Sunday 16 February 2020

இந்திய சினிமாவின் தந்தை “பால்கே”

இந்திய சினிமாவின் தந்தை “பால்கே” சபீதாஜோசப், எழுத்தாளர், இன்று (பிப்ரவரி 16-ந்தேதி) தாதா சாகேப் பால்கே நினைவுநாள். இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோரை கவுரவிக்கும் விதமாக “தாதா சாகேப் பால்கே விருது” வழங்குகிறது, 1969- ம் ஆண்டு முதல் இந்த விருது உருவாக்கப்பட்டது. சிவாஜிகணேசன், திலிப்குமார், அமிதாப் பச்சன், கே.பாலசந்தர் என்று இது வரை 50 திரைப்பட சிறந்த ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

1913-ம் ஆண்டு மே 3-ந்தேதி மும்பை நகரில் காரனேஷன் அரங்கத்தில் இந்தியரின் முதல் திரைப்படம் “ராஜா ஹரீஷ் சந்திரா” திரையிடப்பட்டது. இதனைத் தயாரித்து இயக்கியவர். அடுத்த தலைமுறைக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய “இந்திய சினிமாவின் தந்தை” என்று போற்றப்படும் தாதா சாகேப் பால்கே! அவர் தயாரித்து வெளியிட்ட அந்த படம் ராஜா ஹரீஷ் சந்திரா ஒரு ஊமைப்படம். இந்த படத்தில் அன்றைக்கு நடிக்க ஆள் கிடைக்காததால் ஒரு சமையல்காரர் கதாநாயகியாக நடித்தார், மற்றும் பால்கேயின் மனைவி, மகள் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் .

1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நாசிக் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பால்கே பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் ஆரம்ப படிப்பை முடித்தார். பின்னர் பம்பாய் ஜே ஜே கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் நடைபெற்ற நாடகங்களில் கலந்து கொண்டார். அவருக்குள் இருந்த கலை ஆர்வம் மேலும் வளர்ந்தது. பின்னர் பரோடா கலாபவனில் தமது படிப்பை மேற்கொண்டார். கல்லூரி படிப்பை முடித்து வெளியே வந்த பின் பால்கே திரைப்படம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார். அதாவது ஒரு புகைப்பட கலைஞராகவும், நாடக அரங்கிற்கான திரைச்சேலை ஓவியராகவும், இந்திய தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் வரைபடத் தயாரிப்பாளராகவும், அச்சகத்திற்கு தேவையான ப்ளாக் உருவாக்கிக் கொடுப்பவராகவும். அச்சு பணியாளராகவும் இப்படிப் பன்முக ஆளுமை கொண்டவராக தாதா சாகேப் பால்கே இருந்தார்.

இப்படி நாடகம், கூத்து, என்று கலைதுறையைச் சுற்றியே அவரது வாழ்வின், ஒவ்வொரு நிகழ்வும் இருந்தது. அவருடைய நாற்பதாம் வயதில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது, அவர் பார்த்த “கிறிஸ்துவின் வாழ்க்கை” என்ற ஒரு ஆங்கிலப் படம் அவருக்குள் சினிமாவுக்கான விதையை, ஆர்வத்தை ஏற்படுத்தியது. சினிமாவின் நுட்பங்களை அறிந்து கொள்ள, பலதடவைசென்று படம் பார்த்தார், திரைமொழியில் கதையை எப்படி நகர்த்துவது உள்ளிட்ட பல தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொண்டார்.

இந்த கோணத்தில் நம்முடைய இந்திய புராண, இதிகாச கேரக்டர்களை வைத்து படமெடுக்கலாமே என்று முடிவுக்கு வந்தார். அதற்கு பணம் முக்கியம் அல்லவா, தமது சொத்துகளை எல்லாம் விற்று ஒரு ரீல் படத்தைத் தயாரித்தார். அதை மக்கள் பிரமிப்புடன் ரசித்தனர். அது கொடுத்த உற்சாகமான வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்த பால்கே சினிமாவுக்கான கருவிகளை வாங்க இங்கிலாந்து சென்றுவந்தார்.

அதன் பின் தன்னுடைய மனைவி, மகன், மகளை நடிக்க வைத்து ஒரு திரைப்படத் துணுக்கு (அன்றைய குறும்படம்) எடுத்து, அதனை சில தயாரிப்பாளர்களுக்கு போட்டு காண்பித்தார். இதற்காக தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியிருந்தார்.

அந்த காலத்தில் நடிப்பை தொழிலாக கொண்ட நடிகர்கள் அதிலும் குறிப்பாக நடிகைகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. நடிக்க ஆட்களைத் தேடி அலைந்தார் பால்கே., விளம்பரமும் கொடுத்தார். எங்கு தேடியும் ஹீரோயின் கிடைக்காததால் ஒரு சமையல்காரனை பிடித்து அவனுக்கு கதாநாயகியாக வேடம் போட்டு நடிக்க வைத்தார். அந்த படத்தின் கதை, வசனம், நடிப்பு சொல்லி தருதல் காட்சியை படமாக்குவது வரை எல்லாவேலைகளும் அவரே செய்தார். அன்றைக்கு சினிமாவை ஒரு தொழிலாக மேற்கொள்ள பலரும் தயங்கிய கால கட்டம். அதுமட்டுமல்ல அன்றைக்கு தொழில்முறை படப்பிடிப்பு நிலையங்கள் இல்லாதிருந்த காலம். எனவே தன்னுடைய வீட்டையே படப்பிடிப்பு தளமாக மாற்றி, அங்கேயே ராஜா ஹரீஷ் சந்திர என்ற முதல் முழு நீள சினிமா தயாரித்தார்.

டாகுமென்டரி படங்களையும், காமெடி குறும்படங்களும் தயாரித்தார். ஆனாலும் முதலீடு செய்ய ஆட்கள் கிடைப்பதும், பணம் கடன் கிடைப்பதும் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதற்காக முதலாளிகளை தேடி அலைந்தார். ஒருவர் கிடைக்க “ராஜா ஹரீஷ் சந்திரா” வை புதுப்பித்தும், “லங்காதகனம்” என்ற படத்தையும் உருவாக்கினார். அவரது அந்த இரண்டு படங்களும் பெரும் வரவேற்பு பெற்றதோடு வசூலை அள்ளி கொட்டியது. (ரூ.30 ஆயிரம் வசூலானது)

அதன்பின் ஹிந்துஸ்தான் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீகிருஷ்ண ஜனனம் “காளிங்க நர்த்தனம்” படங்களை வெளியிட்டார். அதில் கிடைத்த லாபத்தில் தமது ஊரில் ஒரு படப்பிடிப்பு நிலையம் திறந்தார். இப்படி சினிமாவுக்காகவே தன் வாழ்நாளை செலவிட்ட இந்திய சினிமாவின் தந்தை கடைசி காலத்தில் நோயும், வறுமையும் கொண்டு தனது இறுதி காலத்தை கஷ்டமுடனே கழித்தார். இன்றுஅவரது பெயரில் விருது வழங்கப் படுகிறது. ஆனால் அன்றைக்கு அவரது புது முயற்சியை, சினிமா சாதனையை அங்கீகரித்து பாராட்டு, பரிசுகள் வழங்கியதாக தெரியவில்லை. 1944 பிப்ரவரி 16-ந் தேதி பால்கே காலமானார்.

No comments:

Popular Posts