலா தேவியின் கணக்கீட்டுத் திறன் உளவியல் அறிஞர்களால் பரிசோதிக்கப்பட்டது. மிகப்பெரும் எண்களின் படிமூலங்களைக் கணக்கிடும் திறன் மூலமாக இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. 61,629,875 என்ற எண்ணின் முப்படி மூலத்தையும், 170,859,375 என்ற எண்ணின் ஏழு படி மூலத்தையும் கால்குலேட்டர் உதவியின்றி துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்தப் பரிசோதனையை மேற்கொண்ட கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆர்தர் ஜென்சென் இதனை மிகுந்த ஆச்சரியத்தோடு பதிவு செய்துள்ளார். அந்த எண்களையும் அவற்றின் படிமூலங்களைக் கால்குலேட்டர் கொண்டு அறிவது இருக்கட்டும், அந்த எண்களை என்னுடைய டைரியில் எழுதுவதற்குள் அவற்றின் படி மூலங்களை சகுந்தலா தேவி கூறிவிட்டார் என்று பதிவிடுகிறார். இந்த செய்தியை ஆர்தர் ஜென்சென் “இன்டெலிஜென்ஸ்” என்ற உளவியல் இதழிலும் பதிவிட்டுள்ளார்.

சகுந்தலா தேவி கணிதம், ஜோதிடவியல் மற்றும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் முறை குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை இன்றும் புத்தகச் சந்தையில் சிறப்பாக விற்பனையாகக் கூடியவையாகும். “ஜாய் ஆப் நம்பர்ஸ்” என்ற புத்தகத்தில் பல்வேறு கணக்கீட்டு முறைகளை எளிமையாக விளக்கியுள்ளார்.

தனக்குக் கணிதத்தில் இவ்வளவு தேர்ச்சி எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவர், எப்போதுமே எண்களைப் பற்றி சிந்திப்பதும், எதையும் எண்களோடுப் பொருத்திப்பார்ப்பதும் தான் என்றார். அதாவது ஒருவர் தனக்கு பிடித்தமான ஒன்றைப் பற்றி எப்போதும் சிந்திப்பதும், தான் பார்க்கும் எல்லாவற்றோடும் அதனைப் பொருத்திப் பார்ப்பதும் தான் வெற்றியின் ரகசியம் என்கிறார். இதையே தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் கூறினார்.

சகுந்தலா தேவி 2013-ம் வருடம் ஏப்ரல் 21-ந்தேதி அன்று காலமானார். அவரைக் கவுரவிக்கும் விதமாக நவம்பர் 2013-ல் கூகிள் நிறுவனம் “கூகிள் டூடில்” எனப்படும் சின்னத்தை வெளியிட்டது. தற்போது சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் 2020-ல் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Popular Posts