Sunday 19 August 2018

மனிதநேயம் வளர்ப்போம்

மனிதநேயம் வளர்ப்போம் எழுத்தாளர் முனைவர் வா.நேரு மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு. உயிர் அழிப்பு, பொருள் அழிப்பு, உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே மானுடத்துயர்தான். அந்த மானுடத்துயர் இயற்கைச்சீற்றங்களால், சாதி, மதச்சண்டைகளால், நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். எந்தவிதமான குற்றமும் இழைக்காத லட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள். அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட துயரங்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள். காயம்பட்டு குருதி வழிந்து கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா, எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனித உயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும், தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள். அவர்களை நினைவுகூரும் நாள்தான் மனிதநேய நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2003-ம் ஆண்டு, ஆகஸ்டு 19-ந்தேதி ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி செர்சியோவெய்ரா டீமெல்லோ என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில் நாட்டைச்சார்ந்தவர். வங்காளம், சூடான், மொசம்பியா, பெரு, கம்போடியா, யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர் நீக்கியவர். அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி கொல்லப்பட்டார். அவரை சிறப்பிப்பதற்காக இறப்பிற்கு பின்பு ஐ.நா. சபையால் அவருக்கு மனித நேய விருது அளிக்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோவின் குடும்பத்தினர் அவருடைய பெயரால் ஒரு அறக்கட்டளையை நிறுவினர். குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை, துடைப்பவர்களை நினைவுகூரும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ம் ஆண்டிலில் இருந்தே முயற்சிகள் செய்தனர். 2008-ம் ஆண்டு டீமெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர். அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து நாடு ஐக்கியநாடுகள் சபையில் அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 2008-ம் ஆண்டில் ஆகஸ்டு 19-ந்தேதியை உலக மனிதநேய நாளாக அறிவித்தது. ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த நாளில் கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர். 2003-ல் டீமெல்லோ கொல்லப்பட்ட பின்பு இந்த நாள்வரை 4 ஆயிரத்து 76 மனிதநேயர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் நினைவை, செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும். இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம், ‘பொதுமக்களை குறிவைக்காதீர்கள்’, போராளிகளோ அரசாங்கமோ போரிடும்போது பொதுமக்களை குறிவைக்காதீர்கள் என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம். இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கொல்கத்தா நகரின் தெருக்களிலே தொழுநோயால் படுத்துக்கிடந்த மனிதர்களுக்கு தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனிதநேயப் பணியாளர்கள். ‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்; தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்; தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை நினைவில் கொள்ளும் நாள் இது. நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம். இன்று (ஆகஸ்டு 19-ந்தேதி) உலக மனிதநேய நாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts