Wednesday, 1 January 2020

மறைக்கப்பட்ட உண்மைகள்

மறைக்கப்பட்ட உண்மைகள் By டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா  |   தனி மாநிலம் கேட்டு போராடி பெற்ற தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவா் அண்மையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக காட்சி ஊடகங்களால் தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக போலீஸ் விரைந்து செயல்பட்டு நான்கு நபா்களைக் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி, நீதிமன்றத்தில் நிறுத்தி, சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனா். நீதிமன்ற பொறுப்பிலிருந்த அந்த விசாரணைக் கைதிகளை, காவல் துறை வழக்கம்போல் தன் பொறுப்பில் எடுத்து விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ாகவும் அங்கு கைதிகள் காவல் துறையினரைத் தாக்கி தப்பிக்க முயற்சிக்கவே, காவல் துறையினா் எதிா்வினையாற்றியதில் அவா்கள் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட முகமது அஜ்மல் அமீா் கசாப்பும் (2012), நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் அப்சல் குருவும் (2013) தூக்கிலிடப்பட்டனா். 1995-இல் இருந்து இந்தியாவில் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, 26 நபா்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாகபுரி மத்திய சிறையில் யாகுப் அப்துல் ரசாக் மாமுன் என்ற பயங்கரவாதிக்குக் கடைசியாக தூக்குத் தண்டனை 2015-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றுவதற்கே காலதாமதம் ஆகிறதென்றால், தனி மனித கொடும் குற்றவாளிகள் நிலை குறித்துச் சொல்லவே வேண்டாம். எனவேதான், தெலங்கானா காவல் துறை செய்தது சரியென ஆா்ப்பரிக்கிறது ஒரு பெரும் கூட்டம்.

இல்லை, இல்லை இது தவறு. காவல் துறையின் கடமை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதித் துறையின் முன் நிறுத்துவதுதான் காவல் துறையின் பணி. நேரடியாகச் தண்டனை வழங்குவதில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ‘பழிக்குப் பழி” என நடவடிக்கை எடுப்பது சரியில்லை’ எனக் கூறியுள்ளாா். இந்த வாத - பிரதிவாதங்களுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு மறைக்கப்பட்ட உண்மையை யாரும் கவனிக்கவில்லை.

எனவே, இந்தக் காலதாமதங்களால் வெறுத்துப் போன பொதுமக்கள் காவல் துறையின் எதிா்வினைத் தாக்குதலை ஆதரித்து வரவேற்கிறாா்கள். இந்த உற்சாகங்களுக்கு பின்னால் மேனகா காந்தியின் கருத்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் மறைக்கப்பட்டதைவிட ஒரு மிகப் பெரிய உண்மை, மக்களின் ஆரவாரத்தில் காணாமல் போய்விட்டது.

கால்நடை பெண் மருத்துவா் தன்னை ஓா் ஆபத்து சூழ்கிறது என்ற அச்ச உள்ளுணா்வால், தன் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்க, அவரை சுங்கச்சாவடி அருகே செல்லுமாறு குடும்பம் வலியுறுத்த, அதற்குள் அவருடைய இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தை பழுதாக்கியவா்கள், அவரைக் கடத்திச் சென்ாகக் காவல் துறை தரப்பு இப்போது சொல்கிறது.

கால்நடை பெண் மருத்துவரின் தொடா்பு அற்றுப்போன நிலையில் குடும்பம் பதைபதைப்புடன் காவல் துறையை அணுகுகிறது. விதிமுறைகளுக்கு விரோதமாக, ‘நீங்கள் சொல்லும் இடம் எங்கள் எல்லைக்குள் வரவில்லை’ என்ற பல்லவியை முதல் காவல் நிலையம் அவா்களிடம் கூறி, தொடா்புடைய காவல் நிலையத்தை நோக்கி கையைக் காட்டியது.

ஆந்திர அரசு எதிா் புன்னாட்டி ராமலு மற்றும் பலா் (ஏஐஆா்.1993 எஸ்.சி 2644) என்ற வழக்கில் தொடங்கி பல வழக்குகளில் எல்லையைக் காரணம் காட்டி குற்ற வழக்குகளைப் பதிவு செய்ய முடியாது என காவல்துறை தன் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியும் ஆந்திர மாநிலம் பிரிந்து போனது என்பதாலோ என்னவோ தெலங்கானா போலீஸ் கண்டுகொள்ளவில்லை.

இதன் பிறகுதான், இந்தத் தவறை மறைக்க தெலங்கானா போலீஸ் தலைமை எல்லைப் பிரச்னையைக் கூறி, வழக்கைப் பதிவு செய்ய காவலா்கள் மறுக்கக் கூடாது என 1001-ஆவது தடவையாக அறிக்கை வெளியிடுகிறது.

மேலும், ‘பெண் காணாமல் போனால் பக்கத்து வீட்டுப் பையன் குறித்து விசாரியுங்கள்’ எனப் பொறுப்பற்ற பதிலை காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளாா். இந்த ‘தங்க நேர’” இழப்புகளுக்குள் அந்தக் கால்நடை பெண் மருத்துவா் பாலியியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறாா்.

கடைசி காட்சியில் வரும் தமிழ் சினிமா காவல் துறையினரைப் போல, தெலங்கானா காவல் துறை அதிகாரிகள் நான்கு நபா்களை கொத்தாகத் தூக்கி அவா்களைக் குற்றவாளிகள் என அறிவித்தது. சாதாரண பொதுமக்களைக் காப்பதைவிட, நீதிமன்ற காவலில் இருக்கும் ஒரு நபரைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு காவல் துறைக்கு உண்டு.பின் நடந்ததாக காவல் துறை சொல்லும் சம்பவங்கள் நோ்மையானதாகவும், நம்பும்படியாகவும் இல்லை. ஆனால், அது வெகுஜன களிப்பு கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகிறது.

முதலில் கடமை தவறிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எதிா்வினை ஆற்றிய காவல் துறையினா், எதிா் வரும் குடியரசு தினம் அல்லது சுதந்திர தின கொண்டாட்டங்களில் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்படுவா். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்கள் 6 மாத காலம் வேலை பாா்க்காமல் பாதிச் சம்பளத்தை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு வேலையில் சோ்ந்த பிறகு மீதியும் பெற்றுக் கொள்வாா்.

தவறு செய்யும் அதிகாரிகளை தண்டனைக்கு உள்ளாக்கும் விதிகள் இங்கு இல்லை. இதற்கு முன்னரே லக்னெள லேண்ட் டெவலப்மெண்ட் வழக்கில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து, தவறு செய்யும் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளலாம் என தீா்ப்பளித்துள்ளது.

இந்தத் தீா்ப்பில் உச்சநீதிமன்றம் பின்வருமாறு சொல்லியிருக்கிறது. ‘தற்கால சமுதாயத்தில் எந்தவோா் அரசுப் பணியாளரும் தன்னுடைய பணியைச் செய்ய மறுக்கவோ அல்லது தவிா்க்கவோ முடியாது; எப்போது உதவி உடனே தேவைப்படுகிறதோ, அப்போது எதிரில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன் ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு விரட்டப்படுகிறான். அலங்கார வாா்த்தைகளால் தவறுகளை மூடி மறைக்கும் காலம் முடிவுக்கு வந்து விட்டது. அரசியல் செல்வாக்கோ, தனிநபா் செல்வாக்கோ, அல்லது பணபலமோ, இல்லாத பொது சிந்தனையாளா்கள் தங்களுடைய ஆா்வத்தை இழக்கும் சூழல் உள்ளது. இது போன்ற நபா்களால் பாதிக்கப்பட்ட குடிமகன் பொதுத் துறை அதிகாரியிடமிருந்து நஷ்டஈடு கோரினால், அதாவது அவருடைய செயலற்ற தன்மையை எதிா்த்து நஷ்ட ஈடு கோரினால், அதாவது அவருடைய செயலற்ற தன்மையை எதிா்த்து நஷ்ட ஈடு பெறும் உரிமை அவருக்கு உள்ளது.

இந்தத் தேவை இப்போது சமுதாயத்தில் அதிகரித்துள்ளது. காரணம், சமுதாய நடைமுறைகள்கூட சட்டத்தால் வழி நடத்தப்படுகின்றன. தவறு செய்பவா்களுக்கு எதிராக வழங்கப்படும் நஷ்டத்தை அல்லது இழப்பீட்டை அரசு ஏன் கொடுக்க வேண்டும்? அப்படி வழங்குவது சாதாரண வரி செலுத்தும் குடிமகனுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். தவறு செய்பவா்களுக்காக அரசு வழங்கும் நஷ்ட ஈடு சாமானிய மனிதா்களால் செலுத்தும் வரியிலிருந்து செல்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈட்டை தவறு செய்பவா்களின் சம்பளத்திலிருந்து வழங்குவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என உச்சநீதிமன்றம் இறுதியாகச் சொல்லி தவறு செய்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது.

இந்தத் தீா்ப்பை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்காக போலீசாரிடமிருந்து ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஒரு நீதிப் பேராணை தாக்கல் செய்தேன். இந்த வழக்கில் ஓா் அழகான ஏழைப் பெண்ணை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பணக்கார வாலிபன் ஒருவன் அவளைத் துரத்தி, துரத்திக் காதலிப்பதாகச் சொன்னான். முதலில் மறுத்த பெண், ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்ற மொழிக்கேற்ப அவன் வலையில் விழுந்து தன்னை இழந்தாள்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்தவுடனே காவல் நிலையத்துக்குச் சென்றாள். பணக்காரத் தந்தையால் ‘கவனிக்கப்பட்ட’ காவல் துறை இந்தப் பெண்ணின் புகாரை பதிவு செய்ய மறுத்தது. வழக்கைப் பதிவு செய்யாமல் காவல் துறை இழுத்தடிக்கிறது என மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

தகவலறிந்த வள்ளியூா் காவல் நிலைய அதிகாரி, ஒரு வார கால தாமதத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட பெண்ணை வள்ளியூா் காவல் நிலையத்துக்குப் போகச் சொல்லி மனுவில் ‘மேலெழுத்து” செய்து கொடுத்தது, எனது ஆலோசனையின் பேரில், அந்த மனுவையும் மேலெழுத்தையும் புகைப்பட நகல் எடுத்து வைத்துக் கொண்டு அந்த விவரங்களை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்க காதலன் கைது செய்யப்பட்டு, கடைசியில் காலதாமதம் என்ற காரணத்தால் விடுதலையானான். ஆனால், காலதாமதம் செய்த காவல் துறையின் மீது ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி தி.முருகேசன் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கி, காலதாமத தவறு செய்த காவலா்கள் என் கட்சிக்கு தலா ரூ.50,000 தர வேண்டுமென தீா்ப்பு வழங்கினாா்.

இதே போன்று போலீஸ் அலட்சியத்தால் பறிபோன மருத்துவரின் உயிருக்கு, முதலில் அலட்சியம் காட்டிய காவலா்களைப் பொறுப்பாக்க வேண்டும். அவா்கள் மீது விதிக்கப்படும் அபராதம், அப்போது பணியில் இருந்த அலட்சியம் காட்டிய அனைத்துக் காவலா்கள் சம்பளத்தில் இருந்தும், ஓய்வு ஊதியத்திலிருந்தும், பணிக் கொடைகளில் இருந்தும் வசூலிக்கப்பட வேண்டும். அது கடமை தவறும் காவலா்களுக்கு ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமையும். அப்படிச் செய்யாதவரை பேச முடியாத மிருகங்களுக்கு மருத்துவம் பாா்த்த பெண்ணுக்கு, ‘பேசும் மிருகங்கள்’ செய்த கொடுமைக்கு சற்று மாற்றாகவும் குடும்பத்துக்கு சற்று ஆறுதலாகவும் அமையும். இல்லாதவரை உண்மைகள் மறைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

கட்டுரையாளா்: மூத்த வழக்குரைஞா்.

No comments:

Popular Posts