புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியது ஏன்?

புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியது ஏன்? அம்பேத்கர் தொல்.திருமாவளவன், தலைவர், வி.சி.க. நா ளை (டிசம்பர் 6-ந்தேதி) டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள். புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய முதன்மையான சாதனைகளுள் ஒன்று 1956 அக்டோபர் மாதம் 14-ந்தேதி நாக்பூரில் அவர் பல லட்சம் பேருடன் புத்தமதம் தழுவியதாகும். இது காலம் காலமாக நீடித்து நிலைத்திருக்கும் சனாதனக் கட்டமைப்பின் (சாதி பாகுபாடு)மீது விழுந்த பேரிடியாகும். அதன் ஆணிவேரை அசைத்த பெரு நிகழ்வாகும். “நான் ஒரு இந்துவாகப் பிறந்திருக்கலாம்; ஆனால், இந்துவாக இறக்கமாட்டேன்” என்று அம்பேத்கர் ஒரு நிகழ்வில் உறுதியேற்றார். அதன்படி, அவர் 1956,-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி ஒரு புத்த மததைச்சார்ந்தவராகவே காலமானார். அவர் புத்தம் தழுவிய அந்த நிகழ்வு, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் இந்து மதத்தில், தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் சாதிய இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த ஒரு மகத்தான புரட்சிகர நடவடிக்கையே ஆகும். ஆனால், இன்று சனாதன சக்திகள் அவரை ‘இந்து மதப் பற்றாளராகச்‘சித்தரிக்கும் திரிபு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனது இறுதி மூச்சு வரையில் இந்துத்துவ- சனாதன கோட்பாட்டை மிகவும் மூர்க்கமாக எதிர்த்துப் போராடிய ஒருவரை, இந்துத்துவப் பற்றாளராகத் திரித்துக் கூறுவது வேண்டுமென்றே அவரை இழிவுப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை அயல் நாடுகளில் தோன்றிய மதங்கள் என்பதால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவற்றைத் தேர்வு செய்யவில்லை யென்றும் புத்தம் இந்தியாவிலேயே தோன்றிய மதமென்பதாலும் அது இந்துமதத்தின் ஒரு கிளை என்பதாலும்தான் அதனைத் தழுவினார் என்றும் சனாதன சக்திகள் யாவரும் திட்டமிட்டு ஒரு கருத்தைப் பரப்புவது உண்மைக்கு மாறானது என்பதோடு, அது அவருக்கு எதிரான பெரும் அவதூறாகும். புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறியது ஏன்? இது வழக்கமான மதமாற்றம் தானா? அவர் மட்டுமே அல்லாமல் பல லட்சம் பேருடன் புத்தம் தழுவியது ஏன்? கடவுள் வழிபாடு, மோட்சம் போன்ற ஆன்மிகத் தேடலுக்கான ஒரு மாற்று முயற்சியா?.. இவை போன்ற கேள்விகள் யாவற்றுக்கும் ஒரே விடை, இது சமத்துவத்தை முற்றிலும் மறுக்கும் சனாதன கோட்பாட்டுக்கு எதிரான ஒரு மாபெரும் ஜனநாயக அறப்போர் என்பதே ஆகும். அவர் கடவுளைத் தேடவோ மோட்சத்தை நாடவோ முயற்சிக்கவில்லை. மாறாக, சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களையே முன்னெடுத்தார். அத்தகைய போராட்டங்களின் உச்சநிலைதான் பெருந்திரளாக புத்தம் தழுவிய பண்பாட்டுப் புரட்சியாகும். எனவே, இது ஒரு வழக்கமான மதமாற்றமல்ல. ஏனெனில்,புத்தம் என்பது ஒரு மதமில்லை. அது சனாதனத்துக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கோட்பாடு. மானுட சமத்துவத்துக்கு வழிகாட்டும் ஒரு வாழ்வியல் அறநெறி. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்னும் கற்பிதங்களை நொறுக்கும் வல்லமை வாய்ந்த ஒரு புரட்சிகரக் கருத்தியல். ஒவ்வொரு தனிநபரும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை மற்றும் சமூக ஒழுங்குமுறை ஆகியவற்றைப் போதிக்கும் மானுடப் பொதுமறை. அத்தகைய புத்தமதத்தையே புரட்சியாளர் அம்பேத்கர் பெரும்திரளான மக்களோடு ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், சமத்துவநெறியான புத்தத்தை எவ்வாறு சமத்துவத்துக்கெதிரான இந்து மதத்தின் ஒரு கிளையாகக் கூற முடியும்? ஆனால், இன்று நடைமுறையில் உலகின் பலநாடுகளில் பரவியுள்ள புத்தமதமானது இந்துத்துவம் என்னும் சனாதன கருத்தியலின் தாக்கத்துக்குள்ளனவையாக திரிபுநிலை அடைந்துள்ளன என்பதையும் மறுக்க இயலாது. குறிப்பாக, ‘மகாவிஷ்ணுவின் அவதாரமே கவுதம புத்தர்’ என பரவியுள்ள கட்டுக் கதைகளே இதற்கு சான்றாகும். இன்று உலகளவில் புத்தமதமானது மகாயானம், ஹீனயானம் என இருபெரும் பிரிவுகளாக இயங்குகின்றன. இவை இரண்டுமே இந்துத்துவமயமாகி உள்ளன. எனவேதான், புத்தம் இந்துமதத்தின் கிளையென்னும் கருத்து இங்கே வலுப்பெற்றுள்ளது. அதனால்தான், புத்தம் தழுவிய புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவ ஆதரவாளர்’ என்று முத்திரை குத்துகிற முயற்சியில் சில அதிதீவிர சனாதனிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புத்தத்தின் இன்றைய உண்மைநிலையை அறிந்ததால்தான் புரட்சியாளர் அம்பேத்கர், தான் ஏற்றுக்கொண்ட புத்தமதமானது, தற்போது திரிபுநிலை அடைந்துள்ள மகாயானமோ ஹீனயானமோ அல்ல என்பதை உணர்த்தும் வகையில், அதனை ‘நவாயானம்‘ என்று அறிவிப்பு செய்தார். அதாவது புதிய புத்தம் அல்லது புதிய பாதை என அறிவித்தார். இது இந்துத்துவமயமானது அல்ல. எனவே, இந்துத்துவமென்னும் சனாதனக் கருத்தியலுக்கு நேரெதிரான நவாயானம் என்னும் புதிய புத்தத்தைத் தழுவிய புரட்சியாளர் அம்பேத்கரின் மீது இந்துத்துவ ஆதரவாளர் என்கிற அடையாளத்தைத் திணிப்பது ஒருவகை கருத்தியல் மோசடியாகும். புத்தத்தைப் பரப்பும் வெகுமக்கள் அமைப்புக்கு ‘சங்கம்’ என்றே பெயர். அதனை ‘மதம்’ என்று அழைப்பதில்லை. ஏனெனில், மதம் என்கிற வரையறைக்குள் புத்தம் அடங்குவதில்லை. மதம் என்பதற்கு மிகவும் அடிப்படையான தேவை இறைகோட்பாடாகும். அதாவது, இறைவன் அல்லது கடவுள் என்பதை மையப்படுத்தி, அதற்கான கோட்பாட்டைப் பரப்புவதற்கென கட்டமைக்கப்படும் நிறுவனம்தான் மதம். உருவமாகவோஅருவமாகவோ, ஒரே இறையாகவோ பல்வேறு இறையாகவோ இறையை ஏற்றுக்கொள்வதும், இறைக்கான வழிபாட்டுமுறைகளை சடங்கு, சம்பிரதாயங்களை வரையறுத்துக் கொள்வதும் மதம் என்கிற நிறுவனத்தில் தவிர்க்க இயலாதவையாகின்றன. புத்தத்தில் இறைகோட்பாடே இல்லை என்பதால், அது அத்தகைய வரையறைகளுக்குட்படாத ஒன்றாகிறது. அதாவது, புத்தம் என்பது கடவுள், உருவம், அருவம், அருவுருவம், வழிபாடு, வழிபாட்டுத்தலம், மந்திரம், சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் போன்றவற்றுடன் இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு நிறுவனம் இல்லை. அத்துடன், கவுதமபுத்தர் இயேசுபிரானைப் போல ஆண்டவரோ, நபிகள் நாயகத்தைப் போல இறைத்தூதரோ அல்ல. அவர், மாயைகளில்லா மானுடப் பொதுமறை வழங்கிய ஒரு மாமனிதர். எனவே, அவரது போதனைகளான புத்தம் என்பது ஒரு மதம் அல்ல; சமத்துவ கலாசாரத்தைப் பரப்பும் ஒரு சங்கம். அந்த வகையில் புதியபுத்தம் என்னும் நவாயானம் என்பது புரட்சியாளர் அம்பேத்கர் விளக்கும் ஒரு புதியபாதையாகும். ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்கிற அறநெறி தொகுப்பானது, புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கியுள்ள ஆதிபுத்தம் ஆகும். ‘கடவுளைப் போதிக்காத புத்தரையே கடவுளாக்கிய’ சீனா, ஜப்பான், தாய்லாந்து, மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இயங்கும் இன்றைய புத்தம் எதுவும் ஆதிபுத்தமல்ல. ஆனால், புரட்சியாளர் அம்பேத்கரால் விளக்கி விவரிக்கப்படும் நவாயானம் என்னும் புதியபுத்தம், கவுதமபுத்தரால் போதிக்கப்பட்ட ஆதிபுத்தமே ஆகும். இன்று உலகம் முழுவதும் புத்தர்களைப் போலவே புத்தரல்லாதவர்களும்கவுதமபுத்தரின் திருவுருவங்களை ஆன்மீக அடையாளமாகவோ, கருத்தியல் குறியீடாகவோ, அழகியல் மற்றும் கலாச்சார வடிவமாகவோ தத்தமது விருப்பங்களுக்கேற்ப பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இந்துக்கள், கவுதமபுத்தரின் படங்கள், சிலைகள், பொன்மொழிகள் போன்றவற்றைப் பல்வேறு நோக்கில் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் புத்தநெறியை உள்வாங்காதவர்கள் என்றாலும் கவுதமபுத்தரை ஏதோவகையில் தங்களுக்கான அடையாளமாகக் கையாளுகின்றனர்.இத்தகைய போக்குகள் புத்த கோட்பாட்டைப் பரப்புவதற்கான முயற்சியாகாது. ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் புத்த கோட்பாட்டை, அதன் அடிப்படை கருத்து சிதையாத வகையில் அடுத்தடுத்த தலைமுறையினரிடையே பரப்பும் முயற்சியில்தான் நவாயான புத்தத்தை முன்மொழிந்துள்ளார். இந்த புதிய புத்தத்தின் மூலம் சனாதனத்தை வேரறுக்க முடியுமென்பதே அவரது நம்பிக்கையாகும். சனாதனத்தை வீழ்த்துவதற்கான ஒரு கோட்பாடாக புரிந்துகொள்வதிலிருந்தேபுத்தத்தை நாம் புரட்சியாளர் அம்பேத்கரின் பார்வையில் உள்வாங்க முடியும். இல்லையேல், புத்தத்தையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் சனாதனிகளின் இந்துத்துவ பார்வையில் தான் புரிந்துகொள்ள நேரும்.

Comments