Sunday 9 February 2020

திருவள்ளுவரும், அறிவியலும்...

திருவள்ளுவரும், அறிவியலும்... ப.மு.நடராசன், இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமியில் மட்டுமே தண்ணீரும், காற்றும் உள்ளது. வேறு எந்த கோளிலும் இவை இருப்பதாக இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை.

நீரும், காற்றும் இல்லையேல் இந்த பூமியும் உயிரினங்கள் வாழ தகுதியற்ற ஒரு கிரகமாக மாறிவிடும். நீரும், காற்றும் தாராளமாக கிடைப்பதால், அவற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எழுவது இல்லை.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் நீரைப்பற்றிய அறிவியல் ரீதியிலான சிந்தனை குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பருவகால ஆய்வு மைய முன்னாள் இயக்குனரான முனைவர் ப.மு.நடராசன்...

திருக்குறளின் இரண்டாம் அதிகாரமான, ‘வான் சிறப்பு’ மழை, நீர் ஆகியவற்றின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் பற்றி பேசுகிறது. இயற்கை வளங்களுள், சிறப்பான நீரைப் பற்றி, திருவள்ளுவருக்கு முன்பும், அவரது சமகாலத்திலும் வாழ்ந்த புலவர்கள், சிந்தனையாளர்கள் திருவள்ளுவர் போல் சிந்தித்ததாக தெரிவிக்கவில்லை. நீரையே கருப்பொருளாக்கி, தனக்கே உரிய வழிமுறையில், ‘வான் சிறப்பு’ பற்றி, பத்து குறட்பாக்களில் நீரின் அருமை பெருமைகளை பற்றி திருவள்ளுவர் சிந்தித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

பொய்க்காது பெய்யும் மழையால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், மழை பெய்யாவிடில் கடலும் வற்றும், உழவர்கள் விவசாய தொழிலை தவிர்ப்பர், உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் பசியால் வாடுவர், தாகமும் தீராது, பசும்புல்லும் துளிர்க்காது, தெய்வ வழிபாடு, தானம், தவம் நடைபெற வாய்ப்பில்லாமல் போகும். இதுபோன்ற நீரினால் அடையும் நன்மைகளையும், அவலங்களையும், வான் சிறப்பு அதிகாரத்தின் வாயிலாக மக்கள் மனதில் பதியவைக்கிறார் திருவள்ளுவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக,

“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.”

என்னும் இறுதிக் குறள், “நீரில்லாமல் உலக மக்கள் வாழ்க்கை இயங்காது, மழை பெய்யாவிடில் உலக மாந்தரின் ஒழுக்கம், கெடும்” என கூறுவது, மிகவும் நுட்பமான பொருளாதாரச் சமூகவியல் சிந்தனையாகும்.

திருவள்ளுவர், அறத்துப்பாலின் 38 அதிகாரங்களில், கடவுள் வாழ்த்துக்கு பிறகு, தலையாய அறத்தைக் கூறும் அதிகாரமாக வான் சிறப்பு அமைகிறது. இது, மழையின் தனிச்சிறப்புகள், பயன்கள் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.

வான் சிறப்பை அறிவதே அறமா என்று நாம் சிந்திக்கும் பொழுதுதான், இந்த இயலின் பத்தாவது குறளில், ‘யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு’ என்ற சொற்களில், ‘மழை பெய்யாவிடில் உலக மக்களின் ஒழுக்கம் கெடும்’ என்ற அவரது கூற்றின் பொருட்செறிவு வியக்க வைக்கிறது.

ஒழுக்கம் கெட்டால், மக்களின் நற்பண்புகள் அழியும் என்பதை ‘பசி வந்திடின் பத்தும் பறக்கும்’ என்ற அவ்வையாரின் அமுத மொழி நமக்கு தெரிவிக்கிறது. எனவே மக்களின் ஒழுக்கம் கெட்டால், அவர்களால் உலக அறங்களை காப்பாற்ற இயலாது. ஆகவே ஒழுக்கத்துடன் வாழ்வதே உலக அறங்களில் தலையாயது என்பதை பத்தாவது குறளில் விளக்குவதால், வான் சிறப்பு அதிகாரத்தை ஏன் அறத்துப்பாலின் முதல் அதிகாரமாக அமைத்தார் என்பதை நமக்கு திருவள்ளுவர் தெளிவுபடுத்திவிட்டார்.

‘நீரின் றமையா துலகு’ என்ற மூன்று சொற்களின் பொருள் பற்றி நூற்றுக்கும் மேலான உரையாசிரியர்கள் தம் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களில் முதன் முதலில் உரையெழுதிய மணக்குடவரில் தொடங்கி பரிமேலழகர், மு.வரதராசன், தேவனேயப் பாவாணர், கலைஞர் கருணாநிதி ஆகிய பலரின் உரைகளையும் உற்று நோக்கி பார்க்கையில், இம்மூன்று சொற்களுக்கும், நீரில்லாமல் உலக மக்கள் வாழ்க்கை இயங்காது என்ற வெளிப்படையான பொருளை மட்டுமே அவர்கள் கூறி இருக்கிறார்கள். இது ஏற்புடையது எனினும் வள்ளுவரின் இத்தொடர் அறிவியல் நோக்கில் மேலும் ஆழ்ந்த விளக்கங்களுக்கு வழி விடுகிறது.

பூமியின் உள்ளும், புறமும், வளிமண்டலத்திலும் நீர் ஆற்றும் இயற்கை சுழற்சிகள், அதனால் உற்பத்தியாகும் இயற்கை வளங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்யும் இன்றைய அறிவியலாளர்கள், இந்த மூன்று சொற்கள், “மழையில்லையேல் மக்கள் இயல்பு வாழ்க்கை இயங்காது” என்ற வெளிப்படையான எளிய பொருளை விஞ்சிய பல தகவல்களை உள்ளடக்கியது என உறுதியாக கூறமுடியும்.

மழை நீரை மட்டும், உலகின் எப்பகுதிக்கும் நீர்ச் சுழற்சி வாயிலாக நீர் எடுத்துச் செல்லவில்லை. வளி மண்டலம், பூமியின் உட்பகுதி, புறப்பகுதி, கடலின் உட்பகுதி என உலகின் எப்பகுதியிலும் இயற்கை சுழற்சிகளை நீர் தொடர்ந்து இயக்கி, பூமியையே இயக்கி வருகிறது.

நீரில் வளர்ந்த உயிரினங்கள் நைட்ரஜன் வாயுவை வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன. நீரையும், நீரால் உற்பத்தியான உணவையும் உண்டு வாழும் விலங்கினங்கள், பிராண வாயுவை சுவாசித்து, கரியமில வாயுவை வளி மண்டலத்துக்கு அனுப்புகின்றன. நீரால் வளரும் தாவரங்கள், கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

ஆகவே நீரில்லாமல், நீர்ச் சுழற்சி, நைட்ரஜன், பிராணவாயு, கரியமிலவாயு ஆகிய வாயுக்கள் வளிமண்டலத்தை அடைய வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

மேலும், வளிமண்டலத்தை நீராவியும், இந்த வாயுக்களும் சேர்ந்தே இயக்கி வருகின்றன. மழை நீர் பூமியின் மேற்பரப்பில் பயணித்து ஆறுகள், கடல், பிற நீர் நிலைகள், கழிமுகங்கள் (டெல்டா), இயற்கை சூழியல்கள், மண், தாவரங்கள், காடுகள், உயிரினங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.

இவ்வாறு நீர், பூமியின் மேற்பரப்பு நிகழ்வுகளை தொடர்ந்து இயக்குகிறது. பூமியின் உட்பகுதியில் உள்ள கண்டத்தட்டுகள், நீரின் வழவழப்பால் உராய்வின்றி நகர்ந்து, பல கண்டங்களாக பிரிந்து பல நாடுகள் தோன்ற வழிவகுத்தது.

மேலும், இந்நிகழ்வால் கண்டங்களுக்கு இடையே கடல்கள் தோன்றவும் உதவியது. அதுமட்டுமல்ல, பூமியின் உட்பகுதியில் ஊர்ந்து சென்ற மழை நீர், நிலநீராக மாறியது.

ஆற்றுநீர் சுமந்து வந்த மண், ஆற்றின் வழித்தடத்தில் படிந்து நிலநீரின் உறைவிடமான நீர்க்கோர்ப்பு பாறையாகி, மழை பெய்யாத சமயங்களில் மக்களின் தாகத்தை இந்த நீர்க் கோர்ப்பு பாறைகள் தீர்த்துவைக்கின்றன.

இவ்வாறு, பூமியின் அடியில் நீர்க்கோர்ப்பு பாறைகளை அமைத்து, அவற்றின் மடியில் தன்னை மறைத்து வைப்பதும் நீர்.

நிலப்பரப்பில் உள்ள நீர், நீர்ச் சுழற்சியாக வளிமண்டலத்தை அடைந்து உலகெங்கும் மழையாக பொழிந்து மக்களையும், உலக உயிரினங்களையும் காப்பாற்றுவது போல, கடலில் நிகழும் கடல்நீர்ச் சுழற்சி, உலக வெப்பத்தைச் சீர்படுத்துவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கு வேண்டிய நுண்சத்துள்ள உணவை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை காப்பாற்றுகிறது.

நீரைப் போன்றே, எரிசக்தியும் உலகில் தொழில் புரட்சி தொடங்கிய பிறகு மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுள் ஒன்றாக பயன்பட்டு வருகிறது. இந்த 21-ம் நூற்றாண்டில் எந்த நிகழ்வும் எரிசக்தி இல்லாது இயங்க வாய்ப்பு இல்லை.

எனவே, எதிர்காலத்தில் எரிசக்தியின் பயன் இன்னும் விரிந்து பரவும். நீரில் வளர்ந்த தாவரங்கள் மண்ணில் புதைந்து, நீரும் சேர்ந்து அவற்றை மக்க வைத்து, பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு அவை நிலக்கரியாகவும், நிலஎண்ணெய் மற்றும் நில ஆவியாகவும் உருமாறி புதை படிம எரிசக்திகளாகின்றன.

கடல்நீர் ஆவியாகி அலோக கனிமமான உப்பு ஆகிறது. உலகின் பல்வேறு கனிமங்கள், மேலும் விலை உயர்ந்த வைரம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்றவை நன்னீராலும், உப்பு நீராலும், அமில நீராலும் உற்பத்தியாகின்றன. அலோக உலோக கனிமங்கள், பல்வேறு உபயோகத்துக்கு பயன்படுகின்றன.

இவ்வாறு உலகின் கனிம தேவையை நிறைவேற்றுவதும் நீர்தான். பல்வேறு வகையான கனிமங்கள் மக்களின் எதிர்கால தேவைகளுக்கு போதுமான அளவுக்கு கடலின் தரைப்பரப்பில் தயாராக இருக்கின்றன.

கடல் எரிமலையில் உற்பத்தியாகும் அமில வென்னீரில் உள்ள கனிம கரைசல்கள், பல்வேறு வகையான உலோக கனிமங்களை கடலில் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன. ஆகவே, மக்கள் கனிமங்களை தொடர்ந்து பயன்படுத்த, கடல் அமில கனிம நீர்க் கரைசல், கடலிலும் கனிமங்களை தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

உலகின் தரைபரப்பு மற்றும் கடல் தரைபரப்பில் உள்ள கனிமங்கள் பயன்பட்ட பிறகு, கடல் நீரில் கரைந்திருக்கும் 47 வகை கனிம தனிமங்களை மக்கள் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

உலக நீர்வளத்தில் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர். நன்னீர் வளம் குறைந்து வரும் நாடுகளில் கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் தற்பொழுது வளர்ந்துள்ளது. கடல்நீரை ஆவியாக்கி, நன்னீராக நீர்ச் சுழற்சி வழியில் மழையாகும் அறிவியல் தொழில் நுட்பத்தை, இயற்கை நமக்கு வழங்கி இருக்கிறது.

எனவே நன்னீர் வற்றிய, மேலும் வற்றும் நிலையில் உள்ள கடலோர நாடுகளின் மக்கள் எதிர்கால நன்னீர் தேவையை எட்ட, உவர் நீராக இருக்கும் கடல்நீர், தயாராக இருக்கிறது. இந்த நன்னீரை பிற பகுதிகளிலுள்ள வறட்சி நாடுகளிலும் பயன்படுத்தலாம். கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்த தேவைப்படுவது பொருளாதாரம் மட்டுமே.

No comments:

Popular Posts