Friday 17 January 2020

திருவள்ளுவர் ஓவியத்துக்கு வழிகாட்டிய பாரதிதாசன்

திருவள்ளுவர் ஓவியத்துக்கு வழிகாட்டிய பாரதி தாசன் | கவிஞர் பொன்னடியார் | ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினம். | உலகப் பொதுமறை என்று உலகம் ஏற்றுக்கொண்டாடும் திருக்குறள் நாயகன் திருவள்ளுவரை அவரின் நிகரில்லாப் பெருமைகளை நினைவு கூரும் நாள், இந்நாள். உயர்ந்த நீதி கடைப்பிடித்திருக்கும் சிறந்த மக்கள் வாழும் நாட்டில்தான் திருக்குறள் போன்ற ஒழுக்கநூல்கள் தோன்ற முடியும். அழுக்கில்லாத தூய நீருற்றுப்போல் திருக்குறள் தோற்றம் அளிக்கிறது.

இத்தகைய புகழாரங்களை நிறைய பதிவுசெய்துள்ளார் திருக்குறளின் முப்பாலையும் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகின் முன் வைத்த இங்கிலாந்து அறிஞர் போதகர், டாக்டர் ஜி.யு.போப்.

எண்ணற்ற தமிழ் நூல்களை, இலக்கண நூல்களைத்தமிழருக்குத் தந்த அந்தப் பெருந்தகை, தான் மொழி பெயர்த்த “திருக்குறளையும், திருவாசகத்தையும் மறைவுக்குப் பின் என்னுடன் வைத்து அடக்கம் செய்யுங்கள். இங்கே ஒருதமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுதிவையுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துச்சென்றார் அவர். அதனால்தான், உலகப் பெருங்கவி நம் மகாகவி பாரதியாரும்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி

யாரம் படைத்த தமிழ்நாடு”

என்று பாடிக் கொண்டாட்டம் போடுவார்.

அப்பெருங்கவியின் கவிதைவழித் தோன்றலான

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

“அறமிதொன்றும்யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே

ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? நீ”

என்று ஏக்கக் குரலோடு வேண்டுகோள் விடுப்பார். திருவள்ளுவர் பெருமானின் திருக்குறளைக் கண்டுகண்டு களித்தாடி, உலக மக்களுக்கு நல்வழிகாட்டும் பொதுமறை என்று போற்றிப்பாடி, முதன்முதல் லத்தீன் மொழியில் இருபால்களை (அறம், பொருள் ) மொழிபெயர்த்தவர் இத்தாலிய கிறிஸ்தவக் கத்தோலிக்க மத போதகர், ஜோசப் பொஸ்கி என்ற வீரமாமுனிவரே. இன்று உலகமெல்லாம் திருக்குறளைப் புகழ்ந்து பாடிக்கொண்டாடுவதற்கும், முப்பது மொழிகளில் மொழி பெயர்த்திருப்பதற்கும் அவரே முழுமுதற்காரணம். தென்ஆப்பிரிக்காவில் பணியில் இருந்த போது அண்ணல் காந்தி அடிகள் தமிழ் மொழியின் மீதுதீராக் காதல் கொண்டு கற்க விரும்புகிறார். முறையாகக் கற்பிக்க அவருக்கு ஆசான் கிடைக்கவில்லை. அவராகத் தமிழைப் பயின்றிருந்த வேளையில், ரஷியப் பேரெழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய இனிநாம் செய்ய வேண்டியது என்ன? என்ற ‘அகிம்சா கொள்கை’ பற்றிய நூலைப் படித்து அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுகிறார் மகாத்மா. அதற்குப் பதில் கடிதம் எழுதுகிறார் டால்ஸ்டாய், “மிஸ்டர் காந்தி அந்த அகிம்சை தத்துவக்கொள்கை என்னுடையது அல்ல. அது, உங்கள் நாட்டின் தென்கோடியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘திருக்குறள்’ என்ற நூல் படைத்தளித்த திருவள்ளுவர் பெருமானின் கொள்கை என்று பதில் எழுதுகிறார்.விழிதிறந்து வியந்து போனார் காந்தி!

உலகம் போற்றிக்கொண்டாடும் இத்தகைய பெருமைமிகு திருவள்ளுவரின் திருவுருவம் தமிழருக்கு கிடைக்கவில்லையே என்று புரட்சிக்கவிஞர் நாளும் ஏங்கினார். திருக்குறளின் வழி அறக்கொள்கை வகுத்த அவரின் தோற்றம் எப்படி இருக்கும், இருந்திருக்கும் என்று எண்ணி உலகம் போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் படம் காண அவர் கற்பனையில் திளைத்திருந்தார். அந்தக் கற்பனை வடிவத்தைச் சரியாகப் படம் பிடித்துத் தந்தவர் அவரின் உண்மைத்தொண்டரான ஓவியர் வேணுகோபால் சர்மா.

பாவேந்தர் 1939-40 ஆண்டுகளில் ‘கவிகாளமேகம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு நட்புக்குரியவரானவர் இவர்.இதுபற்றி ஓவியர் வேணுகோபால் சர்மா என்ன கூறினார் என்பதை எழுத்தில் பதிவு செய்துள்ளார்.

“‘பாவேந்தருக்கு ஓவியக்கலையில் நல்ல ஈடுபாடு உண்டு. ஓவியத்தைப்பற்றி அவர் கூறும் அபிப்பிராயம் சிறப்பாக இருக்கும். ஜனாதிபதி பரிசு பெற்ற திருவள்ளுவர் திருவுருவத்தை எழுதும்படி என்னை அடிக்கடி தூண்டி ஊக்கமளித்தவர் பாவேந்தரே. நான் திருவள்ளுவர் படத்தை தீட்டியபோது பாவேந்தர் அருகிலிருந்து கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தன் அபிப்பிராயத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார். படம் ஒன்று முற்றுப்பெற்ற நிலையில் இருந்தது. அப்படத்தை பலரும் நடமாடும் இடத்தில் வைக்குமாறு எனக்குக் கூறினார். அதைப்பார்த்த எல்லோரும் , “என்ன திருவள்ளுவர் படம்போல் இருக்கிறதே?” என்று கேட்டனர். பாவேந்தருக்கு பரமதிருப்தி, “சர்மா, படத்தை முடித்துவிடு” என்றார். நானும் முடித்தேன். அப்படம் அச்சேறுவதற்கும் பாவேந்தரே துணை நின்றார். அப்படம் தமிழகத்தில் பெருத்த விளம்பரம் பெற்ற போது எனக்குப் புகழையும், ஜனாதிபதி பரிசையும், செல்வத்தையும் வாரிவழங்கியது ஏன்? அப்படம்தான் இப்போதும் எனக்குச் சோறு போடுகிறது” என்று மனம்திறந்து உண்மைகளை உலகிற்குத் தெரிவித்தார்.

ஓவியர் வரைந்து காட்டிய சிறிய படத்தை சென்னை அண்ணாப்பிள்ளை தெருவில் பாவேந்தர் தங்கியிருந்த வசந்த விகார் ஓட்டலுக்கு வந்த குடியாத்தம் ராம.தமிழ்ச்செல்வனிடம் காட்டுகிறார் பாவேந்தர். திருவள்ளுவரின் உண்மைத்திரு உருவம் காணத் துடித்திருந்த அவரோ, “அய்யா இது திருவள்ளுவர் படம் போல் காட்சியளிக்கிறதே“ என்று கூறுகிறார். “ஆம். இப்படத்தை வரைந்த ஓவியர் சர்மா பக்கத்து அறையில்தான் இருக்கிறார். அழைத்துவரச் சொல்கிறேன். இப்படம் பெரிதாக சரியாக உருவாக அவருக்கு நீதான் பொருளுதவி செய்ய வேண்டும்” என்று கூறிய பாவேந்தர், வேணுகோபால் சர்மாவை அழைத்து தமிழ்ச்செல்வனுக்கு அறிமுகப்படுத்துகிறார். மூவரும் பேசி ஒரு முடிவெடுக்கின்றனர். ராம தமிழ்ச்செல்வன் பாவேந்தர் கட்டளையை ஏற்று பொருளுதவி செய்ய ஒப்புக்கொள்கிறார்.

பாவேந்தர் வழிகாட்டுதலின் படி 31.1.1959-ந் தேதி ஓவியர் வேணுகோபால் சர்மா, ராமதமிழ்ச்செல்வன் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர். அந்த ஒப்பந்தத்தில் பாவேந்தர்சாட்சிக் கையெழுத்திடுகிறார்.ஒப்பந்தப்படி வேலைகள் நடைபெறுகின்றன.

பாவேந்தர் எண்ணத்தின் படியே திருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக்கி, உள்ளத்தைக் கவர்கிறார் சர்மா. இந்த ஓவியத்தை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு காட்டவேண்டும் என்று பாவேந்தர் விரும்புகிறார். அதற்காக, புதுவைப் பெரும்புலவர் ஒருவருக்கு எடுக்கும் விழாவிற்கு பெருந்தலைவரை சென்னை இல்லத்திற்குச் சென்று அழைக்கிறார். அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறார். 5.2.1959 அன்று நடைபெற்ற அப்பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருந்தலைவரை, தன் இல்லத்தில் மதிய உணவு விருந்தளித்து, அங்கே காமராஜரிடம் சட்டமிட்டு அழகாக காட்சிக்கு வைத்திருந்த திருவள்ளுவர் படத்தைக் காட்டுகிறார் பாவேந்தர். கண்டு மகிழ்ந்த பெருந்தலைவர், “கவிஞர் இதுதான் திருவள்ளுவர் படம் என்றால் யார் மறுப்புக் கூற முடியும்?” என்று மகிழ்ந்து பாராட்டுகிறார்.

18.4.1959 அன்று கரந்தையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் நடைபெற்ற புலவர் குழு கூட்டத்தில் இப்படத்தைக் காட்சிக்கு வைத்த பாவேந்தர், உரையாற்றி புலவர்களின் ஒப்புதல் பெறுகிறார். அந்தப் புலவர் குழுக் கூட்ட நிகழ்ச்சி அன்றுதான், பாவேந்தரை யானை மீது அம்பாரியில் உட்காரவைத்து, தஞ்சை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்து, முத்தமிழ்க்காவலரும், புலவர்களும் சிறப்பித்தனர் என்பது வரலாற்றுப் பெருமைக்குரிய செய்தி.

அப்புலவர் குழுக் கூட்டத்தில், பேராசிரியர் இரா. பி.சேதுப்பிள்ளை, பன்மொழிப்புலவர் அப்பா துரையார் போன்ற வர்கள் கலந்துகொண்டனர். பாவேந்தரால் அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் திருவுருவப்படத்தை ஏற்று உளம் மகிழ்ந்து ஒப்புதல் அளித்தனர். அதன்பின், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், டாக்டர் மு.வ. சிலம்புச்செல்வர், கவியரசர் கண்ணதாசன் எனப் பலதரப்பினரும் திருவள்ளுவர் திரு உருவத்தைக்கண்டு மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் திருவள்ளுவர் திருவுருவப்பட வெளியீட்டு விழா பல்லாயிரக்கணக்கானவர் மத்தியில், அப்போதைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அப்போது மத்திய தபால்துறை மந்திரியாக இருந்த டாக்டர் சுப்பராயன் திருவள்ளுவர் உருவப்படத்தைக் கண்டு மகிழ்ந்து, தபால்தலையாக வெளியிட்டு வரலாறு படைத்தார். இப்படித் தொடங்கியது திருவள்ளுவர் திரு உருவப்பட வரலாறு. பாவேந்தர் எண்ணத்தில், இயக்கத்தில், ஊக்கத்தில் பிறந்த திருவள்ளுவர் திருவுருவம் ஓவியர் வேணுகோபால் சர்மா கைவண்ணத்தில் குடியாத்தம், ராம தமிழ்ச்செல்வன் வள்ளல் தன்மையில் உருவாகி இன்று உலகம் கண்டு மகிழும் திருவள்ளுவர் திருவுருவ உண்மை வரலாறு இப்படிப் பதிவாகி இருக்கிறது.

No comments:

Popular Posts