Thursday 19 April 2018

மனம் இருந்தால் வழி உண்டு

முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை கூடுதல் இயக்குனர் பிற மாநிலத்தவர் சென் னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல இப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய கூலி வேலை கூட செய்வதைப் பார்க்கிறோம். இது சரியா? இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, பிற மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனலாம். வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதாலும், உழைக்க மனம் இருக்கிறது என்பதாலும், ஆயிரம் மைல் தூரம் கடந்து இங்கே வந்து வேலை செய்கிறார்கள். அவர் களைக் குறை சொல்ல முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளா, பெங்களூரு, மும்பை, டெல்லிக்கு வேலைக்குப் போனார் கள். அதுபோலத்தானே இதுவும். தமிழ்நாட்டில் 85 லட்சம் பேர் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத இன்னும் பல லட்சம் பேர் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அப்படி இருக்க, இன்று தமிழ்நாட்டு விவசாயிகளை கேளுங்கள். விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் வேலை செய்ய தயங்குவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டதால், உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது. படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா? இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கத் தெரியுமா? அல்லது கணினி மென்பொருள் எழுதத்தான் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று பிற மாநிலத்தவர் கள் இங்கு வந்து செய்கிறார்கள். புதிதாக வந்துள்ள நீட் என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பிற மாநிலத்தார் இங்கு வந்துள்ளனர். படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள்? என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பிற மாநிலத்தார் இன்னும் சிறப்பாகச் செய்வதை உள்ளூர் சோம்பேறிகள் விரும்புவதில்லை. வெளிமாநிலத்தவர் ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் அம்மாநிலத்தவர் அனைவரும் குற்றச் செயல் செய்பவர்கள் என்ற ஒரு பிரசாரத்தை சில விஷமிகள் பரப்பி விடுகிறார்கள். சில உள்ளூர் குற்றவாளிகள் அந்த அப்பாவிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கும்பல் கும்பலாக வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகியும் வெளி மாநிலத்தவர் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது என்றால் அவர்களது உழைப்பு உள்ளூரில் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. விவசாயம் செய்பவர்களுக்கும், செங்கல் சூளை நடத்துபவர்களுக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இவர்களது உழைப்பு கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உருவாகும் வேலைகளை செய்ய மறுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கல்வித்தகுதிக்கேற்ப தொழில்நுட்ப செயல் செய்து அதிக பொருள் ஈட்டினால் அவர்கள் வாழ்க்கையும் உயர வாய்ப்பு நிச்சயம் உண்டு. மற்ற மாநிலங்களுக்கு சென்று தொழில்நுட்பம் வாய்ந்த வேலையில் சேரலாம். பிற நாடுகளுக்கு கூடப் போய் வேலையில் சேரலாம். இதில் தயக்கம் காட்டக்கூடாது. அப்படியில்லாமல், கிடைத்த வேலை வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு, அந்த வேலையை வெளி மாநிலத்தார் செய்கிறார்களே என்று வருத்தப்படுவதில் நியாயமில்லை. இந்த உலகம் உழைப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். சுறுசுறுப்பான மக்கள், வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த சிறு துளி பணம் பெருந்தொகையாக ஒருநாள் மாறும். அந்த தொகையை வைத்து அவர்கள் நிலம் வாங்குவதையும், தொழிற்சாலை கட்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் விவசாயம், தொழில், சேவை என்று வேலை செய்ய தமிழ்நாட்டவர் முன்வரவில்லை என்பதால் வேறு மாநிலத்தவர்கள் அந்த வேலைகளை செய்கிறார்கள். நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறார்கள்; அவர்களது வாழ்க்கையையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் பலர் வேலை செய்ய விருப்பமில்லாத சோம்பேறிகளாகவும், இலவசமாக கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடத்தும் சராசரி மனிதர்களாகவும், தொலைக்காட்சிகளில் வேடிக்கைகள் கண்டு மகிழும் பொழுதுபோக்கு ஜீவிகளாகவும், பண்டிகைகளை மட்டும் சரியாக அனுசரிக்க அக்கறை காட்டும் அப்பாவி மனிதர்களாகவும் தொடர்ந்து இருப்பார்களேயானால், இருக்கும் நிலத்தையும் இழந்து அதே நிலத்தில் கூலிக்கு வேலை பார்க்கும் நிலைமை வரக்கூடும். ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்கத் தயங்கும் மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன் எப்படி கொத்தடிமைகளாக வாழ்ந்தார்களோ அதுபோல பிற மாநிலத்தவர்களின் பெரிய பண்ணைகளில் கொத்தடிமைகளாக அவர்கள் ஊரிலே வாழ நேரிடும். ஆக, இயற்கை வளங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் “வேலை செய்யத் தயார்” என்ற மனநிலை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து இன்று பொருளாதார வல்லரசாக திகழும் ஜப்பானிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இன்று வேலையில்லாத மக்களுக்குத் தேவை “வேலை செய்ய வேண்டும் என்ற மனம்” ஒன்றுதான்.

No comments:

Popular Posts