Tuesday, 10 September 2019

தொட்டுவிடும் தூரம் தொலைவில் இல்லை

தொட்டுவிடும் தூரம் தொலைவில் இல்லை

ப.ஜஸ்டின் ஆன்றணி, உறுப்பினர், ஐ.நா.சர்வதேச இளைஞர் கவுன்சில்.

இ ஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கதறி அழுததும் பிரதமர் அவரை அணைத்து ஆறுதல் கூறியதையும் நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது கூறும் செய்தி பெரியது. நம் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் பெரிது என்பதும், இத்தகைய விஞ்ஞானிகளுக்கு தேசம் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்ற நம்பிக்கை வெளிச்சம் பிரதமரின் அரவணைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கதறலுக்கு பின்னே பொதிந்திருக்கும் அம்சங்களை நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “சந்திரயான்-2 திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கும்,” “நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது சந்திரயான்-2,” “நம் பாரத தேசத்தின் மூவர்ணக் கொடி நிலவில் பட்டொளி வீசிப்பறக்கப் போகிறது என்ற நம்பிக்கை,” அதற்கான கடின உழைப்பு, தியாகம், இதற்காக நம் தேசம் முழுவதும் ஏற்பட்ட நிலவில் சாதிக்கப் போகிறோம் என்ற மக்களின் எண்ண அலை இவையெல்லாம் தகர்ந்தது போன்ற எண்ணம்.

அனைத்து தரப்பினரும் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாலும், இது ஒரு சிறிய பின்னடைவு தான். ஆம், சாதனை என்னும் சாலையில் இது ஒரு மைல் கல்லே. இன்னும் இருக்கிறது தொடர்ச்சியான முயற்சி. அதுவே, நிலவை நாம் ஆராய்ந்தோம் என்ற சாதனையின் வாசலை திறக்கும். நம் நாட்டு விக்ரம் லேண்டர் இதுவரை எந்த நாடுமே ஆராயாத, ஆராய முற்படாத பகுதி வழியாக பயணித்தது என்பதையும், விக்ரம் சென்ற பகுதி பல லட்சம் கோடி ஆண்டுகள் சூரியனின் ஒளிபடாத மர்ம பகுதி என்பதையும், இதுவரை எந்த நாடும் அங்கே இறங்க, ஆய்வு செய்ய முயற்சிக்கவில்லை என்பதையும் அறியும்போது இந்த விஞ்ஞானிகள் எத்தகைய முயற்சிகளை புரிந்துள்ளார்கள் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேலாக பயணித்து, வெறும் 2.1 கிலோமீட்டர் தொலைவு தூரத்தில், நிலவில் தரையிறங்கும் முன்பாகத்தான் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய விஞ்ஞானத்துக்கு ஈடு இணை இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஆம், நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அறிவித்துள்ளார். இத்தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் கூற்றை இங்கே பகிர்வது பொருத்தம். “கடந்த 1979-ம் ஆண்டு எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு தலைவராக நான் இருந்தேன். அப்போது இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார். இந்தத் திட்டத்தின் முக்கிய பணி செயற்கைக்கோளை விண்ணில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதாகும். செயற்கைக்கோளை விண்ணில் ஏவ தயாராக இருந்தோம். இறுதி கட்டத்தில் செயற்கைக்கோளை ஏவ வேண்டாம் என கணினி சமிக்ஞை வெளியிட்டது. எனினும் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் செயற்கைக்கோளை ஏவினோம். ஆனால், இரண்டாவது கட்டத்தில் செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டு அது வங்கக்கடலில் விழுந்தது. இந்த செயற்கைக்கோளை ஏவும் முடிவை நான் எடுத்தேன். ஆகவே, இந்த தோல்விக்கு நானே முழு பொறுப்பு. இதுதான் என்னுடைய முதல் பெரிய தோல்வி. அதுவரை நான் வெற்றியை கையாண்டிருக்கிறேன். ஆனால், முதல்முறையாக தோல்வியை சந்தித்தேன். அதை எவ்வாறு கையாள்வது என்று நினைத்தேன்.

அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் செய்தியாளர் சந்திப்பில், நாங்கள் இன்று தோல்வி அடைந்து விட்டோம். எங்களுடைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் ஆகியவர்களுக்கு நான் முழு ஆதரவு அளிக்க உள்ளேன். அப்போது தான் அவர்கள் அடுத்த முறை வெற்றி பெறுவார்கள் எனக்கூறினார். இதன் மூலம் இந்த தோல்விக்கான முழுபொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி எஸ்.எல்.வி. வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த முறை இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் என்னை செய்தியாளர்களை சந்திக்க சொன்னார். அன்று நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டேன். அதாவது தோல்வி வரும்போது அந்த நிறுவனத்தின் தலைவர் அந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். அதே சமயம் வெற்றிவரும் பட்சத்தில் அதனை வேலை செய்த குழுவிற்கு அளித்துவிட வேண்டும். இத்தகைய பெரிய விஷயத்தை நான் எந்த புத்தகத்தை படித்தும் கற்றுக்கொள்ளவில்லை. எனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார்.

ஒவ்வொரு இந்தியரும் அறிய வேண்டிய ஒன்று. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் அனுபவத்துக்கும், அறிவுக்கும், அர்ப்பணிப்புக்கும் இம்மியளவு கூட யாரும் ஈடாக முடியாது. மட்டுமல்லாது, இந்த திட்டத்தில் இரண்டு பெண் விஞ்ஞானிகள் திட்ட இயக்குனர்களாக முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை சார்ந்த வனிதா முத்தையா, இஸ்ரோவின் பல முக்கிய விண்கலங்களில் செயல்பட்டுள்ளார். இன்னொருவர் 2007-ம் ஆண்டு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருது பெற்ற உத்தரபிரதேசத்தை சார்ந்த ரீத்து கரிதால்.

இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், அவரது நம்பிக்கை தான் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. நான் நடத்துகின்ற நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டிகளில் டாக்டர் சிவனின் படத்தை காண்பித்து, “இது யார்?” என கேட்கும்போது அங்கே குழுமியிருக்கும் அனைத்து மாணவ மாணவியரின் கரங்களும் உயரும், நான் சொல்கிறேன், நான் சொல்கிறேன் என்று. இது வரை எந்த நம்பிக்கை அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்ததோ, அதே நம்பிக்கை தான் இப்போது “விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க உதவியிருக்கும்” என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலக நாடுகள் அனைத்தும் புருவத்தை உயர்த்தி அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் வளர்ந்து வரும் நம் பாரத தேசம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என போற்றப்படட்டும். பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அவர்களை ஆரத்தழுவி ஆறுதல் கூறியது நம் தேசத்தின் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் ஒரு அருமருந்தாகும். எவ்வித சோதனை வரினும் தனது தேசத்தை கட்டமைத்து, வீறுநடை போட்டு முன்னேறிச்செல்லும் ஆற்றலின் மூலம் விஞ்ஞானத்தில், உலகின் நெற்றிப்பொட்டாக இந்தியா திகழும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Popular Posts