Thursday 2 January 2020

சட்டங்கள் பெண்களின் சமூக மதிப்பை உயர்த்தியுள்ளதா?

சட்டங்கள் பெண்களின் சமூக மதிப்பை உயர்த்தியுள்ளதா? கே.சுப்ரமணியன், வக்கீல் உயர்நீதிமன்றம், சென்னை. ந ம் நாட்டில் பாலின பாகுபாடு ‘ஆணுக்கு பெண் அடிமை’ என்ற நிலையிலேயே அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் அப்போது பல தார திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வசதியான, வயதான ஆண்கள் சிறுமிகளை மணம் புரிந்தனர். 10 வயதிலும், 12 வயதிலும் சிறுமிகளை மணம் முடித்தனர். இதில் கொடுமை என்னவென்றால், கணவர் இறந்து விட்டால், அவருடன் ‘உடன் கட்டை ஏறுதல்’ என்ற சமூக வழக்கப்படி, பெண்களையும் உடன் எரித்தனர். அதனால் வயோதிகர்களுக்கு வாழ்க்கை பட்ட சிறுமிகளும் தீக்கிரையாயினர்.

இந்த சமூக வழக்கத்தை ராஜாராம் மோகன்ராய் ஒரு இயக்கமாக எதிர்க்க தொடங்கினார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. அவரது எதிர்ப்பு கொள்கை மக்களையும் போராட வைத்ததால், 1829-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதலை தடுத்ததுடன் அதை கிரிமினல் குற்றமாகவும் அறிவித்தது. பெண்கள் மனமுதிர்ச்சிக்கு பின்னரே மணம் புரியும் உரிமை கிடைத்தது.

திருமணம் முடிந்து வாழும்போது கணவர் இறந்து விட்டால், ‘கைம்பெண்’ என்ற சமூக நிந்தனையுடன் அவர்களது பிற்கால வாழ்க்கையும் கேள்வி குறியானது. அதனால் 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தில் கணவர் இறந்தவுடன் மனைவி மற்றும் மகள்களுக்கு சொத்துரிமையும், கணவரை இழந்த இளம்பெண் ஆடவர் போல் மறுமணம் செய்து கொள்ளவும் சட்டப்படி உரிமை கிடைத்தது. பெண்களுக்கு கட்டாய கல்வி முறை அமலில் இருந்தது. திருமண வயது வந்தவுடன் பெண்களுக்கு வரதட்சணை, சீர் வரிசை கொடுத்து பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது. இந்த சமூக வழக்கத்தால் பெண்களின் திருமணம் தடைபட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர, 1961-ம் ஆண்டு வரதட்சணை கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டப்படி தீர்வு பெற முடிந்தது.

கல்வியும் மனமுதிர்ச்சியும் ஏற்பட்டவுடன், பெண்களும் ஆண்களை போல் வேலைக்கு போகவிரும்பினர். அதனால் சம வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, திருமணமான பின் மகப்பேறு காலத்தில் மகப்பேறு விடுமுறையும், விடுமுறை காலத்திற்கு சம்பளமும் வழங்க மகப்பேறு நலச்சட்டம் 1961-ல் இயற்றப்பட்டது.

பெண் குழந்தைகளை கடத்துவதை தடுக்கவும், பெண்களை ஆபாசமாகவும், இழிவுபடுத்துவதை தடுக்கவும் 1986-ல் சட்டங்கள் எழுந்தன.

ஆண்களை போல் பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில், பங்குரிமை வழங்க 1989-ம் ஆண்டு வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது மத்திய சட்டமாகவும் 2005-ம் ஆண்டு திருத்தம் பெற்றது. பெண்கள் நலனுக்காக 1990-ல் ‘பெண்கள் தேசிய ஆணையம்’ மத்தியில் நிறுவப்பட்டது. கருவிலேயே பெண் குழந்தையா எனக் கண்டறிந்து சிசுக்கொலை செய்வதை குற்றமாக அறிவித்து, பிறப்பதற்கு முன் பகுப்பாய்வு செய்வதை தடை செய்து 1994-ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சொத்துரிமையாலோ அல்லது வரதட்சணையாலோ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. அதனால் குடும்பத்தில் வன்முறை ஏற்பட்டு, பெண்கள் மனநிலை சிதறி தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களை பாதுகாக்க 2005-ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் தோன்றி, பெண்கள் நிவாரணம் பெறவும், குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படவும் வழி ஏற்பட்டது.

பணியிடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரம், ஆணாதிக்கம் ஆகியவற்றால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி வருகின்றன. அதற்காகவே 2010-ம் ஆண்டு பாலியல் ரீதியான துன்புறுத்தல் தடை தீர்வு சட்டம் இயற்றப்பட்டது. சமூக ரீதியாக பெண்கள் பாலின சமத்துவம் பெற சட்டங்கள் இயற்றப்பட்டாலும், வழிவழியாக வந்த பழக்க வழக்கங்களை காட்டி குற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளன. சட்டங்கள் எல்லாம் பெண்களுக்குச் சாதகமாகவே இயற்றப்படுகின்றன என பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதற்கும் குரல் கொடுத்து வருகிறார்கள். ‘பொய் புகார்களை பெண்கள் கொடுக்கிறார்கள்’ என கொதிக்கும் கணவர்களும் உண்டு. குடும்பத்தில் பிரச்சினை என ஏற்படும்போது அதில் பாதிப்பு அதிகம் அடைவது பெண்கள் மட்டுமே!

அதிலும் குழந்தைகள் இருந்து விட்டால் இன்னும் அதிகம். அதைச் சமன் செய்யவே அவர்களுக்கு சட்டங்கள் தீர்வாகின்றன. நமது சட்டங்களில் உள்ள தண்டனை போதாது என்ற கூக்குரல் கூட எழும்புகிறது. அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளை ‘என் கவுண்ட்டர்’ செய்ததை, பல தரப்பு மக்களும் ஆதரித்ததை, நாம் ஊடகங்கள் வாயிலாக கண்டபோது, இதை உணர முடிந்தது. இதற்கு காரணம் பெண்கள் நலச் சட்டங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு தான்!. பெண்கள் எல்லா வகையிலும் உரிமைகள் பெற்றுள்ளனர். பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது, குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை, கல்வி உரிமை ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் பெண்களின் சமூக மதிப்பு. ஆம்! அத்தனையையும் உணர்வு பூர்வமாக பெண்கள் நுகரத் தொடங்கி விட்டார்கள்! ஆண்களுக்கும் பெண்களுக்கான சம உரிமையை , 1979-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பொது விளக்க உடன்பாட்டை நிறைவேற்றியது. இதில் மகளிர் மன நிலை ஏதாயிருப்பினும், ஆண்-பெண் சமநிலை என்ற கோட்பாட்டினை ஒட்டியும், மனித உரிமைகள் மற்றும் குடிமை, பண்பாடு, சமூகம், பொருளியல், அரசியல், அடிப்படை உரிமைகளை கொண்டு பாவிக்கும் மதிப்புரிமை எந்த ஒரு உரிமையும் குறைக்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. பெண்கள் அடிமையாய் இருந்த நிலையில் இருந்து மீண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க அங்கமாக மாறி வருவதை யாரும் மறுக்க இயலாது. விடுதலைக்கு முன் இருந்த பெண்களின் நிலையுடன் ஒப்பிடும் போது, தற்கால பெண்களின் சமூக பொருளாதார நிலையிலும், குடும்ப உறவிலும் அவர்களது சமூக மதிப்பு உயர்ந்து கொண்டே தான் வருகிறது! பெண்மையைப் போற்றுவோம் ; பெண்கள் நலன் காப்போம்!

No comments:

Popular Posts