Tuesday, 13 December 2016

சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?”

சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?" | கே.கே.மகேஷ் |பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத்தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது. இதயத்தில் இடம்பிடித்த பன்னீர் ஓபிஎஸ் வளர்ச்சிக் கதையின் சுருக்கத்தை உணர்த்த ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள் அவர்கள். 1999 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா வீட்டுச் செல்லப்பிள்ளையான டி.டி.வி.தினகரன், பெரியகுளம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காகத் தன் பூர்வீக வீட்டையே கட்சி அலுவலகமாக்கிக் கொடுத்தார். பிறகு, அவர் தங்குவதற்காக சொந்தத் தம்பியின் வீட்டையே கொடுத்தார் ஓபிஎஸ் என்பதெல்லாம் தெரிந்த செய்திதான். அந்த சந்தர்ப்பத்தில் தினகரனை உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் எல்லாம் பணம் காய்க்கும் மரமாகப் பயன்படுத்த, அந்த மரம் தன் வீட்டுக்கொல்லையிலேயே இருந்தபோதிலும்கூட, அதில் ஒரு இலையைக்கூடப் பறிக்க முயற்சிக் கவில்லையாம் ஓபிஎஸ். தேர்தல் முடிந்த கையோடு, செலவுக் கணக்கைப் பைசா சுத்தமாக ஒப்படைத்ததுடன், மீதிப் பணத்தையும் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். 'இப்படி ஒரு மனுஷரா?' என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்திருக்கிறார் தினகரன். 'பணிவுச் செல்வம்' தோட்டத்தின் இதயத்தில் இடம்பிடித்தது இப்படித்தான். 2001 சட்டசபைத் தேர்தலின்போது, வாய்ப்புக் கேட்டு தினகரனைப் பலரும் அணுகியிருக்கிறார்கள். தற்செயலாகத் தன்னைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம், "நீங்க சீட் கேட்கலையா?" என்று தினகரன் கேட்க, "பெரிய பெரிய ஆளுங்கல்லாம் இருக்காங்கண்ணே" என்றிருக்கிறார் பணிவாக. "நீங்க பணம் கட்டுங்க.. நான் பார்த்துக்கிறேன்" என்றிருக்கிறார் தினகரன். அந்தத் தேர்தலில் அதிமுகவில் நிறையப் பேர் சீட் 'வாங்கினார்கள்'. ஆனால், பன்னீர்செல்வத்துக்கோ சீட் 'கொடுக்கப்பட்டது'. அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் பன்னீர் புகழைச் சொல்லியிருந்தார் தினகரன். புள்ளிக்கு ஆசைப்பட்ட நத்தம் அமைச்சர்களின் இலாகா நியமனத்திலும் சசிகலா குடும்பத்தின் பங்கு இருந்தது. வருவாய், மதுவிலக்கு ஆயத்துறையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, மறு பேச்சில்லாமல் ஓபிஎஸ் கையில் ஒப்படைத்தது போயஸ் தோட்டம். மேலிடம் சொன்னபடி செயல்பட்டிருக்கிறார். டான்சி வழக்கு தீர்ப்பு காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க, அவசரமாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, முதல்வர் ஆனார் பன்னீர்செல்வம். அந்தக் காலகட்டத்தில் 163 நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தாலும், முதல்வரெனத் தனக்குத் தானேகூடச் அவர் சொல்லிக்கொள்ளாததற்குக் கிடைத்த பரிசு, 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் கிடைத்த முதல்வர் வாய்ப்பு. 225 நாட்கள் முதல்வராக இருந்த அவர் மீது, பின்னாளில் சொத்துக் குவித்ததாகப் புகார் எழுந்தது. அப்போதும் அவர் சாதுரியமாகவே செயல்பட்டிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில், அடித்ததற்கு மேல் புள்ளி கேட்கிறபோது, எதிரணியினர் "ஆட்டமா; புள்ளியா?" என்று கேட்பார்கள். புள்ளியைக்கூடப் பிறகு எடுத்துக்கொள்ளலாம், ஆட்டத்தைத் தக்க வைத்தால் போதும் என்று திறமையான வீரர்கள் முடிவெடுப்பார்கள். அதே முடிவைத்தான் பன்னீர் எடுத்தார். புள்ளிக்கு ஆசைப்பட்டதால்தான் நத்தம் ஆட்டமிழந்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பன்னீர்செல்வம் ஆன பேச்சிமுத்து பன்னீர்செல்வம் எதிர்காலச் சவால்களையும் கனஜோராகக் கையாள்வார் என்கிறார்கள். அதெப்படி என்று கேட்டபோது அவர்கள் சொன்ன கதை இது. இ.மா. ஓட்டக்காரத் தேவரின் மூத்த மகனான பேச்சிமுத்து (பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர்) தந்தையின் வட்டித் தொழிலுடன், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். அதில் மிஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்த அவர், தன் நண்பர் விஜயனுடன் சேர்ந்து வீட்டருகிலேயே பி.வி.கேன்டீன் என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்தவரை, தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தவர் கம்பம் செல்வேந்திரன். 1984 தேர்தலின்போது, ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட, அந்த ஆண்டிபட்டியையும் உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் கம்பம் செல்வேந்திரன். ஆண்டிபட்டி தொகுதியை மட்டும் கணக்குப்போட்டுப் பார்த்து, எம்ஜிஆரைவிட அதிக வாக்குகள் வாங்கிய செல்வேந்திரன் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தளவுக்கு உள்ளூரில் செல்வாக்குடன் வலம் வந்தவர் செல்வேந்திரன். ஒரு கூட்டத்தில் பேச்சிமுத்துவைப் பாராட்டிப் பேசிய கம்பம் செல்வேந்திரன், "தம்பி பேச்சிமுத்து, திராவிட இயக்கத்தின் வேரான, நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சர் பி.ட்டி.பன்னீர்செல்வத்தைப் போன்றவர்" என்று போகிற போக்கில் புகழ்ந்துதள்ள, புளகாங்கிதம் அடைந்த பேச்சிமுத்து, பின்னாளில் அதன் பொருட்டு மாற்றிக்கொண்ட பெயர்தானாம் பன்னீர்செல்வம். 1989-ல் அவரை அதிமுக ஜானகி அணியின் பெரியகுளம் நகரச் செயலாளராக்கி இருக்கிறார் செல்வேந்திரன். அதே செல்வேந்திரன், ஜெயலலிதா தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று திமுகவுக்குப் போனார். கண்மூடித்தனமான விசுவாசி என்றால், செல்வேந்திரன் பின் அல்லவா ஓபிஎஸ் சென்றிருக்க வேண்டும்? ஆனால், எது உறுதியான பிடி என்பதை அறிந்தே அவர் செயல்பட்டிருக்கிறார்! 1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை தினகரன் களமிறங்கியபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் கம்பம் செல்வேந்திரன். திமுக தரப்பில் யார் யாரைப் பணத்தால் அடித்தால், செல்வேந்திரனை வீழ்த்த முடியும் என்று தினகரனுக்கு வியூகம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ்! அரசியலில் ஆசான் என்ன, நட்பு என்ன? "முதல் அமைச்சர் எங்கள் ஊர்க்காரர் என்பது சந்தோஷம். ஆனால், அவரது தம்பியும், மகனும் உள்ளூரில் மட்டுமல்ல துறையிலும் கூட புகுந்து விளையாடுகிறார்கள். குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தாவிட்டால், பதவியைத் தக்க வைப்பது கஷ்டம்" என்ற வருத்தமும் உள்ளூர் மக்களுக்கு இருக்கிறது. பாஜக வளையத்துக்குள் அதிமுக சென்றுவிடுமோ, மோடி வளையத்துக்குள் சசிகலா இருக்கிறாரோ என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் பெரியகுளத்துக்காரர்கள் ஒரு விஷயம் சொன்னார்கள். "ஓபிஎஸ் எல்லா இடங்களிலும் பணிபவர் கிடையாது; எங்கே பணிந்தால் அதிகாரம் கிடைக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்" என்கிறார்கள். இதை அவர்கள் சொன்னபோது, ஜெயலலிதா உடலுக்கு, மோடி அஞ்சலி செலுத்த வருகையில் ஓபிஎஸ் பணிவுச்செல்வமாக மாறியது மனக்கண்ணில் வந்துபோனது. ஜெயலலிதாவைத் தவிர, இதுநாள் வரை வேறு எவருக்கும் அவர் இவ்வளவு பணிவாக வணக்கம் சொல்லி நான் பார்த்ததில்லை. ஒருமுறை சென்னை விமான நிலையத்தில், தன் அமைச்சரவை சகாக்களைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைப் பவ்யமாக வணங்கிய ஓபிஎஸ், சிங்குக்கோ கம்பீரமாக நெஞ்சை உயர்த்தி வணக்கம் சொன்னார். ஓபிஎஸ்ஸை வளர்த்துவிட்ட செல்வேந்திரன், சேடப்பட்டி முத்தையா யாரும் இப்போது அதிமுகவில் இல்லை. தினகரன் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ்ஸோ ஜெயலலிதாவின் இடத்தில் இருக்கிறார் என்றால், அது வெறும் அதிர்ஷ்டம் மட்டும் அல்ல என்று தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்! "அதிமுக வரலாற்றில் கட்சித்தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்ற நிலை வந்ததேயில்லை. இப்போது வந்திருக்கிறது. அதை சமாளிப்பதற்கான திறன் பெற்றவரா ஓ.பி.எஸ்?" என்ற கேள்வியை பெரியகுளத்துக்காரர்களிடம் கேட்டேன். "முதல்வர் பதவியைத் தொடர அவர் அனுமதிக்கப்படுவாரா?" என்று திருப்பிக்கேட்டார்கள். ஆமால்ல?! 

No comments:

Popular Posts