Thursday, 2 January 2020

தோல்விக்குப் பயந்தால் சுகமில்லை உலகில்...!


தோல்விக்குப் பயந்தால் சுகமில்லை உலகில்...! பேராசிரியர் மா. ராமச்சந்திரன். தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாமல் நமது நாட்டில் நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காதல் தோல்வி, வணிகத்தோல்வி, வாழ்க்கைத்தோல்வி, தேர்வுத்தோல்வி போன்ற தோல்விகள் இதில் அடங்கும். இவர்களில் பெரும்பாலானோர் இளையோர் என்பது வேதனைக்குரியது. சிறிய தோல்விகளைக்கூட எதிர்கொள்ள முடியாத மனநிலையைத்தான் இத்தகைய தவறான முடிவுகள் காட்டுகின்றன.

தற்கொலைத்தான் தோல்விக்குத் தீர்வு என்றால் உலகில் ஒருவர் கூட உயிர்வாழ முடியாது. அதேபோல் தலைமறைவுதான் தீர்வு என்று நினைத்தால் ஊரில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். ஏனெனில் எல்லோருடைய வாழ்விலும் தோல்வி இருக்கத்தான் செய்யும். இவ்வுலகில் தோல்வியை சந்திக்காதவர் யார்?

‘உயிரிழந்த தன் மகனைப் பிழைக்கச் செய்யவேண்டும்’ என்று புத்தரிடம் வேண்டுகிறாள் ஒரு தாய். இறப்பு இல்லாத வீட்டிலே போய் கடுகு வாங்கிவருமாறு அந்தப் பெண்ணை அனுப்பினார் புத்தர். ஊரெங்கும் அலைந்த அப்பெண் வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். ஏனெனில் எல்லா வீட்டிலும் இறப்பு நிகழ்ந்திருந்தது. இப்படி, ‘இறப்பு என்பது எல்லோர் வீட்டிலும் உள்ளது. இறப்பு இல்லாத வீடில்லை என்பதை அவளுக்குப் புரிய வைத்தார் புத்தர். தோல்வியும் இறப்பு போன்றதுதான். எல்லோரிடமும் தோல்வி உள்ளது. தோல்வியை சந்திக்காமல் யாரும் வாழ்ந்ததில்லை; வாழப் போவதுமில்லை. இதுதான் உண்மை.

ஒருவருடைய வெற்றிதான் நம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர அவருடைய தோல்விகள் நமக்குத் தெரிவதில்லை. இதனால்தான் ஒருவரிடம் தோல்விகளே இல்லாததுபோல் நாம் நினைத்துக் கொள்கிறோம். எதையும் தயங்காது எதிர்கொள்ளும் துணிச்சல் மனம் கொண்டோர் தோல்வியைத் துச்சமாக நினைத்து தொடர் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதனால் வெற்றியும் பெறுகின்றனர். எட்டாம் வகுப்புத் தேர்வில் இடறி வீழ்ந்தவன் ஏற்றமிகு எழுத்தாளன் ஆகியுள்ளான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறியவன் பின்னாளில் பெயர் பெற்ற பேராசிரியராகியுள்ளான். பள்ளிப் படிப்பை கண்டு பயந்து ஒதுங்கியவன் பணம் சம்பாதித்துக் கோடீஸ்வரன் ஆகியுள்ளான். காதலில் தோல்வி அடைந்தும் மனம் தளராதவன் மாபெரும் கவிஞனாகியுள்ளான். வியாபாரத்தில் ஒருமுறை முதலீட்டை இழந்தவன் மறுமுறை மாபெரும் லாபம் சம்பாதித்துள்ளான். இப்படி, படிப்பிலும் பிறவற்றிலும் கோட்டைவிட்டவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறியுள்ளனர். ‘தோற்றவன் எப்போதுமே தோற்றவனாக இருக்க முடியாது’ என்ற தாரக மந்திரம்தான் இத்தகைய வெற்றிக்கு காரணமாகும்.

கைதட்டி ஆரவாரித்து வெற்றிபெறும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் கிரிக்கெட் அணிகூடத் தோற்றுத்தான் போகிறது. அதற்காக அந்த அணி அடுத்த போட்டியில் பங்கேற்காமல் இருப்பதில்லை. ‘ஏன் தோற்றோம்?’ என்று தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கேற்ற மாற்றங்களுடன் அடுத்த போட்டியில் வெற்றியும் பெறுகிறது. அதனைப் போன்றே ஒருமுறை படுதோல்வி கண்ட அரசியல் கட்சி அடுத்தமுறை அமோக வெற்றி பெறுகிறது. இந்த அணுகுமுறை விளையாட்டு, அரசியலுக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் எல்லா வகையான போட்டிக்கும் பொறுந்தும். தோல்வியை கண்டு துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம். சாய்ந்தோம் என்று ஓய்ந்திராமல் உறுதியாய் உழைக்கும் திறனிருந்தால் தோல்வி மறைந்து வெற்றிக்கனி நிச்சயம் கிடைக்கும்.

‘தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ மட்டுமல்ல; வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும் கூட. தோல்வி என்னும் ஆசானிடம் படிக்கும் பாடம்தான் வெற்றிக்கு எளிதாக இட்டுச் செல்கிறது. வெற்றியைத் தாங்கிக் கொள்வது எளிது. தோல்வியைத் தாங்கிக் கொள்வது கடினம். ஏனெனில் வெற்றியில் பெருமிதம் இருக்கிறது. தோல்வியில் ஏளனம் தொனிக்கிறது. இந்த ஏளனத்தைத் தாங்கும் வீரம் மனிதனுக்கு இருக்கவேண்டும். இதனை உணர்ந்துதான் நம்முன்னோர், ‘வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு’ என்றனர். வெற்றி பெற்றவன் வீரன். தோல்வியுற்றவன் எப்படி வீரனாவான்? உண்மையில் தோல்வியைத் தாங்குவதற்குத்தான் வீரம் வேண்டும். அந்த வீரம் இருந்தால்தான் தடைகளைத் தாண்டி வெற்றிபெற முடியும். ‘விழுவது எழுவதற்காகத்தான்’ என்ற வைராக்கியம் கொண்டோர்தான் சாதிக்க முடியும். அத்தகைய வீரமும் வைராக்கியமும் இல்லாக் கோழைகள்தான் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அல்லது இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எங்கேயும் ஓடி ஒளிந்துகொள்ள நினைக்கின்றனர். இன்னும் சிலர் போதைக்கு அடிமையாகி அழிந்து போகின்றனர். எதனையும் தொடர்ந்து முயற்சிக்கும் துணிவும், வலிமையும் இல்லாதவர்கள் தாம் தோல்வியைக்கண்டு மனம் வெம்பி போகிறார்கள்.

எப்போதும் வென்று கொண்டிருப்பவர் என்று எவருமில்லை. சில நேரங்களில் இடர்கள் ஏற்படத்தான் செய்யும். யானைக்கும் அடி சறுக்கத்தானே செய்யும்? தோல்வி நிலையானது அல்ல. தோல்வி நிலையானது என்று நினைப்பவர்கள் வாழ்வதற்கு லாயக்கற்றவர்கள். இதைத்தான்,“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” என்று திரைப்படப்பாடல் உணர்த்தும். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்து வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய காந்தியடிகள் நீதிமன்றத்தில் வாதாட முடியாமல் நடுக்குற்றுப்போகிறார். அதனால் தம்மிடம் வந்த முதல் வழக்கையே விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. அந்த காந்தியடிகள்தான் பின்னாளில் ஆங்கிலப் பேரரசை எதிர்த்து, அகிம்சைப் போர் நடத்தும் ஆன்ம வீரராக மாறுகிறார். தான் எடுத்த முதல் வழக்கில் எதிர்கொண்ட தோல்வியிலும், அவமானத்திலும் முடங்கிப் போகாமல் தன்னை தயார்படுத்திக் கொண்ட வளர்ச்சியால்தான் காந்தியடிகள் தேசப்பிதாவானார் என்பது சரித்திரம்.

சரி! தோல்வி அடைந்தவர்கள் ஏன் விரக்தி அடைகிறார்கள்? எதற்காக விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். தோல்வி பற்றிய சரியான புரிதல் இல்லாமையே அதற்கு காரணம். வெற்றியை பெருமைப்படுத்திப்பரப்புவது போல் தோல்வியை துச்சமாக பார்க்கும் மனநிலை இங்கு பரப்பப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியின் ரகசியம், வெற்றிப் படிக்கட்டு, வெற்றிக்கு வழி, வெற்றிபெறுவது எப்படி? என்றெல்லாம் வீதிக்கு வீதி பயிலரங்கம் நடத்திப் பணம் சம்பாதிக்கிறோமே தவிர, தோல்வியைச் சந்திக்கும் மனநிலையை உருவாக்குவதில்லை. தோல்வியில் இருந்து மீள்வது எப்படி? என்று பாடம் நடத்துவதில்லை. இப்படிப்பட்ட மேடைகளில் பேசுவோரெல்லாம் தாங்கள் பெற்ற வெற்றியைப் பற்றி பேசுகிறார்களே தவிர, தமக்கு ஏற்பட்ட தோல்விகளை பற்றி பேசுவதில்லை. ஒரு கதை பிரசுரமாவதற்கு எத்தனை கதைகள் குப்பைக்கூடையில் மறைந்தன என்று எந்த எழுத்தாளனும் சொல்வதில்லை. உச்சத்தில் இருக்கும் உயர் அதிகாரி தான் சந்தித்த இடர்களை வெளிப்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு இழுக்கு என்று நினைக்கிறார்கள்.

உயர் நிலையில் இருப்போரெல்லாம் தங்களுடைய பிம்பம் (இமேஜ்) கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தங்களின் தோல்வியை மறைத்துவிடுகிறார்கள். வெளிச்சத்தை மட்டும் காட்டிவிட்டு இருட்டை மறைத்துவிடுகிறார்கள். இதை கேட்டுக்கொண்டிருப்பவர்கள் சிறு தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏதோ வெளிச்சம் மட்டும்தான் வாழ்க்கை என்று மதி மயங்கிப்போகிறார்கள். இருளும் ஒளியும் கொண்டதுதான் வாழ்க்கை என்பது அவர்களுக்கு புரியாமல், ஏமாற்றம் வரும்போது நிலைமாறி, தற்கொலை போன்ற அவல முடிவுக்குப்போகிறார்கள். இத்தகைய அவல நிலை மாறவேண்டுமானால், ‘தோல்வி அவமானமல்ல; அது ஒரு படிப்பினை. இன்னொரு வழியைக் காட்டும் கைகாட்டி’ என்று புரிந்து கொண்டால் இந்த அவலநிலை வராது.

தோல்விக்கு பயந்தால் வாழ்க்கையில் அடுத்து வரும் வசந்தத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். இதனை உணர்ந்து, தோல்வியை எதிர்கொள்ளப் பழகிட வேண்டும். மாளப்பிறந்தவரில்லை நாம்; வாழப்பிறந்தவர் நாம் என்ற புதிய நம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்ந்தால் என்றும் இன்பமே!

No comments:

Popular Posts