உடலின் தலைமைச் செயலகம்! | 

உடலின் தலைமைச் செயலகம்! | டாக்டர் கு. கணேசன் |

உடலில் எந்த ஒரு செயலும் மூளை/அதோடு இணைந்த தண்டுவடத்தின் கட்டளைப்படிதான் நிகழ்கிறது. அதனால்தான் மூளையை உடலின் ‘தலைமைச் செயலகம்’ என்கிறோம். அதோடு, முக்கியமானத் தகவல்களைத் தன்னிடம் சேமித்துக்கொள்ளும் திறன் மூளைக்கு இருப்பதால், நினைவாற்றலை வளர்ப்பதும், கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெருக்குவதும், அறிவுத் திறனை மேம்படுத்துவதும் நம்மால் முடிகிறது.

இவை தவிர, மூளை நம் எண்ணங்களின் மையமாகவும் இருக்கிறது. நமக்குள் உண்டாகும் ஆனந்தம், அழுகை, சிரிப்பு, வியப்பு, கவலை, கோபம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கும் மனநிலைகளுக்கும் மூளைதான் காரணம். மனித மூளைக்குப் பேச்சுத் திறனும், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் உள்ளதால்தான் முதுகெலும்புள்ள மற்ற விலங்குகளிலிருந்து முன்னேறிய உயிரினமாக மனித இனம் கருதப்படுகிறது.

பூச்சிகள், புழுக்கள் போன்ற முதுகெலும்பு இல்லாத உயிரினங்களுக்கு ‘மூளை’ எனத் தனி ஓர் உறுப்பு இல்லை. பதிலாக, ‘நரம்பு முடிச்சுகள்’ (Ganglia) அவற்றின் உடலியக்கங்களை முறைப்படுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன. அந்த உயிரினங்களில் ஆக்டோபஸுக்கு மட்டுமே ஓரளவு வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது. பாலூட்டிகளில் பரிணாம வளர்ச்சிப்படி மனித மூளைக்கு அடுத்தபடியாக சிம்பன்ஸி, கொரில்லா போன்ற வாலில்லா குரங்குகளுக்கும், டால்பின் மற்றும் திமிங்கிலத்துக்கும் உயர் வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது.

மூளையின் அளவு என்ன?
பிறக்கும் குழந்தைக்கு மூளையின் எடை அரை கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. பெரியவர்களுக்குச் சராசரியாக 1.4 கிலோ. நம் உடல் எடையோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம்தான். ஆனால், உடல் மொத்தமும் பயன்படுத்தும் ஆக்ஸிஜன் அளவில் 20% மூளையின் செயல்பாடுகளுக்குத் தேவை. காரணம், அவ்வளவு வேலை! விலங்குகளில் திமிங்கிலத்தின் (Sperm whale) மூளைதான் அதிக எடை கொண்டது, 7.8 கிலோ! ஆனால், அதன் உடல் எடையில் இது 0.06% மட்டுமே.

மூளையின் அளவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு அளவு சற்றே குறைவு. ஆனால், அவர்களின் மூளையில் நரம்பணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால், ஆண்களைவிடப் பெண்களுக்கு 10% நரம்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகம். ஒருவருடைய மூளையின் கனத்துக்கும் புத்திசாலித் தனத்துக்கும் தொடர்பில்லை. அப்படி இருந்தால், உலகில் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும். காரணம், மனிதர்களில் அவர்களின் மூளைதான் அதிக கனம்.

மூளை எப்படி இருக்கும்?
ஒரு தலைப்பாகைபோல் காணப்படுகிற மூளை ஊதா கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் (Greyish pink). இதன் மேற்பரப்பு ஒரே தளமாக இல்லாமல், கசங்கிய துணிபோல் மடிப்பு மடிப்பாகவும், பாளம் பாளமாகவும் இருக்கிறது. இந்த மடிப்புகளில் ஓர் ஒழுங்கு இருப்பதில்லை. இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. இந்த மடிப்புகளால் மூளையின் பரப்பளவு அதிகமாவது ஒரு நன்மை. மேலும், இந்த மடிப்புகளை வைத்து மூளையை வலது, இடது என இரண்டு பாதியாகவும், அந்த இரண்டு பாதிகளை முன் பக்கம், பின் பக்கம், இரண்டு பக்கப் பகுதிகள் என நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது.

‘கபாலம்’ (Cranium) எனும் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது, மூளை. என்றாலும், நாட்டில் முக்கியத் தலைவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதுபோல், மூளைக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்படி மூளையைப் போர்த்திப் பாதுகாக்கிற உறைகளுக்கு ‘மூளையுறைகள்’ (Meninges) என்பது பொதுவான பெயர். அவற்றுக்கு வன்வெளிச்சவ்வு (Dura mater), சிலந்தியுருச் சவ்வு (Arachnoid mater), மென்உள்சவ்வு (Pia mater) எனத் தனிப் பெயர்களும் உண்டு. வன்வெளிச்சவ்வு கபாலத்தை ஒட்டியும் மூளையின் வெளியுறையாகவும் அமைந்துள்ளது. மென்உள்சவ்வு மூளையின் உட்பகுதியைப் போர்த்தியுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் சிலந்தியுருச் சவ்வு இருக்கிறது. இந்த மூன்று சவ்வுகளும் மூளையை மட்டுமல்லாமல், தண்டுவடத்தையும் போர்த்திப் பாதுகாக்கின்றன.

நாட்டில் மாநில முதல்வருக்குச் சிறப்புப் பாதுகாப்பு உள்ளதுபோல் மூளைக்கும் உண்டு. சிலந்தியுருச் சவ்வுக்கும் மென்உள்சவ்வுக்கும் நடுவில் ‘சிலந்தியுருச் சவ்வு இடைவெளி’ (Subarachnoid space) இருக்கிறது. அதில் ‘மூளைத் தண்டுவடத் திரவம்’ (Cerebrospinal fluid) பயணிக்கிறது. இது ஒரு குஷன்போல் அமைந்து, தலையில் லேசாக அடிபடும்போது வலுவான கபால எலும்பால் மென்மையான மூளைத் திசுக்கள் அமுக்கப்படுவதைத் தடுத்து, மூளையின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

அடுத்து, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு ராணுவப் பாதுகாப்பு தரப்படுவதைப்போல் மூளைக்கும் தனிச் சிறப்புப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதற்கு ‘மூளை ரத்த வேலி’ (Blood brain barrier) என்று பெயர். மூளைக்கு ரத்தம் கொடுக்கும் தந்துகிகளில் (Capillaries) மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு ஏற்பாடு இது. எப்படி? இங்குள்ள செல்கள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதால், மற்ற தந்துகிகளில் ரத்தப் பொருட்கள் கடத்தப்படுவதுபோல் அவ்வளவு எளிதாக இங்கே கடத்த முடியாது. இந்த அமைப்பானது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர், சில வாயுக்கள், ஊட்டச் சத்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மூளைக்குள் அனுப்பும். மூளையைப் பாதிக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்றவற்றைச் சாமானியமாக மூளைக்குள் நுழைய விடாது. மூளைக்குள் சதா நுழையும் இன்னும் பல ஆபத்தான பொருட்களையும் இது சல்லடைபோல் வடிகட்டிவிடும். இதன் பலனால், மூளைக்கு ஏற்படக்கூடிய பல பாதிப்புகள் தாமாகவே குறைந்துவிடும். எனவேதான் இதை மூளைக்குக் கிடைத்துள்ள ‘ராணுவப் பாதுகாப்பு’ என்கிறோம்.

மருத்துவர்கள் மூளையை முன் மூளை (Forebrain), நடு மூளை (Midbrain), பின் மூளை (Hindbrain) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கின்றனர்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


Comments