Wednesday 8 January 2020

அமெரிக்கா-ஈரான் மோதல்: இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா?

இந்திய பொருளாதாரம் ஒருமோசமான தேக்கநிலையை சந்தித்திருக்கும் இவ்வேளையில் மத்திய கிழக்குப்பகுதியில் புதிய நகர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் வெளிப்புற காரணியாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும். ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது மத்திய கிழக்கு பகுதியை கத்தி முனைக்கு கொண்டுவந்ததுடன், எண்ணெய் சார்ந்த இந்தியாவின் பொருளாதாரத்தை ஆட்டிவைக்கும் மேகமாக சூழ்ந்துள்ளது.

2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்ததிலிருந்து 2018-ம் ஆண்டில் ஈரான் எண்ணெய் வர்த்தகம் மற்றும் வங்கிகள் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அமெரிக்கா தரப்பில் விலக்கு அளிக்கப்பட்டது. 2018 நவம்பர் முதல் 2019 மே வரையில் இந்நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. காலக்கெடு முடிந்த பின்னர் இந்தியா வேறு வழியின்றி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. மீண்டும் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கியமான நாடுகளில் ஈரானும் ஒன்று. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் போக்கில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து ஒரு பீப்பாய் 69 டாலரை எட்டியது. நேற்று முன்தினம்(ஜனவரி 6) மேலும் அதிகரித்து 70 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழும் அச்சத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரிக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்கா விலக்குகளை நிறுத்தியதன் மூலம், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு முடியவில்லை. 2019 மே மாதம் வரையில் இந்தியாவிற்கு ஈராக், சவுதி அரேபியாவிற்கு அடுத்தப்படியாக எண்ணெய் வழங்கிய நாடுகளில் ஈரான் இடம்பெற்று இருந்தது. கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலும், இயற்கை எரிவாயு தேவைகளில் 40 சதவீதமும் இறக்குமதி செய்கிறது. இதனால் இறக்குமதி சார்ந்த நாடாகவே உள்ளது.

2018-19-ம் ஆண்டில் இந்தியா 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயையும், 2019-ம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 4.5 மில்லியன் பீப்பாய்களையும் இறக்குமதி செய்தது. மேலும், நுகர்வு அடிப்படையில் இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 83.5 சதவீதத்திலிருந்து 84.5 சதவீதமாக அதிகரித்தது. 2018-19 நிதியாண்டில் இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக 111.9 பில்லியன் டாலர்(சுமார் ரூ.8 லட்சம் கோடி) செலவழித்துள்ளது. கடந்த மார்ச் 31 (2018-19) உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈரானிடமிருந்து சுமார் 24 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.

இந்தியாவிற்கு ஈரான், கச்சா எண்ணெய் விலையில் மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது 24 டாலர் வரை குறைத்து சப்ளை செய்துவருவது மட்டுமல்லாமல், போக்குவரத்து செலவிலும், காப்பீடு உள்ளிட்ட சில சலுகைகளை கொடுத்தது. ஆனால், பிறநாடுகளில் இதுபோன்ற சலுகை கிடைப்பது இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் சுமையை தடுக்கும் நடவடிக்கையாக எரிபொருள் விலை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கான எரிபொருள் விலையை எவ்வாறு பாதிக்கும்? என்றால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4-ந் தேதியிலிருந்து உயர்ந்து வருவதிலேயே கணித்துக்கொள்ளலாம். அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தொடரும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கவும், நடப்புக்கணக்கு பற்றாக்குறை இடைவெளி அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரியவும் வாய்ப்பிருக்கிறது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறதோ, அத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் (வாகனம், பெயின்ட் உள்ளிட்ட துறைகள்) பங்குகளும் ஒரு சங்கிலி தொடர்போன்று பங்குச்சந்தைகளில் சரிவை சந்திக்கிறது.

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு செய்யும் தொகை அதிகரிக்கும், நடப்புக்கணக்கு பற்றாக்குறையில் நெருக்கடி ஏற்படும். பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து வெளியேறுவதற்கும், வட்டி விகிதங்களை மேலும் குறைப்பதை கருத்தில் கொள்வதற்கும், வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் ரிசர்வ் வங்கியின் எந்தவொரு வாய்ப்பையும் இது மங்க செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்றால் என்ன? ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடுதான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையாகும். எளிதாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கையில், 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்தால் நடப்பு கணக்கின் வேறுபாடு பூஜ்ஜியமாக இருக்கும். இதில் பற்றாக்குறையும் கிடையாது, உபரியும் கிடையாது சரிசமமாக உள்ளது. இதுவே ஏற்றுமதி 100 ரூபாய்க்கு இருக்கும் பட்சத்தில் இறக்குமதி 110 ரூபாய்க்கு சென்றால் ரூ. 10 பற்றாக்குறையாகும். இதுதான் நடப்பு கணக்கு பற்றாக்குறையென்று அழைக்கப்படுகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்தால் நாட்டின் பணமதிப்பு பாதிப்படையும். அதாவது, ரூபாயின் மதிப்பு குறைகிறது. இதற்கு அன்னிய செலாவணி மூலமாக பணம் வெளியேறுவது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை குறைய வேண்டுமானால் தங்கத்தின் இறக்குமதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைய வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே ஈரான்- அமெரிக்கா மோதலுக்கு அடுத்து அதிகரித்து வருகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை ஏற்படும்போது கடன் சுமை மேலும் அதிகரிக்கிறது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு சதவீதமாக கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 1,420 கோடி டாலராக (2 சதவீதம்) இருந்தது. இதுவே ஜூலை, செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 630 கோடி டாலராக (0.9 சதவீதம்) குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018-19 நிதியாண்டின் ஜூலை, செப்டம்பர் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1,900 கோடி டாலராக (2.9 சதவீதம்) காணப்பட்டது. எனவே, இரண்டாவது காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை கணிசமாக குறைந்ததையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், நிதி பற்றாக்குறையை குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வல்லுனர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஈரானுடனான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் என இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பங்கு சந்தையும் சரிவை சந்தித்து வருகிறது. பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திக்கிறது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதமிட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் நகர்வின் மீது அனைத்து நாடுகளும் பார்வையை கூர்ந்துள்ளன. குறிப்பாக, சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஏற்கனவே பாதிப்புகளை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என்றே பார்க்கப்படுகிறது.

No comments:

Popular Posts