Sunday 16 February 2020

வேகம் பெறட்டும் தென் மாவட்ட ரெயில்கள்!

வேகம் பெறட்டும் தென் மாவட்ட ரெயில்கள்! பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரிதுறை அலுவலர். ரெயில் பயணம் தொடர்பாக, ஒரே நாளில் இரண்டு செய்திகள் வந்துள்ளன. இரண்டுக்கும் இடையே எத்தனை முரண்பாடு...? ஏன் இந்த பாகுபாடு..? சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே, 300 கி.மீ. வேகத்தில் ரெயில்! இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிற பணி ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது ‘தேசிய உயர் வேக ரெயில் நிறுவனம்’. இந்த ரெயில் செயல்பாட்டுக்கு வந்தால், இரண்டு மணி நேரத்தில், சென்னையில் இருந்து 435 கி.மீ. கடந்து மைசூருக்கு சென்று விடலாம்! ஆய்வுகள் நல்லபடியாக நடந்து முடிந்து விரைவில், அதிவேக ரெயில் பயணம் கிட்டினால் மகிழ்ச்சிதான். அதே சமயம், தென்னக ரெயில்வே வெளியிட்டு இருக்கும் பிறிதொரு அறிவிப்பு, நம்மை பெரிதும் வருத்தப்பட வைக்கிறது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 27 வரை இடைப்பட்ட காலத்தில் 7 நாட்களுக்கு வார இறுதி நெரிசலை சமாளிப்பதற்காக சிறப்பு ரெயில்கள் விடப்படும்.

சென்னை-திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருநெல்வேலி சென்று அடையும். கூடுதலாக தாமதம் ஏதும் இல்லை என்றால், சென்னை-நெல்லை இடையே உள்ள சுமார் 620 கி.மீ. தூரம் செல்ல 12 மணி நேரத்துக்கு மேல் ஆகும். சராசரி வேகம் சுமார் 52 கி.மீ. இத்துடன், ‘சிறப்பு ரெயில்’ என்பதால், ‘சிறப்பு கட்டணம்’ வேறு. என்னதான் நடக்கிறது நம் நாட்டில்..?

அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா, உலகின் முன்னணி நாடாக உயர்ந்து நிற்கிறது.ஆனால், இன்னமும் 50 கி.மீ. வேகத்தில்தான் செல்கிறது ‘விரைவு ரெயில்’. நன்றாகவா இருக்கிறது..?சற்று ‘சிரமப்பட்டு’, 10 கி.மீ. வேகம் கூட்டினால், இரண்டு மணி நேரப் பயணம் குறையுமே..! ஒரு ரெயிலில் 2,ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள் என்றால், 4,ஆயிரம் மனித நேரம் மிச்சம் ஆகுமே...! இது எத்தனை விலை மதிப்பற்றது..? இதை ஏன் ரெயில்வே நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறது...? சராசரி வேகத்தில் 10 கி.மீ. அளவுக்குக்கூட அதிகரிக்க முடியாத நிலையிலா, நமது தொழில்நுட்ப வசதிகள் மோசமாக உள்ளன..? ஆயிரம்தான் ‘டெக்னிக்கல்’ காரணங்கள் இருக்கட்டும்; சரி செய்ய இயலாதா என்ன...?மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம். ரெயில் பயணத்தில் இரண்டு மணி நேரம் குறைந்தால், என்னவாகும்..? 6 மணிக்கு கிளம்புகிற ரெயில், 8 மணிக்கு புறப்படலாம்; இது, பயணிகளுக்கு மிகுந்த ‘நிவாரணம்’ தருவதாக இருக்கும். குறிப்பாக, உடல் நலிவுற்றோர் இதனால் பெறும் பயன்கள் ஏராளம். ஏன் முயற்சிக்கக்கூடாது..?

வயதில் மூத்தவர்கள் பலரை கேட்டுப்பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே ‘இப்படித்தான்’ ‘பன்னெண்டு மணி நேரம் ஆயிரும்.. அதுக்கு மேல தாமதம் ஆவாம இருந்தா சரி..’ ஆனா... ‘பஸ் பிரயாணம்’ முன்ன போல இல்லை.

சீக்கிரம் போயிர முடியுது... நாளுக்கு நாள் சாலை போக்குவரத்து கூடிக்கொண்டே போகிறது. விடுமுறை நாட்களில் தாம்பரம்-வண்டலூர் இடையே சுமார் 5 கி.மீ. தூரத்தை கடப்பதற்கே இரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது.

இத்தனை நெரிசலான போக்குவரத்துக்கு இடையிலும், நீண்ட தூரப் பேருந்துகள், மேலும் மேலும் பயண நேரத்தை குறைத்துக்கொண்டே வருகின்றன இந்தியா போன்ற நாட்டில், ஆபத்தில்லாப் பயணம் வேண்டுவோர் உண்மையில் என்ன செய்ய வேண்டும்..? சாலைப்போக்குவரத்தில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரெயில் போக்குவரத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இங்கே ஆனால், நேர்மாறாக அல்லவா இருக்கிறது...? புதிய ரெயில் தடங்கள் இல்லை; நவீனத் தொழில்நுட்பம் உடனுக்குடன் அறிமுகம் ஆவது இல்லை; பயணிகளுக்கு பல வசதிகள் முழுமையாகக் கிடைப்பதில்லை; குடிநீரில் இருந்து உணவுப்பண்டங்கள் வரை ஒவ்வொன்றிலும் குறைந்த தரமும் கூடுதல் விலையும் ரெயில் பயணத்தின் அடையாளங்கள் ஆகி விட்டன.

(‘காலம் காலமாக’ நீண்ட தூர இரவு ரெயில்களில், காலை நேரத்தில், கழிவறைகளில் தண்ணீர் வரத்து இருப்பதே இல்லை; இந்தியாவின், தீர்க்கப்பட முடியாத பிரச்சினைப் பட்டியலில் இது நிரந்தர இடம் பிடித்து விட்டது.)

யாரேனும் யோசித்துப் பார்த்தார்களா..? மாலை 6.50-க்கு புறப்படுகிற ரெயிலில் பயணிக்கிற மக்கள், தமது இரவு உணவை ரெயிலில்தானே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது..? இது அவர்கள் மீது சுமத்தப்படும் மறைமுக கட்டணமா இல்லையா...? சற்றே வேகத்தைக் கூட்டி, புறப்படும் நேரத்தைச் சற்றே மாற்றி அமைத்தால், எத்தனை பேருக்கு எத்தனை பயனுள்ளதாக இருக்கும்..? பணியாளர்கள், தொழிலாளர்கள், முதியோர், உடல் நலிவுற்றோர் என்று அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே...!

எப்போதுமே, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தீவிரமாக குரல் கொடுத்தால், தென் மாவட்ட ரெயில் பயணத்தில் நாம் கோரும் மாற்றங்கள் நேரிடலாம். ‘காரணங்கள்’, ‘விளக்கங்கள்’, ‘பதிலுரைகள்’... இவை எல்லாம் வேண்டிய மட்டும் பெற்று விட்டோம்.

நமக்கு வேண்டிய நடவடிக்கைத்தான் வந்த பாடில்லை. சாத்தியம் அற்ற எதையும் நாம் கேட்டு விடவில்லை. 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தால், நீண்ட தூர ரெயில் வேகத்தை குறைந்தது 10 கி.மீ. அதிகரிக்க முடியாதா...? தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகத்தைச் சற்றேனும் கூட்டுங்கள்; பல மணி நேரப் பயணத்தை சற்றேனும் குறையுங்கள். நமது ‘முன்னேற்றம்’, ‘சாதனை’ சாமானியர்களை எட்ட வேண்டும்; அவர்களுக்குப் பயன் தரவேண்டும். இதுவன்றி ‘வளர்ச்சி’க்கு அளவுகோல் ஏது..?

No comments:

Popular Posts